Wednesday 9 August 2017

காயத்ரி

பேச்சும் சிரிப்பும்
அவள் அழகெனினும்
வீரமும் நேர்மையும்
கூடுதல் அழகு
முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும்
தொலைந்தவர்கள் இடையே
புத்தகங்களுக்குள் தொலைந்தவள்
கரப்பான்களுக்கு பயப்படும்
பெண்களிடையே
கட்டுவீரியனை கதை பேச அழைப்பவள்
பேய் பூதங்கள், நடுநிசி நாய்களுக்கு
அஞ்சும் மகளிர் நடுவே
கான்ஜுரிங்கும் எக்ஸ்சார்சிஸ்டும்
கண்சிமிட்டாது பார்ப்பவள்
இசை அவள் இலகுமிடம்
மகிழ்ச்சி மிகுதியில்
அவ்வப்போது அவளே குயிலாவாள்
இந்த தமிழ் குயில்
ஜெர்மன் மொழியிலும் பண்ணிசைக்கும்
தென்னிந்திய மொழிகள் மீது
ஏனோ ஒரு தீராக் காதல்
படங்கள் வழியே
அவளது மொழிப் பாடங்கள்
மோகன்லால் மம்மூட்டியுடன்
துல்கரும் நிவினும் இவளுடன்
மலையாளத்தில் சம்சாரிக்க
மகேஷ்பாபுவும் பவன் கல்யாணும்
தெலுங்கில் மாட்லாட
யஷ்ஷிடம் கன்னடமும்
படங்கள் வழி பயின்றவள்
ஹிந்தியையும் அறிவாள்.
ஆனால் அதன் திணிப்பை
தமிழ்வாள் கொண்டு எதிர்ப்பாள்
அச்சமும் நாணமும் விட
சுதந்திரமும் சுயமரியாதையும்
பெண்ணிற்கு அழகென நினைப்பவள்
சமைப்பதும் துவைப்பதும் விட
சமஉரிமைகள் இருப்பது
அவசியமென வாழ்பவள்
பார்லர்களிலும் பாரிலும்
மூழ்குபவரிடையே
அடர்காட்டில் ஒரு செடியாகவும்
ஓடும் நதியில் ஒரு துளியாகவும்
தொலையத் துடிப்பவள்
பிறர் பொறாமை படுமளவு
கனவுகள் கண்டு
விடியல்கள் தாண்டியும்
விழித்துக் கிடப்பவளே
சிகரங்கள் தாண்டியும்
நீ சிறகடித்துச் செல்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


Thursday 3 August 2017

சுற்றுசூழல்

குழிகள் மூடப்பட்டு
புதியதாய் தார் பூசி
மரங்கள் வெட்டப்பட்டு
முன்பை விட
விசாலமாக இருக்கிறது 
அந்த சாலை
சுகாதாரத் துறை
அமைச்சரும்
சுற்று சூழல்
ஆர்வலர்களும்
உலக சுற்றுசூழல் தின
கருத்தரங்கிற்காக
குறிஞ்சிப்பாடி வருவதால்

அன்றாடம்

சற்று தொலைவிலிருந்தே
தான் வருவதை அறிவிக்கும்
ஒலியை தொடர்ந்து எழுப்பி
அந்த முச்சந்தியில்
பெரும் புழுதியைக் கிளப்பி
தெற்க்கு நோக்கிச் செல்லும்
அந்த தனியார் பேருந்தின்
சத்தம் கேட்டாலே
பிரபாகரன் டீக்கடை பென்ஞ்சில்
தினத்தந்தி வாசிப்போருக்கும்
மாடர்ன் மணி சலூனில்
இந்தியா இலங்கை டெஸ்ட்டு மேட்ச்
பார்க்கும் ஆடியன்சுக்கும்
செல்வம் ஓட்டலில் புரோட்டாவிற்க்கு
காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும்
நன்கு தெரியும் அப்பொழுது
நேரம் காலை பத்தரை என்று.

முதுமை

காலை சர்க்கரையில்லா
காபியுடன் தினமணியும்,
நேரம் தவறாமல் உணவும்,
படுக்கை, தொலைக்காட்சி,
கழிப்பறை வசதியுடன் 
தனி அறையும்,
தனிமைப்படுத்தப்பட்ட
ரங்கசாமியின்
சந்தோஷமில்லையென
ராஜேஷ் இறுதிவரை
அறியவில்லை.


***************************************************************************************

மலமும் மூத்திரமுமாய் 
கிடந்தவளை
மகளும் மருமகளும் 
ஒதுக்கியவளை
டெட்டால் நீரால் 
துடைத்து
துணிமாற்றி
கடந்த நான்கு
மாதங்களாய்
பணிவிடை செய்யும்
பத்மாவிற்க்கு
தன் கைவளையைக்
கழற்றித் தந்த
இரவு தான்
அவள் இறுதியாய்
கண்ணயர்ந்தாள்.


************************************************************************************

மூச்சிரைக்க மூன்று முறை
பூங்காவை வளம் வந்து
கல்லிருக்கையில் அமர்ந்தவுடன்
இரு தினம் முன்பு 
பரிசோதனை முடிவில்
துடிக்கும் இருதயம்
தவிக்கும் நிலையெனவும்
சர்க்கரையின் சதவிகிதமும்
சற்றே கூடுதலெனவும்
அதிக உடல் எடை
அதிக ஆபத்தெனவும்
மருத்துவர் சொன்னது தான்
அவர் மனதினில் ஒலித்தது

திருமணத்திற்கு நிற்கும் அபிநயா
பிளஸ் டூ பயிலும் அபிஷேக்குடன்
தன்னை தவிர ஏதுமறியா
சிவகாமியின் முகமும்
ராஜேந்திரனின் கண் முன் வர
ஒரு பெருமூச்சுடன்
மீண்டும் எழுந்து
நடக்கத் தொடங்கினார்
சற்றே வேகமாக
நான்காவது சுற்று...!

முதல் தாரத்தின் மகள்

என்ன தான் இருந்தாலும்
இன்னொரு வீட்டுக்கு போய்
அடுப்படில இருக்கபோறவளுக்கு
இன்ஜினியரிங்லாம் எதுக்கு
எதனா டிகிரி படிச்சா 
போதாதான்ன்னு
மூன்று வருடம் முன்னர்
இவளுக்கு சொன்னவளே தான்,
"செலவானாலும் பரவாயில்ல,
கீர்த்தனா ஆசைபடறதயே
படிக்க வெக்கலாம்,
நமக்குன்னு இருக்கறது
ஒரே பொண்ணு"
என்று அவரிடம் இன்று பேசுவதை
எதேர்ச்சியாய்க் கேட்டுக் கடந்தவள்
தன் அறையினுள் சென்றதும்
தலையனையைக் கட்டியணைத்து
ஓவென அழுதாள்.
தன் நாட்குறிப்பின் நடுவே
இருந்த பாஸ்போர்ட் சைஸ்
புகைப்படத்திலுள்ள
கனிந்த பார்வையுடன்
மலர்ந்த முகம் கண்டதும்
ஆறுதலடைந்து அமைதியானாள்.
அச்சில் வார்த்தார் போல்
அதே சாயலில்
இவளது முகமும்
மலர்ந்து கிடந்தது
அந்த கல்லூரியின்
அடையாள அட்டையில்,
யாழினி இயற்பியல்
மூன்றாம் ஆண்டு.

****************************************************************************

அவர் வீட்டிலில்லா
சமயங்களிலேயே
அடிபட்டு, மிதிபட்டு,
வசை சொல்லில்
வதைபட்டவள்,
இனி இவள் கையில் என்னவாகப்போகிறாளோ
அவர் ஒரேடியாய்
உறங்கியபின்னர்.

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...