Thursday 6 July 2017

பிரியாணியும் பீடியும்

மாநகரின் மைய்யத்தில்
ஆடம்பரம் சொட்டும்
அதி நவீன கட்டமைப்பில்
கண்ணாடி சுவர்கள்
கண் கவர் விளக்குகள்
பளிங்கு தரை
தேக்கு மேஜைகள்
மெத்தை ஆசனங்கள்
சீராய் அடுக்கிய
தேக்கரண்டி, முள்கரண்டி.
வெள்ளாவி கண்ட
வெண் கைக்குட்டைகள்
இருந்த குளிரூட்டப்பட்ட
அறையில் தான்
ஈச்சங்குடியில்
இரண்டு ஏக்கர்
குத்தகை நிலத்தில்
சேற்றுழவுடன்
நாற்று நடவும் செய்து
ஊற்றும் வியர்வையில்
ஐந்து திங்கள் விளைந்த
பாசுமதி அரிசியுடன்
அரசனூரில்
பிரசவ வலியில்
அபாய கட்டத்தில்
கிடந்த மனைவியின்
சிகிச்சை செலவிற்காய்
பாயிடம் விற்ற
ஆட்டுக்குட்டியையும் சமைத்து
கண்ணாடி சட்டியில்
மேற்கத்திய உடையில்
கையுறை அணிந்த
தோழரால்
பரிமாறப்பட்டது
அந்த விலையுயர்
மட்டன் பிரியாணி
இன்று ஈச்சங்குடியில்
ஈரத்துணியும்
அரசனூரில்
அரசன் பீடியும்
மதிய உணவாக


விவசாயி

ஒரு மூட்டை
விதை வாங்கி
ஒரு ரூபாய்
குறைக்க வில்லை
இரு மூட்டை
உரத்திற்கு
இனாமாய் ஏதும்
கிடைக்கவில்லை
அக்கினி வாயு
வருணனெல்லாம்
அவன் தேவைக்கு
வருவதில்லை
தடையில்லா
மின்வசதி
மருதத்திற்கு
சொந்தமில்லை
விளைச்சலுக்கு உளைச்சலுக்கும்
விலை வைக்கும்
உரிமை அவன் 
பெற்றதில்லை
வியாபாரி நிர்ணயித்த
விலைக்கு கூடுதலாய்
ஒரு ரூபாய்
கொடுக்கவில்லை

Monday 3 July 2017

கோலம்

"ஒரு நாள்
கெழமைலயாச்சும்
நேரமா எந்திரிச்சு
வாசல் தெளிச்சு
ஒரு கோலம் போடறயா?"
அவளின் வசை கேட்டே
விடிந்தன இவளின்
பண்டிகை நாட்கள்.
இப்போதெல்லாம்
அனுதினம்
அரிசி மாவெடுத்து
கம்பிக்கோலங்கள் இட்டு
ஒரு நிமிடம்
மௌனமாய்
பார்த்து நினைப்பாள்,
மறைந்த அவள் தாயும்
எங்கோ இருந்து
இதை ரசிப்பாள் என


கல்யாண வீடு

புன்னகையால்
மிளிரும் முகங்கள்
முகப்பில் கொலை
தள்ளிய வாழை
சீரியல் செட்டுடன்
சிரிக்கும் பந்தல்

மூக்குப்பொடியை
நாசிக்குள் இழுத்து
ஜி.எஸ்.டி பற்றி விவாதிக்கும்
மலைச்சாமி தாத்தா

வெற்றிலையைக் கொதப்பியபடி
ராகுகாலத்திற்குள்
படையல் வெக்கனும்னு
பொலம்பலாய் அதட்டும்
பாண்டியம்மா பாட்டி

வீட்டிற்கு வந்த
சொந்தங்களுக்கும்
நட்புகளுக்கும்
தேனீர் போடச் சொல்லும்
சேதுபதி பெரியப்பா

குலதெய்வத்திற்கு உடைக்க
கூடுதலாய் ஒரு தேங்காய்
வாங்க கடைக்கு
ஒரு வாண்டை விரட்டும்
விசாலம் அத்தாச்சி

குவித்து வைத்த
மல்லிகையை
செண்பகம் சித்தி
தலைமையில்
கூட்டமாய் கட்டிக்
கொண்டிருக்கும் மகளிரணி

ஒருபுறம்
சதாசிவம் சித்தப்பாவோ
மூன்று மணி இரயிலில்
வரப்போகும் நட்புகளுக்கு
வண்டி அனுப்ப
சொல்லிக்கொண்டிருக்க

மறுபுறம்
ஆறுமுகம் அண்ணனோ
வுட்லேண்ட்ஸ் ஓட்டலுக்கு
அழைத்து கூடுதலாய்
இரண்டு அறைகள் சொல்ல

குறுக்கும் நெடுக்குமென
விரட்டி ஓடிக் கொண்டிருந்தனர்
கார்த்தி. மீனா,
கிஷோருடன் நான்கைந்து
பொண்டு பொடுசுகள்

பேருந்து நிலையம் எதிரேயும்
அண்ணா சிலை அருகேயும்
மண்டபத்தின் முகப்பிலும்
ஃபிளக்ஸ் ஏற்றிய
களைப்பில் வரும்
தம்பிமார்கள்
ராஜி, பாண்டி, பிரபா

வீட்டின் ஒரு அறையில்
ரகசியமாய் பேசி
சத்தமாய் சிரிக்கும்
நித்தியாவின் தோழிகள்
என கூட்டம்
சிரிப்பு சத்தங்களைத் தாண்டி

நான்கைந்து வீதிகளுக்கு
கேட்குமாறு
ஒலித்துக்கொண்டிருந்தது
இசைஞானி இசையில்
"நான் தேடும்
செவ்வந்திபூவிது..."

#கல்யாணவீடு


துளிகள்

லவங்கம், பட்டை
கிராம்பில் இல்லை,
லயித்து சமைக்கும்
அவள் கைகளில்
உள்ளது - மணம்.



பிரியாணியால்
நிறைந்த
இரைப்பைகள்
செரிமானத்திற்கு
வாங்கும் 
வெற்றியையில்தான்
அந்த வீட்டில்
உலை கொதிக்கிறது



இன்றைய
நிறைவான
வருமானம்,
அந்த
வரதரின் 
வரமா
தெரியாது.
- அந்தோனி
(பலூன் வியாபாரி)



முத்தென மூன்றை
நெஞ்சில் சுமந்து
வளர்த்து
முதுமையில் இன்று
மூட்டைகள் சுமக்கும்
வாழ்க்கை


மண்புகுந்த கலப்பை
மண்டியிட்டு சொன்னது
மண்ணுயிர்கள் மாண்டு
மயானமான நிலத்தில்
மாயங்கள் நிகழாதென
செயற்க்கையுடன் சேர்க்கை
அமோகத்துடன் சேர்ந்து
அழிவையும் பரிசளிக்க,
மீட்டெடுக்கும் கட்டாயத்தில்
இன்றைய விவசாயம்.



பசியிடம் 
அடிமை பட்டவளுக்கு
மூவர்ணம் விற்று 
தீர்த்தால் தான்
இன்று 
மூன்று வேலை
சுதந்திரம்





வேங்கை
நாகம்
பருந்தென
அனைத்து
உயிர்களை
விரட்டியும்
விழுங்கியும் தான்
அந்த காடு
கொடிய
மனிதர்களின்
ஊரானது.





வரி

நாளை வரை
தாங்காதென
இன்றிரவிற்குள்
எப்படியேனும்
வந்த விலைக்கு
விற்றுத் தீர்க்க
வண்டியைத் தள்ளும்
வாழைப்பழ வியாபாரி
அன்றிரவு வீடு
திரும்புகையில்
தன் மகளுக்காய்
வாங்கினார்
கூடிதல் வரி செலுத்தி
சானிடரி நேப்கின்.

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...