Thursday 3 August 2017

முதுமை

காலை சர்க்கரையில்லா
காபியுடன் தினமணியும்,
நேரம் தவறாமல் உணவும்,
படுக்கை, தொலைக்காட்சி,
கழிப்பறை வசதியுடன் 
தனி அறையும்,
தனிமைப்படுத்தப்பட்ட
ரங்கசாமியின்
சந்தோஷமில்லையென
ராஜேஷ் இறுதிவரை
அறியவில்லை.


***************************************************************************************

மலமும் மூத்திரமுமாய் 
கிடந்தவளை
மகளும் மருமகளும் 
ஒதுக்கியவளை
டெட்டால் நீரால் 
துடைத்து
துணிமாற்றி
கடந்த நான்கு
மாதங்களாய்
பணிவிடை செய்யும்
பத்மாவிற்க்கு
தன் கைவளையைக்
கழற்றித் தந்த
இரவு தான்
அவள் இறுதியாய்
கண்ணயர்ந்தாள்.


************************************************************************************

மூச்சிரைக்க மூன்று முறை
பூங்காவை வளம் வந்து
கல்லிருக்கையில் அமர்ந்தவுடன்
இரு தினம் முன்பு 
பரிசோதனை முடிவில்
துடிக்கும் இருதயம்
தவிக்கும் நிலையெனவும்
சர்க்கரையின் சதவிகிதமும்
சற்றே கூடுதலெனவும்
அதிக உடல் எடை
அதிக ஆபத்தெனவும்
மருத்துவர் சொன்னது தான்
அவர் மனதினில் ஒலித்தது

திருமணத்திற்கு நிற்கும் அபிநயா
பிளஸ் டூ பயிலும் அபிஷேக்குடன்
தன்னை தவிர ஏதுமறியா
சிவகாமியின் முகமும்
ராஜேந்திரனின் கண் முன் வர
ஒரு பெருமூச்சுடன்
மீண்டும் எழுந்து
நடக்கத் தொடங்கினார்
சற்றே வேகமாக
நான்காவது சுற்று...!

No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...