Thursday 23 February 2017

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும்
பள்ளிக்கு நடந்தே சென்று
பாடம் எடுத்த கதையை 
பல முறை சொல்லிருக்கிறார்

மனக்கணக்கும் விடுகதையும்
மண்டிக்கிடக்கும் அவருள்ளே.

பொழுது சாய்ந்தாலே
திண்ணை நிரம்பும்
அவர் பேசிக் கேட்க

அனுபவங்கள் கட்டவிழ்ப்பார்
அறநெறிகள் கதைவழி சொல்வார்
ஆன்மீகமும் இடையிலே புகுத்துவார்

வள்ளுவனையும் அவ்வையையும்
உதாரணத்திற்கு உடனழைப்பார்
பழமொழிகளை நயமாக
பேச்சிடையே புகுத்திடுவார்.

கையில் கிடைக்கும்
நான்கணா எட்டணாவிற்கு
குருவி ரொட்டி வேண்டாம்
குருவி போல் சேமி என்பார்.
ஓட்டைக் காலணாவின்
வரலாற்றை எடுத்துச் சொல்வார்.

தினமணி அவர்
தினமும் தொலையுமிடம்.
நூலகம் வாரமிருமுறை
எண்பத்தைந்திலும்
செய்திகள் படிக்க அவருக்கு
மூக்குக் கண்ணாடி
தேவைப்படவில்லை.

பெயர்த்தியை வரச்சொல்லி
செய்தித்தாள் கையில் தந்து
உரக்க வாசிக்கச் சொல்லி
சாய்வு நாற்காலியில்
கண்மூடிக் கிடப்பார்

கலைமகள் வேண்டாமென
கைத்தறியில் அமர்ந்தோருக்கு
கரும்பலகை கையில் தந்து
பெயரெழுத சொல்லித் தருவார்.

"ட"னா வின் நீளத்தையும்,
ஒற்றைக்கொம்பின் உயரத்தையும்,
ஒற்றுப்புள்ளியின் நேர்த்தியையும்,
ழகரத்தின் ஓசையையும்,
கவனமாய் பார்க்கச் சொல்வார்.

எப்.எம் கள் முளைக்க
ஆரப்பித்த காலத்தில்
ஆல் இந்தியா ரேடியோ
சென்னை அலைவரிசை காலைமலரில்
அவர் பொழுதுகள் விடிந்தன.
சரோஜ் நாராயணசாமியும், தென்கச்சி சாமியும்,
இவரின் முகம் பாரா நண்பர்கள்.

திருவிளையாடலும் திருவருட்செல்வரும்
கர்ணனும் கட்டபொம்மனும்
வாடகை கேசட்
வாங்கிவரச் சொல்வார்.

சிவாஜியின் நடிப்பை,
கண்ணதாசன் வரிகளை,
டி.எம்.எஸ் குரலினை,
எம்.எஸ்.வி இசையினை,
எல்லோரிடமும் கூறினாலும்
ரகசியமாய் பத்மினியின் நடனத்தில்
தன்னையே தொலைத்தவர்.

அம்மன் கோவில் திருவிழாவிற்கு
கூத்து கட்டும் கலைஞர்கள்
ஒத்திகை பார்ப்பதெல்லாம்
இவர் வீட்டு புறக்கடையில் தான்.

மார்கழி மாத பிரசங்கங்களில்
கதை சொல்லி மகிழ்விப்பார்.

ஆட்டோக்கள் அதிகரித்த காலத்திலும்
ரிக்‌ஷா வரதனுடனான
இவரது சிநேகம் மாறவில்லை

அவர் நிலத்தில்
விழுந்த விதைகளுக்கு
அறிவு நீர் ஊற்றினார்.
விளைந்தவையெல்லாம்
விருட்சங்களாக ஊரெங்கும்






No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...