Tuesday 27 September 2016

ஈரம்




                        "டேய் பாலா... அவிங்க கிட்ட காசில்லை... என் கணக்குல எழுதிக்கோ" சொல்லிக்கினே பரோட்டாவை கல்லில் போட்டு எடுத்துட்டு இருந்தேன் நான். "ஓட்ட கொடத்துல தண்ணி மொண்டுனு வூட்டுக்கு வந்து பாத்தா வெறும் கொடம் தான் இருக்குமாம்.. இப்டியே செஞ்சிக்கினு இரு.. மாசம் பொறந்து சம்பளம் கேட்டனா, போற வரவன் துண்டு பூட்டான்னு அண்ணாச்சியே சொல்லுவாரு" பாலா உதாரணத்தோட உபதேசம் பண்றதுல கில்லி. நான் பாண்டி. மதுர பக்கத்தால சேடப்பட்டி தான் பொறந்து வளந்ததெல்லாம். "நீ பெரிய நடிகன்டானு, கூட கெடக்கற பயலுவலாம் உசுப்பேத்திவிட்டு மெட்ராஸுக்கு கெளப்பி விட்டானுவ. நடயா நடந்து, சோறு தண்ணி இல்லாம, கம்பேனி கம்பேனியா ஏறி எறங்கி கடைசில, ஊருக்கும் திரும்ப போக வழியில்லாம, அண்ணாச்சி கடைல எடுபுடியா சேந்து இப்ப நாலு வருஷம் ஓடிப்போச்சு. பரோட்டா மாஸ்டர் பண்டினா கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் சுத்தி இப்ப நாலுபேத்துக்கு என்னய தெரியும்.
                     எங்க ஊருக்கு போற எல்லா பஸ்சும் இங்கேருந்துதான் போகும். "இந்த நாலு வருசத்துல போனத விட அதிகமா, இந்த நாலு மாசத்துல ஊருக்கு போயி வந்துருக்கேன். எல்லாத்துக்கும் அந்த பாழா போன நெஞ்சு வலி தான் காரணம். எங்கப்பா செத்தப்பவே ஆரமிச்சதா இருக்கும். இருந்தாலும் இப்ப தான் டாக்டரு மருந்துனு போகுது. மெட்ராஸ் வந்துருனா, அதுக்கு ஒத்துவராம ஊறவுட்டு வரமாட்டேன்னு முரண்டு புடிக்குது என் ஆத்தா. அங்க அது ஒத்தையில கெடக்கறதும் மனசு கேட்கல, இங்கேருந்து ஒரேடியா போகவும் மனசு வரல. எல்லாத்துக்கும் மேல கடேசியா டாக்டர் சொன்னது வேற அடுப்புல மூட்டன நெருப்பாட்டம் நெஞ்சில பொகஞ்சிட்டு கெடக்கு. ஏதோ ஒரு ஆபரேஷனாம். செஞ்சிபுட்டா ஆத்தா இன்னும் நாலஞ்சி தீபாவளி பாக்கும், இல்லேன்னா, இதான் கடேசி தீபாவளியாம். சுளுவா சொல்லிப்புட்டாரு, ஒரு நாலு லட்சம் இருந்தா போதும்னு. அது கழுத்துல காதுல கெடக்கறத வித்தா கூட ஒருவாய்க்கு மேல தேறாது. அண்ணாச்சி கிட்டயும் முன்பணமா ஒரு அம்பதாயிரத்துக்கு மேல கெடைக்காது. எப்படி பாத்தாலும் ரெண்ருவா துண்டு விழும்," மனசு சொந்த பிரச்சனைங்கள ரெண்டு நிமிஷம் நெனைக்கறதுக்குள்ள, உள்ள இருந்து ஒரு சத்தம், "மாஸ்டர் டேபிள்க்கு 2 முட்ட தோச, 4 ஆம்லேட், ரெண்டு கலக்கி…."
                    வழக்கமா கடைய தொறந்து மூடற வேலை முருகேசனோடது. ஆனா அவன் என்னைக்கு லாம் லேட்டா வரணும்னு முடிவுபன்றானோ, அப்பலாம் எதனா காரணத்த சொல்லி, என் கைல சாவிய திணிச்சிருவான். “சித்தப்பா வந்துருக்காரு, பெரியப்பா மையன் இன்டெர்வியூ, சின்ன தாத்தா கண்ணுல பூ விழுந்துருச்சி, பெரியம்மா பேரன் காதுகுத்துக்கு துணி எடுக்கணும், ஊர்ல பக்கத்துக்கு ஊட்டு அக்கா புருஷன் துபாய் போறாருனு” தினுசு தினுசா காரணம் சொல்லுவான். அன்னைக்கும் அப்டி தான் எதயோ சொல்லிபுட்டு சாவிய குடுத்துட்டு சந்தோசமா கிளம்பீட்டான். "இப்டியே அவன் சாவி குடுத்துட்டு சொல்ற கதைக்கெல்லாம் பொம்மையாட்டம் தலையாட்டிட்டே கெட. அவன் உறுப்புடியா செய்ற ஒரே வேலையையும் உன் தலைல கட்டீட்டு சம்பளத்த மட்டும் வாங்கீட்டு போவான்" பாலா அவன் பாஷைல குட் நைட் சொல்லீட்டு போனான்.
                       அடுத்தநாள் காலைல கடைய தொறக்க போனா வாசல்ல யாரோ படுத்துட்டு இருந்தாங்க. நம்ம நாட்டுல கட வாசல்லயும் ஃபிளாட்பாரத்துலயும் படுத்துக் கெடக்கறது ஒன்னும் புதுசு கெடயாது. கூறுகெட்ட அரசியால, கூரைகூட இல்லாதவங்க அதிகம். படுத்துக்கெடந்த பெருச பாத்தா ஃபிளாட்பாரத்துக்கு புதுசு போல. பேண்ட் சட்டையெல்லாம் பாத்தா அப்படி தான் இருந்துச்சி. ஒன்னு மயக்கமா இருக்கனும், இல்ல போதையா இருக்கனும். பின்கோடுக்கு நாலு கடைய தொறக்கறவனுங்க, குடிச்சிப்புட்டு கடேசியா எங்கலாம் விழுந்து கெடப்பாங்கன்னு யோசிக்கறதேகெடயாது. கைலி விலகினது கூட தெரியாம, பாக்கறவங்க முகம் சுளிக்கற மாதிரி விழுந்து கெடக்கறவங்கள பத்தி, கோட்டைக்கு என்ன கவல. ஆனா இவர பாத்தா சாராயத்தால சாஞ்சமாதிரி தெரியல. அசந்து தூங்கறத பாத்தா, எழுப்பவும் கலக்கமாதான் இருந்துச்சு. ஆனா பொலப்ப பாக்கலேனா அண்ணாச்சி வேற வைவாரு. "அய்யா... அய்யா பெரியவரே... கடய தொறக்கனும்.. கொஞ்சம் எந்திருங்க" என் கொரல கேட்டு முழிச்சவரு, கொழப்பமா பாத்தாரு. தடுமாற்றத்தோட எழுந்து, தலமாட்டுல கெடந்த பைய்ய எடுத்துட்டு, அங்கிட்டும் இங்கிட்டும் பாத்துட்டு நடக்க ஆரம்பிச்சுட்டாரு.
                      அன்னைக்கு ராத்திரி வேல முடிஞ்சி வீட்டுக்கு போற வழில, ஒரு ஷட்டர்போட்ட கடை முன்னாடி, நான் காலைல பாத்த அதே பெருசு. மனசு அந்த எடத்துல டகார்னு ப்ரேக்க போட்டுச்சு. அவரு பக்கத்தால போயி "ஊருக்கு ஏதும் புதுசா? வழிய மறந்துட்டீங்களா?" கேட்டேன். பதில் ஏதும் இல்ல. "பணத்த பறிகுடுத்துட்டீங்களா? திரும்ப ஊருக்குபோவ காசு வேணுமா?" அது அவரு காதுல விழுந்தா மாதிரியே தெரியல. "பெத்த புள்ளைங்க ஏதும் வெரட்டி விட்டுடாய்ங்களா?" கேட்டுமுடிக்கயிலேயே பத்துமணி கரெண்டுக்கு வாய்க்கால போற தண்ணியாட்டம் கண்ணு ரெண்டும் அழுது காரணத்த சொல்லீருச்சு.
                      சமாதான சங்கதியெல்லாம் காதுக்கு எட்டுச்சா தெரியல. ஆனா கடேசியா நான் சொன்னது மட்டும் விழுந்துச்சுனு புரிஞ்சிது. விட்டுட்டு போவ மனசு கேக்காம "உங்களுக்கு பிரச்சன இல்லேன்னா இன்னைக்கு ராத்திரி என் ரூமுக்கு வந்து தங்குங்க. உங்களுக்கு எங்க போனும்னு தோணுதோ நாளைக்கு கிளம்பி போங்கனு சொல்லி, வண்டில ஏற சொன்னேன். அப்டியே சாப்டீங்களானு கேட்டேன்." அவரோட அமைதில சாப்படலன்னு புரிஞ்சுது. போற வழில, செல்வி அக்கா கடைல 4 இட்லி வாங்கீட்டு போனேன். ரூமுக்கு போனதும் "ஐயா.. எதயும் யோசிக்காதீங்க. மொதல்ல சாப்டுங்க. சாப்டு நல்லா தூங்குங்க. நாளைக்கு பேசிக்கலாம்னு சொல்லீட்டே இருக்கும்போது எங்க ஊர்ல இருந்து போன் வந்துச்சு. என் சித்தி மவன் சண்முகம் தான் கூப்டுருந்தான். அவன் ஊருக்குள்ளேயே ஒரு டிரைவேல்ஸ் கம்பேனிக்கு வண்டி ஓட்டிட்டு இருக்கான். அத்தா ஆபரேஷனுக்கு பணம் ரெடியானு கேக்க கூப்டுருந்தான். இல்லடாதம்பி நானும் நாலு பக்கம் கேட்டுட்டு தான் இருக்கேன். அவசரத்துக்கு அஞ்சு பத்துனா குடுக்க ஆள் இருக்கு. ஆனா ஒரேடியா ரெண்டு லட்சம்னா, என்ன நம்பி யார்ரா குடுப்பா? எப்டியாச்சம் பொரட்டீரலாம்னு நெனச்சாலும், எப்படினு தெரியல. ஆனா ஒன்னுடா, தலைய அடமானம் வெச்சாச்சாம் அதுக்கு ஆபரேஷனை பண்ணிப்புடனும்னு பேசிமுடிச்சி வெச்சிட்டு பாத்தா, அந்த பெருசு சாப்டு நல்லா தூங்கீருச்சு. நானும் அப்டியே யோசனைல மூழுகீட்டே படுத்துட்டேன்.
                      அடுத்தநாள் வேற வெல்லணையா போனும், கடைய தொறக்க. எழுந்து ரெடியாய்ட்டு பாத்தா, அவரு வேற நல்லா தூங்கீட்டு இருந்தாரு. எழுப்ப மனசு இல்ல. பாத்தேன். சட்டபைல ஒரு ஏழுநூறு சில்லறை இருந்துச்சு. அதுல ஒரு ஆறுநூறுவாய அவரு பக்கத்துல வெச்சி, அதுக்கு மேல ஒரு பேப்பர்ல, நான் வர ராத்திரி ஆகும். இருக்கறதுனா இருங்க. இல்லேன்னா, உங்க செலவுக்கு என்னால முடிஞ்சத வெச்சிருக்கன். எடுத்துக்கோங்க.. போறப்ப கதவை பூட்டிட்டு வெளில இருக்கற ரோஜா தொட்டில சாவிய போட்டுருங்கனு எழுதி வெச்சிட்டு கடைக்கு வந்துட்டேன்.
                       வழக்கம்போல இன்னோருநாள். கல்பின்னாடி நின்னுட்டா வேற எதுக்குமே நேரமில்லாம பொழுது வேகமா போயிரும். மதியம் ஒரு மூனுமணிக்கா சாப்ட கைவெக்கும்போதுதான் அந்த பெருசு ஞாபகம் வந்துச்சு. என்ன செய்யுதோனு நெனச்சிகிட்டேன். ராத்திரி வீட்டுக்கு போறப்ப எதுக்கும் இருக்கட்டும்னு எங்க கடைல இருந்தே நாலு புரோட்டாவை கட்டி எடுத்துக்கிட்டேன். பெருசு இருக்கனும்னு நெனச்சிட்டு எடுத்தனா, இருந்தான்னு நெனச்சிட்டு எடுத்தனா தெரியல. ஆனா கட்டி எடுத்துக்கிட்டேன்.
                      கடையவிட்டு பொறப்படும்போது இடி இடிச்சிட்டும், மின்னீட்டும் இருந்துச்சு வானம். மழை வரதுக்குள்ள வீட்டுக்கு போய்டனும்னு நெனச்சேன் நான். நெனச்சா மாதிரியே மழைக்கு முன்னாடி வந்துட்டேன். வீடு பூட்டீருந்துச்சு. ரோஜா தொட்டில சாவியும் இருந்துச்சி. கதவ தொறந்து போனா, நான் காலைல வெச்சிட்டு போன காசு அப்டியே கெடந்துச்சு. அந்த துண்டு சீட்டும். அந்த துண்டு சீட்டுல கூடுதலா நாலு வரி இருந்துச்சு. பக்கத்துல இன்னொரு தாளும் இருந்துச்சு.
                       "யாருன்னே தெரியாத எனக்கு எதையுமே எதிர்பாக்காம சாப்பாடு குடுத்து, தங்க இடம் குடுத்து, செலவுக்கு பணமும் குடுத்துருக்க. உன்ன பெத்தவங்க, உன்ன ரொம்ப நல்ல வளத்துருக்காங்க. அளவுக்கு அதிகமா எல்லாமே இருந்தும் கூட நிம்மதியா சாப்பிட்டு, தூங்கி, ரொம்ப நாள் ஆச்சு. என் வீட்ல இருக்கற டைகர் க்கு பாசமா சோறு வெக்கற மருமக, எனக்கு விக்கல் வந்தா ஒரு முழுங்கு தண்ணி கூட குடுக்க மாட்டா. ஏசி ரூம்ல வராத தூக்கம், அன்னைக்கு உன் கடை வாசல்லயும், நேத்து உன் ரூம்லயும் வந்துச்சு. இந்த நிம்மதியான ஒரு வேல சாப்பாட்டுக்கும், தூக்கத்துக்கும் என் ஆஸ்தி முழுசும் குடுத்தா கூட ஈடாகாது. ஆனா பதிலுக்கு என்னால ஒன்னு செய்யமுடியும். உன் அம்மா உனக்கு திருப்பி கிடைக்க என்னால முடிஞ்சது. நீ நல்லா இருக்கணும்." அதுல எழுதீருந்துச்சு. கூடவே ரெண்டு லட்சத்துக்கு ஒரு செக் இருந்துச்சு. கையெழுத்துக்கு கீழ பேரு விஸ்வநாதன்னு படிக்கும் போது அவர் அன்போட ஈரம் என் கண்ணுலயும் பரவ, வெளியே ஊரே குளிர்ந்துபோற அளவுக்கு வானம் ஊத்திக்கிட்டு இருந்துச்சு.


Thursday 22 September 2016

கையெழுத்து

எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து என் அண்ணனுங்க என் கூட சண்டையே போட்டதில்ல. எனக்கு எதனா ஒரு சின்ன பிரச்னைனாலும் என் பெரிய அண்ணன் தான் மொதல்ல வந்து நிப்பான். நான் அழறதுக்கு முன்னாடியே காரணத்த கண்டுபுடிச்சி என்ன அழாம பாத்துப்பான். அதனாலயோ என்னவோ அப்பாவ விட அண்ணன் தான் எனக்கு உசுரு. அப்பா எலெக்ட்ரிசிட்டி போர்டு ல சீப் என்ஜினீயர் (பிளானிங்). அண்ணா சாலை ல ஆபீஸ். ரொம்ப ஸ்ட்ரெயிட் பாவர்ட். வீட்லயும் கொஞ்சம் கரார்தான். ஆனா நான் பக்கத்துல இருந்தா அப்டியே அவரு கொழந்தையா மாறீடுவார். 

பெரிய அண்ணன் தியாகு எல்.என்.டி. ல  இன்ஜினீயர். ரெண்டாவது அண்ணன் லோகு இன்ஜினீயரிங் ஒழுங்கா நாலு வருஷத்துல முடிக்காம அரியர்ஸ் வெச்சி, இப்ப கடேசியா எப்படியோ முடிச்சிட்டு வேல ஏதும் கெடைக்காம எம்.ஈ. சேந்துருக்கான். நான் ரம்யா. பி. ஈ. முடிச்சிட்டேன். கேம்பஸ்ல ப்லேஸ் ஆனேன். ஆனா பெங்களூர்ல வேலன்னால அப்பா வேணாம்னு சொல்லீட்டாரு. ஆனாலும் நான் விடாம வேல தேடீட்டே இருக்கேன். அழகான கனவு போல ஒரு வாழ்க்கை. 

எல்லாமே சுகமாதான் இருந்துச்சு அன்னைக்கு வரைக்கும். அப்பா எறந்து நான் ஒரேடியா அனாதையான நாள் அது. சாவுக்கு வந்திருந்த அம்மாவோட தம்பி சொல்லிதான் என்ன அவரு எடுத்து வளத்த விஷயமே தெரியும். அன்னைக்கு வரைக்கும் ரொம்ப உரிமையா இருந்த வீட்ல அழுது அழுது தொண்ட வறண்டு போனப்ப, ஒரு முழுங்கு தண்ணி குடிக்கற உரிமை இருக்கானு யோசிச்சு தவிச்ச நாள் அது. அப்பா எறந்த அதிர்ச்சிலதான் அம்மா சரியா பேசலன்னு மொதல்ல நெனச்சேன். ஒரு ரெண்டுவாரம் போன பெறகுதான் என்ன எடுத்து வளக்க முட்டுக்கட்டையா மொதல்ல இருந்ததே அவங்கதான்னு எங்க வீட்ல இருவத்தேழு வருஷமா வேல செய்ற பவுனு பாட்டி சொன்னாங்க. ரெண்டர வயசாம் என்ன மொதமொதல்ல ஹோம்ல இருந்து எடுத்துட்டு வரும்போது. இருவது வருஷம் கழிச்சு இப்டி ஒரு நாள் வரும்னு நான் ஒரு நாளும் நெனச்சதில்ல. 

ஒரு மனுஷனோட சாவு ஒரு குடும்பத்தயே என்கிட்ட இருந்து பறிக்கும்னு நெனைக்கல. அந்த குடும்பத்த குடுத்ததே அவருதான. அவரே எடுத்துட்டு போய்ட்டார். அழுதே ஒரு மாசம் ஓடீருச்சி. அம்மாதான் பேசலனா, அண்ணனுங்க கூட ஏதும் கண்டுக்கல. ஏதாச்சம் நானே வலுக்கட்டாயமா கேட்டா கூட பொத்தாம் பொதுவா ஒரு பதில். அவனால இந்த அளவு வெறுப்ப கக்க முடியும்னு அப்பதான் தெரிஞ்சது. எல்லாத்துக்கும் மேல இன்னொரு இடி வந்துச்சு. நாங்க இருந்த அண்ணாநகர் வீட்டயும், ஒரகடத்துல ரெண்டு கிரவுண்ட் நெலத்தயும் அப்பா என் பேர்ல எழுதீருக்கறார். வெறும் அதிர்வு பூகம்பமா மாருச்சு. 

அன்னைக்கு நான் மௌனத்த கலச்சு ரெண்டு வார்த்த பேசனேன். எனக்கு வேல கெடச்ச விஷயத்தையும், சீக்கிரமே ஒரு லேடீஸ் ஹாஸ்டல் பாத்துட்டு கெலம்பறதயும், ஒரு நாள் பாத்து பேப்பர்ஸ் ரெடினா, நீட்ன எடத்துல கையெழுத்து போடறன்னும் சொன்னேன். என் தாய்மாமன் மொகத்துல சந்தோசத்தயும், அண்ணனுங்க மொகத்துல இருந்த கலவரம் மறஞ்சதயும் பாத்தேன். அம்மாவோட மௌனத்த என் வார்த்தைகளுக்கு சம்மதம்னு நானா எடுத்துகிட்டேன். 

வேடந்தாங்கல்ல இருந்து கூண்டுக்குள்ள வந்த மாதிரி இருந்துச்சு, அந்த ரெண்டு நாள் லேடீஸ்  ஹாஸ்டல் வாழ்க்கை. ஒரு புதன் கெழம, ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு வர சொல்லீருந்தாங்க. நெறய பேப்பர்ல கையெழுத்து போட வேண்டிருந்துச்சு. ஒத்திக கூட பாக்காம வந்துட்டேன். 


எனக்கு ஆறு வயசு இருக்கும்போது அவன் டூர் செலவுக்கு குடுத்த காசுல எனக்கு மட்டும் வாங்கீட்டு வந்திருந்த டெட்டி பியர்காகவும், எல்லாரும் சாப்டு கடைசியா இருந்த ஸ்வீட்ட எனக்கு எத்தனயோதடவ விட்டுக் குடுத்ததுக்காகவும், என் முனுமுனுப்ப சங்கீதம்னு நெனச்சி என்ன மியூசிக் கிளாஸ் சேத்துவிட்டதுக்கும், எப்பவுமே நடக்கற ரிமோட் சண்டைல கடேசியா எனக்கு புடிச்ச கார்ட்டூன் சேனல் அவன் கிரிக்கெட்டுக்கு பதிலா பாத்ததுக்கும், எனக்கு புடிக்காத பயாலஜி குரூப் வேணாம்னு அப்பாகிட்ட சண்டபோட்டதுக்கும், எல்லாத்துக்கும் மேல நான் மொதல்ல அண்ணானு பேச ஆரம்பிக்கும்போது சொல்லு குட்டிமானு அண்ணன் ஒறவுனா எப்டி இருக்குனு யாரும் இல்லாத எனக்கு புரிய வெச்சதுக்காவும், நான் அவனுக்கு செய்ற ஒரே விஷயம் என் கையெழுத்து. எத்தனையோ தடவ அப்பா கையெழுத்த எனக்காக அவன் ரேங்கார்ட்ல போட்டுருக்கான். இன்னைக்கு ஒரே ஒரு தடவ அப்பாகாக அவனுக்கு என் கையெழுத்த போட்டுக் குடுத்தன் சந்தோஷமா..




சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...