Monday 3 July 2017

கல்யாண வீடு

புன்னகையால்
மிளிரும் முகங்கள்
முகப்பில் கொலை
தள்ளிய வாழை
சீரியல் செட்டுடன்
சிரிக்கும் பந்தல்

மூக்குப்பொடியை
நாசிக்குள் இழுத்து
ஜி.எஸ்.டி பற்றி விவாதிக்கும்
மலைச்சாமி தாத்தா

வெற்றிலையைக் கொதப்பியபடி
ராகுகாலத்திற்குள்
படையல் வெக்கனும்னு
பொலம்பலாய் அதட்டும்
பாண்டியம்மா பாட்டி

வீட்டிற்கு வந்த
சொந்தங்களுக்கும்
நட்புகளுக்கும்
தேனீர் போடச் சொல்லும்
சேதுபதி பெரியப்பா

குலதெய்வத்திற்கு உடைக்க
கூடுதலாய் ஒரு தேங்காய்
வாங்க கடைக்கு
ஒரு வாண்டை விரட்டும்
விசாலம் அத்தாச்சி

குவித்து வைத்த
மல்லிகையை
செண்பகம் சித்தி
தலைமையில்
கூட்டமாய் கட்டிக்
கொண்டிருக்கும் மகளிரணி

ஒருபுறம்
சதாசிவம் சித்தப்பாவோ
மூன்று மணி இரயிலில்
வரப்போகும் நட்புகளுக்கு
வண்டி அனுப்ப
சொல்லிக்கொண்டிருக்க

மறுபுறம்
ஆறுமுகம் அண்ணனோ
வுட்லேண்ட்ஸ் ஓட்டலுக்கு
அழைத்து கூடுதலாய்
இரண்டு அறைகள் சொல்ல

குறுக்கும் நெடுக்குமென
விரட்டி ஓடிக் கொண்டிருந்தனர்
கார்த்தி. மீனா,
கிஷோருடன் நான்கைந்து
பொண்டு பொடுசுகள்

பேருந்து நிலையம் எதிரேயும்
அண்ணா சிலை அருகேயும்
மண்டபத்தின் முகப்பிலும்
ஃபிளக்ஸ் ஏற்றிய
களைப்பில் வரும்
தம்பிமார்கள்
ராஜி, பாண்டி, பிரபா

வீட்டின் ஒரு அறையில்
ரகசியமாய் பேசி
சத்தமாய் சிரிக்கும்
நித்தியாவின் தோழிகள்
என கூட்டம்
சிரிப்பு சத்தங்களைத் தாண்டி

நான்கைந்து வீதிகளுக்கு
கேட்குமாறு
ஒலித்துக்கொண்டிருந்தது
இசைஞானி இசையில்
"நான் தேடும்
செவ்வந்திபூவிது..."

#கல்யாணவீடு


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...