Friday 20 October 2017

தோட்டா

ஒருவனின் பெருங்கோபமா
இல்லை அவ்வொருவன்
சமூகத்தின் ஒரு துளியா
அவனின் விரல்கள் மீட்க 
பேரமைதியைக் கிழிக்கும்
பெருத்த இசையுடன்
ஆயுளைக் குடிக்க
அதீத விசை தோட்டா
மூச்சிற்கு முற்றுப்புள்ளி
அது எரியும் பெருந்தீயினை
அணைக்கும் நீர்த்துளியா
உறங்கும் மாமலையை
எழுப்பும் தீப்பிழம்பா
லிங்கனோ லேடனோ
ஹிட்லரோ காந்தியோ
சேகுவராவோ
பெனாசீர் பூட்டோவோ
அடக்குமுறையோ
அதிகாரமோ
அரசியலோ தான்
சரித்திர தோட்டாக்களின்
இயங்கு விசை
உடல் கிழித்து
சிதறும் குருதித் துளிகள்
எழுதுவதில்லை
இறுதி சாசனத்தை
படை பலத்தவனோ
பணம் படைத்தவனோ தான்
மடிந்தவன் கதையென
மந்தைகளுக்கு உரைப்பான்
இக்கணம்
யாரோ ஒருவன்
போதனையில்
எங்கோ ஒரு
துப்பாக்கியில்
உலக அமைதிக்கான
அடுத்த தோட்டா
அமைதியாய்
உறங்கிக்கொண்டிருக்கிறது


Wednesday 11 October 2017

பெண் குழந்தை

கல்பனாவின் வசைகள் 
காவியாவின் முத்தத்தில்
மூழ்கி மறைந்தே போயின
கனகசபாபதிக்கு

இசைஞானியும்
இசைப்புயலையும் விட
இனியாவின்
நிலா நிலா ஓடிவாவில்
இலகியது
இளங்கோவின் இதயம்

கயலுக்காக
டைரி மில்க்
வாங்கும்போது
கார்த்திக்கிற்கும்
சேர்த்து வாங்க
சொல்லும்போது
அவள்
உயர்ந்தே நிற்கிறாள்

விளையாடுகையில்
இடறி விழுந்த
வருணிற்கு
எச்சில் தொட்டு
மருந்து வைக்கையில்
மருத்துவராகிறாள்
யாழினி

கலங்கியிருக்கும் பத்மாவின்
கண்களை துடைக்கும்
அபியின் சிறுவிரல்களால்
விட்டோடியவன் எழுதிய
கடைசி கடிதத்தின்
கணம் குறைந்தது

காலுடைந்த
குட்டி நாய்
விரைந்து குணமாக
முணுமுணுத்து
வேண்டுகிறாள்
அந்த குட்டி
தேவதை

அந்த பெரிய
கரடி பொம்மை
பிடிக்கவில்லையென
என் நிலை அறிந்து
பொய் சொன்னவள்
நிச்சயம் சிறுபிள்ளையாக
இருக்க முடியாது

என் கைபிடித்து
கரும்பலகையில்
எதையோ எழுதியவள்
அப்பா இது தான்
உன் பேரு
எனச்சொல்லி
சிரிக்கும்போது
சிலிர்த்தது அவன் உள்ளம்

கல்லுடைத்து
வீடு திரும்பியவன்
கைககளை பிடித்து
மயிலிறகால்
வருடும் சிறு கரங்கள்
இறந்த அவன்
அன்னையையே
நினைவுபடுத்தின


தீக்குச்சி

ஒரு அரசியல்
தலைவனின் கைதிற்கு
சில தொண்டர்கள் 
உரசிய குச்சி தான்
எலும்புக்கூடாய் பேருந்தும்
சாம்பலாய் சில உயிர்களும்
உயிரினும் உயரியதா
ஐந்து பவுன் தங்கம்.
தீரா வயிற்று வலியால் தான்
தீக்கிரையாகினாள் என
திரித்த கதையைத்தான்
தினசரிகள் சொல்லின
ஏழு வருடங்களாய் பல சோதிடர்கள்
சொன்ன பரிகாரங்களை செய்தவள்
இன்றும் பக்தியுடன் ஒரு தீக்குச்சி.
திரியின் நுனியில் சுடரும் ஒளியில்
கருணை வடிவாய் அவள் விழி
கண்ணீர்துளியுடன் இவள் விழி
விருப்பமில்லையென
வார்த்தைகளால் மறுத்திருக்கலாம்.
மதம்பிடித்தவன் மதிகெட்டு
பற்றவைத்த சாதியத்தீ
தீப்பிளம்பாய் கீழத்தெரு
சாம்பல்கூடாய் அவன்
முரண்களுடனே முடிவுற்ற உறவு
மூன்றாம் சுற்றின் முடிவில்
வெட்டியான் கிழித்த தீக்குச்சில்
பற்றிய அவன் நெஞ்சம்
இன்றும் புகைந்துகொண்டிருக்கிறது


Tuesday 10 October 2017

போர்

வண்ணத்துப் பூச்சிகளுக்கு
கொடுக்குகள் முளைக்கட்டும்
ஆடுகள் அசைவமாகி
மேய்ப்பவனை விழுங்கட்டும்
விதைகளுடன் ஆயுதங்களும்
மண்ணில் விளையட்டும்
நிலத்தை கூறுபோடுபவன்
உடல்கள் சிதையட்டும்
போர்த்தொழில் பழகி
புறாக்கள் பறக்கட்டும்
அக்கிரமக்காரர்களை அவை
அமைதியாய் அழிக்கட்டும்
வெடிகுண்டு செய்வதை
குருவிகள் கற்கட்டும்
கட்டிடங்கள் மீதெல்லாம்
குண்டுகள் வைக்கட்டும்
மலர்கள் நறுமணத்துடன்
விஷவாயு கக்கட்டும்
நுகரும் மந்தைகள்
நுரைதள்ளி மடியட்டும்
ஆற்றுப் படுக்கைகள்
புதைமணலாகட்டும்
மானுடன் கால் பட்டால்
அவன் மண்ணோடு போகட்டும்
எறும்புகள் நம் உணவில்
நஞ்சினை கலக்கட்டும்
கொசுக்களும் ஊசியால்
உயிரைக் குடிக்கட்டும்
நாய்கள் நரியாகி
குரவளைக் கடிக்க
பூனைகள் மதம் பிடித்து
மனிதனை மிதிக்க
நாவறண்டு சாகத் துடிக்கும்
கடைசி உயிருக்கும்
நாரையோ காகமோ
கரிசனம் காட்டாதிருக்கட்டும்
ஐந்தறிவுடன் போரில்
ஆறறிவு அழியட்டும்
அகிலமே மீண்டும்
புதியதாய் மலரட்டும்


Saturday 7 October 2017

ஒரு கணம்

ஒரு கண சந்தேகம்
உறவுகளில் விரிசல்
ஒரு கண மோகம்
ஒழுக்கத்தில் கறை
ஒரு கண இயலாமை
வெற்றி கைதவற
ஒரு கண வெறுமை
தற்கொலையைத் தூண்ட
ஒரு கண கோவம்
பிரச்சனைகள் பிறக்க
ஒரு கண மௌனம்
உண்மைகள் புதைய
நிகழ்பவை எல்லாமே
அவ்வொரு கணத்தில் தான்
ஒரு கணம் யோசிப்போம்
அல்லவை குறையும்


Monday 2 October 2017

தேவை

ஒரு துளி நீர்
இரு நெல்மணி
நெளியும் புழு
ஊரும் பாம்பு
சிறு தட்டான்
முழுத் தவளை
புல்லின் நுனி
பூவின் தேன்துளி
குலை வாழை
அரை கொய்யா
கறிதுண்டு
சிறு மீன்
ஒரு மான்
சிந்திய சீனி
சிதறிய சோளம்
ஒருபிடி சோறு
என உயிர்களின்
தேவை சிறிது
இதை அறிந்தால்
வாழ்க்கை இனிது.



சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...