Tuesday, 28 February 2017

பள்ளி கால குற்றங்கள்.. (School day crimes)

காம்பஸ் ஓவியம்

கணக்கு வாத்தியார்
சூத்திரம் கேட்டதும்
வாய் உளறியதில்
முதுகு பழுத்தது

காம்பஸ் ஓவியம்
வரைந்தேன் நானும்
அவர் ஆசையாய் வைத்திருந்த
யமஹா இருக்கையிலே

முற்பகல் செய்யின்
பிற்பகல் விலையுமாம்
என்னுடைய வாகனம்
கிறுக்கல்களுடன் இன்று





# காக்கும் தெய்வம்
முனீஸ்வரன் 
கோவிலுக்கு
ஒடச்ச தேங்கா
வீண் போகல

முஸ்தபா 
ஒடம்புல எறங்கி 
தரிசனம் தந்தான்
எக்ஸாம் ஹாலுல




ஓவியம் ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம் தான் பார்த்து வரைவதும் இயல்பாய் வந்தது பார்த்து ஓவியம் நானும் வரைகையில் வகுப்பு ஆசிரியை எட்டி பார்த்ததில் சிக்கல் உதித்தது விக்கல் வந்தது ஓவியத்தில் பிசிறு இல்லை தந்தை போலவே ஒப்பம் ஓவியம் பாராட்டு விழா பிரின்சிபால் அறையிலே


உடற்பயிற்சி
ஓவியம் வகுப்பு
மட்டுமல்ல
ஆங்கிலமும் 
அறிவியலும் கூட
உற்சாகம் தான்
ஆசிரியர் அன்று
விடுப்பு என்றால்.






Monday, 27 February 2017

பத்திரம்

பழைய வீட்டு
பத்திரம் தேடிக்
கிடக்கையில்
கண்ணில் பட்டது
பள்ளிப் புகைப்படம்.
பத்திரமாக தான்
வைத்திருந்தது
பாதியில் எங்கோ
தொலைந்து போனது.
தலை நரைத்தபின்
கிடைக்க பெற்றதில்
மனம் நிறைந்தது
முகம் மலர்ந்தது
பழைய நினைவுகள்
கதவை தட்ட
ஒவ்வொரு பெயரையும்
ஞாபகம் எட்ட
பள்ளி வாசனை
பரவிக் கிடக்க
இரவும் கடந்து
விடியல் வந்தது
பத்திரமாய் இதை
எடுத்தும் வைத்து
தேடிய பத்திரம்
மறந்தும் போனது.


Thursday, 23 February 2017

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும்
பள்ளிக்கு நடந்தே சென்று
பாடம் எடுத்த கதையை 
பல முறை சொல்லிருக்கிறார்

மனக்கணக்கும் விடுகதையும்
மண்டிக்கிடக்கும் அவருள்ளே.

பொழுது சாய்ந்தாலே
திண்ணை நிரம்பும்
அவர் பேசிக் கேட்க

அனுபவங்கள் கட்டவிழ்ப்பார்
அறநெறிகள் கதைவழி சொல்வார்
ஆன்மீகமும் இடையிலே புகுத்துவார்

வள்ளுவனையும் அவ்வையையும்
உதாரணத்திற்கு உடனழைப்பார்
பழமொழிகளை நயமாக
பேச்சிடையே புகுத்திடுவார்.

கையில் கிடைக்கும்
நான்கணா எட்டணாவிற்கு
குருவி ரொட்டி வேண்டாம்
குருவி போல் சேமி என்பார்.
ஓட்டைக் காலணாவின்
வரலாற்றை எடுத்துச் சொல்வார்.

தினமணி அவர்
தினமும் தொலையுமிடம்.
நூலகம் வாரமிருமுறை
எண்பத்தைந்திலும்
செய்திகள் படிக்க அவருக்கு
மூக்குக் கண்ணாடி
தேவைப்படவில்லை.

பெயர்த்தியை வரச்சொல்லி
செய்தித்தாள் கையில் தந்து
உரக்க வாசிக்கச் சொல்லி
சாய்வு நாற்காலியில்
கண்மூடிக் கிடப்பார்

கலைமகள் வேண்டாமென
கைத்தறியில் அமர்ந்தோருக்கு
கரும்பலகை கையில் தந்து
பெயரெழுத சொல்லித் தருவார்.

"ட"னா வின் நீளத்தையும்,
ஒற்றைக்கொம்பின் உயரத்தையும்,
ஒற்றுப்புள்ளியின் நேர்த்தியையும்,
ழகரத்தின் ஓசையையும்,
கவனமாய் பார்க்கச் சொல்வார்.

எப்.எம் கள் முளைக்க
ஆரப்பித்த காலத்தில்
ஆல் இந்தியா ரேடியோ
சென்னை அலைவரிசை காலைமலரில்
அவர் பொழுதுகள் விடிந்தன.
சரோஜ் நாராயணசாமியும், தென்கச்சி சாமியும்,
இவரின் முகம் பாரா நண்பர்கள்.

திருவிளையாடலும் திருவருட்செல்வரும்
கர்ணனும் கட்டபொம்மனும்
வாடகை கேசட்
வாங்கிவரச் சொல்வார்.

சிவாஜியின் நடிப்பை,
கண்ணதாசன் வரிகளை,
டி.எம்.எஸ் குரலினை,
எம்.எஸ்.வி இசையினை,
எல்லோரிடமும் கூறினாலும்
ரகசியமாய் பத்மினியின் நடனத்தில்
தன்னையே தொலைத்தவர்.

அம்மன் கோவில் திருவிழாவிற்கு
கூத்து கட்டும் கலைஞர்கள்
ஒத்திகை பார்ப்பதெல்லாம்
இவர் வீட்டு புறக்கடையில் தான்.

மார்கழி மாத பிரசங்கங்களில்
கதை சொல்லி மகிழ்விப்பார்.

ஆட்டோக்கள் அதிகரித்த காலத்திலும்
ரிக்‌ஷா வரதனுடனான
இவரது சிநேகம் மாறவில்லை

அவர் நிலத்தில்
விழுந்த விதைகளுக்கு
அறிவு நீர் ஊற்றினார்.
விளைந்தவையெல்லாம்
விருட்சங்களாக ஊரெங்கும்






Monday, 20 February 2017

யதார்த்தம்

டிரம்ப்பின் வியூகங்கள்
மோடியின் திட்டங்கள்
கோல்டன் பே ஆட்டங்கள்
நாற்காலிச் சண்டைகள்
என அனைவருக்கும்
கூச்சல் குழப்பங்கள்
ஆயிரம் இருப்பினும்
தேன்மொழியின் குழப்பமோ
என்றுமே ஒன்றுதான்
அடுத்த வேலைக்கு
என்ன சமைப்பதென்று.



Sunday, 12 February 2017

பூக்காரி

அவளிடம் தினமும் இருமுழம்
மல்லிகை வாங்கினான்.
காதலிக்காய் இல்லை
மனைவி மக்களும் இல்லை
அக்காள் தங்கை இல்லை
வீட்டில் கடவுளின் படங்களும் இல்லை
இருந்தும் தினமும் அவளிடம்
மல்லிகை வாங்கினான்.
அவளின் சுருக்கங்களுக்கிடையே
பூக்கும் முகத்திற்காய்
அவளின் பொக்கைவாயில்
மலரும் சிரிப்பிற்காய்,
அனைத்திற்கும் மேல் இவன் தாய்
செம்பகமும் பூக்காரி என்பதனால்
அவளிடம் தினமும் இருமுழம்
மல்லிகை வாங்கினான்.


Friday, 10 February 2017

மெலினா

முகநூல் நட்பு Bulbul Esabella வின் சமீபத்திய கட்டுரை ஒன்றால் இன்று தான் இப்படத்தைப் பார்த்தேன்.. எளிதாக ஒருவரை பற்றி கிசு கிசுத்து விட்டு, அவரின் தூக்கங்களை களவாடி நாம் நிம்மதியாய் தூங்கிவிடுவோம்.. உண்மையை அறியாது பகிரப்படும் (பரப்பப்படும்) எந்த ஒரு செய்தியும் அது தொடபுடையோருக்கு எங்கோ ஏதோ ஒரு பாதிப்பினை நிச்சயம் ஏற்படுத்தும். பள்ளி, கல்லூரிகளில் கிண்டல் செய்வதும் கிசு கிசுப்பதும் சாதா(ரண)மாய் நிகழும் ஒன்று. அதிலும் அநேக / அனைத்து கிசு கிசுக்களின் கருவும் ஒன்றாகவே இருக்கும். பாதிக்கப்படுவதும் பெண்ணாகவே இருக்கும். மெலினா, இவளோ அசாத்திய தைரியமானவள். சுட்டெரிக்கும் பார்வைகள், செவிகேட்கா வார்த்தைகள், வசைமொழிகள், வன்புணர் உடல் மொழிகள், அனைத்தும் அனுபவித்தும், உயிர்வலியில் துடித்தும் உயிர்விடாது இருக்கிறாள். எத்தனையோ மெலினாக்கள் மெல்லிய மனமுடையவர்கள், மனமுடைந்து கயிற்றுக்கோ, விஷத்திற்க்கோ இரையாகிறார்கள். கேவளம் கிசு கிசுவும் வதந்தியுமா உயிர்குடிப்பது? கிசு கிசுக்கும் ஒவ்வொருவரும் (நான் உட்பட) வெட்க வேண்டிய விஷயம். நிச்சயமாய் மெலினா அனைவருக்கும் ஒரு பாடம்.
மெய்மை அற்றதை
மெய்ப்பொருள் காணாது
மெய்க்கொள்ள பகிர்ந்து
மெய்ப்பிக்க கதை கட்டி
மெய்மறக்கும் சமூகமே
மெலினாவைப் படித்து
மெய்ஞ்ஞானம் பெறுக


சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...