Monday 26 December 2016

மாமல்லன் தருணங்கள்

வகுப்புகளில் இருந்ததைவிட அதிகமாய் மேடைகளில் இருந்தவர்கள்நாங்கள்..   வெறும் மட்டைப் பந்து விளையாடியவர்களுக்கு வளைகோல் பந்து அறிமுகம் கொடுத்ததே பள்ளி தான். நியூட்டன் விதிகளுடன் சேர்த்து கட்டபொம்ம்மன் வசனத்தை மனப்பாடம் செய்தோம். வள்ளுவன் குறளுடன் வைரமுத்து வரிகளை மனதில் பதித்தோம். டார்வின் கோட்பாடு படித்து எங்கள் வாழ்க்கையின் கோட்பாட்டினை தேடினோம்.

வரலாறு படித்து கதை எழுத பழகினோம். வேதியல் ஆய்வுக் கூடத்தில் உப்பை பரிசோதித்து அல்ல, படிப்பவனிடம் கேட்டே கண்டுபுடித்தோம்... கரிம வேதியல் சூத்திரங்களுடன் முட்டி மோதினோம். கணினி வகுப்புகளில் கணினியில் விளையாட போட்டி போட்டோம்.

நாங்கள் கணக்கு படித்ததெல்லாம் ஸ்கோர் எண்ணியே. ஆசிரியர்களுக்கு பட்ட பெயர் வைத்து மகிழ்ந்தோம். நண்பருக்கு நிகரான கணக்குவாத்தியார். அதிகாலை அவர் டியூஷனில் சோம்பல் முறித்தோம். ஆங்கில வாத்தியார் ரோமியோ ஜூலியட் பாடம் எடுக்க. எங்கள் வகுப்பு ரோமியோக்கள் ஜூலியட்டை தேடினர்.

பள்ளி முடிந்ததும் மாலை இருட்டும் வரை விளையாட்டு பழகினோம். மாலைவிளையாடி முடித்து, வியர்வையால் நனைந்த சட்டை உலரும் வரை கதைகள் பேசினோம். மைதானத்தில் விற்கும் சிறிய சமோசாவிற்கு சண்டை போட்டோம். விடுமுறைகளில் மட்டைபந்தே கதியாய் இருந்தோம். கிடைக்கும் சந்து பொந்துகளிலெல்லாம் மட்டைப் பந்தே விளையாடினோம். உச்சி வெயிலில் வாட்டர் பாக்கெட்ல் தொண்டை நனைத்து, முகம் கழுவி மீண்டும் வெயில் வதங்கினோம்.

ரஜினி கமல், விஜய் அஜித், சச்சின் சௌரவ், பட்டிமன்றங்களை கணக்கின்றி நடத்தியவர்கள் நாங்கள். ஜுராசிக் பார்க் பார்த்து பிரமித்து. டைட்டானிக் பார்த்து வியந்து, பாபா தோல்வி என்றால் கொந்தளித்து, அவ்வை ஷண்முகிக்கு சிரித்து, படையப்பவை கொண்டாடி, வளர்ந்தோம்.

ஜெயசூர்யா மட்டையில் கூடுதல் விசைக்காக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டுள்ளது என்று புடணி பேசி வாழ்ந்தோம். அண்டர்டேக்கர் பெட்டியில் இருக்கும் பிணங்களை பற்றி கதைகள் கட்டினோம். 2000 ல் உலகம் அழியுமெனவே நம்பினோம். கிசுகிசு வின் அர்த்தமே தெரியாமல் அதிகமாய் கிசுகிசுத்தோம்.

பள்ளி சுற்றுலாவில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஊட்டியும், பெங்களூரும் நாங்கள் சென்றதால் அழகானது. வகுப்பாசிரியை, ஒரு விழாவில் பாடலை பாடிய நான்கு வருடம் மூத்தவள், பள்ளி செல்லும் வழியில் எதிர்ப்படும் வேறு பள்ளி மாணவி, என தோன்றி மறையும் வானவில் போல் அவ்வப்போது ஒரு காதல். ஒட்டுமொத்த வகுப்புமே ஒரு பெண்ணை காதலித்த சுவாரசிய கதை எங்களிடம் உண்டு.

மிதி வண்டியில் ஊரின் குறுக்கு நெடுக்கெல்லாம் சென்று வந்தோம். நண்பர்களின் பிறந்தநாளிற்கு பானிபூரி கடைகளில் விருந்திற்கு தஞ்சமடைந்தோம். பள்ளி நிர்வாகி ஒருவர் மறைவிற்கு வருந்தாது, விடுமுறை என்று குதூகலித்ததோம்.  கூடுதலாய் இரு தின விடுமுறைக்கு வருணனை வேண்டினோம்.

நண்பர்களின் பிறந்தநாளும், நண்பர்கள் வீட்டு தொலைப்பேசி எண்களும் மனப்பாடமாக மனதில் இருந்தது...

எங்கள் பள்ளி பருவங்களில் சிம்ரனும், ஜோதிகாவும் எங்களின் கனவுக்கன்னிகள். ரகுமானின் இசையில் திளைத்து வளர்ந்தோம்... சங்கரையும், மணிரத்தினத்தையும் வியந்தோம்.

விவாதங்கள், வாக்குவாதங்கள், கேலி, கிண்டல்கள், அன்றாடம்… காகிதப் போர்களும்.. சாக் பீஸ் போர்களும் அவ்வப்போது. ஒரு சொட்டு இங்க் கடன் வாங்கி இரு வகுப்பு எழுதுவோம். பள்ளி மேஜைகளில் பெயர் பதித்து வரலாற்றில் இடம் பெற முயற்சித்த்தோம்.

பகிர்ந்துண்ணுதலை காக்கை கூட்டம் மட்டுமல்ல. எங்களை பார்த்தும் கற்றுக் கொள்ளலாம்..  அநேக நாட்களில், இரு வகுப்பு முன்னரே பசி அழைத்து விடுவதால், வகுப்பின் போதே டப்பாவை காலி செய்ததும் உண்டு... டெஸ்ட் கிரிக்கெட் நடக்கும் நாட்களில் அருகிலிருக்கும் நண்பனின் வீடே உணவு இடைவேளையில் உணவுக்கு கூடம்..  சில சமயங்களில் ஆட்டத்தை தொடர்ந்து பார்க்க அரை நாள் விடுப்பும் கூட அச்சமய தேவைக்காய்.

ஏதேனும் வம்பிழுத்து, சக மாணவியரின் முணுமுணுப்பிற்கு ஆளானவர்கள் அதிகம். அவர்களை எரிச்சலுறச் செய்வது ஒரு வாடிக்கையாகவே இருந்தது. கவிதை, நாடகமென சக மாணவிகளுடன் போட்டி போட்டோம்.

எதிரணியில் சக மாணவியர் இருந்ததால் பட்டிமன்றங்கள் சூடு பிடித்தன. கட்டுரை கவிதை போட்டிகள் ஆரோக்கியமாய் இருந்தது... அழகோவியம் தீட்டும் கைகளும், பாரதியின் பாஞ்சாலி சபதத்தை கம்பீரமாய் உரைத்த நாவுகளும் எங்கள் தோழியருடையதே. மெல்லினமே பாடி மும்தாஜை தேடிய ஷாஜஹாங்கள் உண்டு.  கீர்த்தனைகள் இசைக்கும் தோழியரும் உண்டு, "கானா" பாடல் பாடும் நண்பனும் உண்டு.

எங்கள் பள்ளி விளையாட்டு விழா ஒரு நாள் உற்சவம்..  ஊரை கூட்டும் பேண்ட் முழக்கம்.. எங்கள் நிற அணிக்காக விண்ணைக் கிழிக்கும் உற்சாக குரல் எழுப்பினோம்.. எங்கள் பள்ளி உசைன் போல்டின் வெற்றிக்கு குதூகலித்ததோம்.. ஒரு முறை கராத்தே வீர சாகசத்தில் நெருப்பு ஓடை உடைக்க முயன்று கையில் தீக்காயம் அடைந்த நண்பன் பார்த்து படபடத்தோம்..

எங்கள் ஆண்டுவிழாக்கள் பத்மினி நடனமும், ஜாக்சன் நடமும் கலந்தவை.. தெனாலிராமன் கதையும், ஷேஸ்பியர் நாடகமும் அரங்கேறும்... மொழி புரியா ஹிந்தி பாடலுக்கு எங்கள் பள்ளி மின்மினிகளின் நடனத்திற்கு மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும்.

விளக்கு பூஜையை பக்தி என்று எண்ணாது, நண்பர்களின் வீடுகளில் இருந்து வரும் உணவினை பகிர்ந்துண்ணும் ஒரு உணவு திருவிழாவாவகே பார்த்தோம்.. நண்பன் வீட்டில் நவராத்திரி கொலு, இன்னொருவன் வீட்டில் பக்ரீத் பிரியாணி, வெவ்வேறு மதங்களின் பண்டிகைகளும் எங்களை மேலும் இணைந்தன.

பன்னிரெண்டாவது முடிகையில் மனது ஏதோ கனமாகவே இருந்தது. பிரிதல் என்னும் வார்த்தையின் புரிதல் கண்ணின் இமைகளை நனைத்தது.. அன்று மனதிற்கு தெரியவில்லை எல்லோரும்  உலகின் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடந்தாலும் முகநூல், வாட்சப் என உலகம் சுருங்கி நட்பு கையடக்கத்தில் காலமெல்லாம் இருக்குமென்று...

அன்றைய சந்தோஷங்கள் இன்று நினைவுகளாய்... நினைத்து பார்க்கையில் சந்தோஷம் பன்மடங்காய்...
















8 comments:

  1. நீங்களும் பயோகிராபி எழுதிரிங்க

    ReplyDelete
    Replies
    1. இது மகிழ் தருணங்களின் பதிவு.. அன்று பெய்த மழையில் மீண்டும் நனையும் முயற்சி..

      Delete
  2. Nice your biography of school days...unga friends ku potururukinga but nan command potruken unga fb page la because enakum enga school days nyabagam vandhuruchu.....

    ReplyDelete
  3. MEMORIES OF LIFE
    THAT WILL NEVER PERISHES...........
    CHEERS LOVE TEARS ...
    EVERYTHING IN A BOWL....
    WE WILL NOT FORGET WHAT WE HAD....
    UNTIL WE LEAVE THIS PLACE

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...