Wednesday 9 August 2017

காயத்ரி

பேச்சும் சிரிப்பும்
அவள் அழகெனினும்
வீரமும் நேர்மையும்
கூடுதல் அழகு
முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும்
தொலைந்தவர்கள் இடையே
புத்தகங்களுக்குள் தொலைந்தவள்
கரப்பான்களுக்கு பயப்படும்
பெண்களிடையே
கட்டுவீரியனை கதை பேச அழைப்பவள்
பேய் பூதங்கள், நடுநிசி நாய்களுக்கு
அஞ்சும் மகளிர் நடுவே
கான்ஜுரிங்கும் எக்ஸ்சார்சிஸ்டும்
கண்சிமிட்டாது பார்ப்பவள்
இசை அவள் இலகுமிடம்
மகிழ்ச்சி மிகுதியில்
அவ்வப்போது அவளே குயிலாவாள்
இந்த தமிழ் குயில்
ஜெர்மன் மொழியிலும் பண்ணிசைக்கும்
தென்னிந்திய மொழிகள் மீது
ஏனோ ஒரு தீராக் காதல்
படங்கள் வழியே
அவளது மொழிப் பாடங்கள்
மோகன்லால் மம்மூட்டியுடன்
துல்கரும் நிவினும் இவளுடன்
மலையாளத்தில் சம்சாரிக்க
மகேஷ்பாபுவும் பவன் கல்யாணும்
தெலுங்கில் மாட்லாட
யஷ்ஷிடம் கன்னடமும்
படங்கள் வழி பயின்றவள்
ஹிந்தியையும் அறிவாள்.
ஆனால் அதன் திணிப்பை
தமிழ்வாள் கொண்டு எதிர்ப்பாள்
அச்சமும் நாணமும் விட
சுதந்திரமும் சுயமரியாதையும்
பெண்ணிற்கு அழகென நினைப்பவள்
சமைப்பதும் துவைப்பதும் விட
சமஉரிமைகள் இருப்பது
அவசியமென வாழ்பவள்
பார்லர்களிலும் பாரிலும்
மூழ்குபவரிடையே
அடர்காட்டில் ஒரு செடியாகவும்
ஓடும் நதியில் ஒரு துளியாகவும்
தொலையத் துடிப்பவள்
பிறர் பொறாமை படுமளவு
கனவுகள் கண்டு
விடியல்கள் தாண்டியும்
விழித்துக் கிடப்பவளே
சிகரங்கள் தாண்டியும்
நீ சிறகடித்துச் செல்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...