Monday 25 September 2017

தழும்பு

புளியங்குளம் சாலையில்
வந்த ஹோண்டா ஷைன்
இருசக்கர வாகனத்தை தான்
இடை மறித்து
அவை கடந்து கொண்டிருந்தன
சற்றே பட்டையான
ஃபிரேமுடைய தடிமனான
கண்ணாடி,
அரை வழுக்கை போக
மீதமுள்ள முடிக்கு
எண்ணெய் வைத்து
படிய வாரிய தலை,
கோடு போட்ட
வெளீர் காபி நிற
அரைக்கை சட்டை,
கனமான டைட்டன்
கைக்கடிகாரம்,
நீலம் சிவப்பென
சட்டைப்பையில் இரண்டு
ரெனால்ட்ஸ் பேனா,
பிரவுன் நிற
பட்டையான வார்
வைத்த செருப்பனிந்த
ஐம்பதை நெருங்கும்
அந்த இருசக்கர
வாகனத்திலிருந்தவர்,
என்னைப் பார்த்ததும்
அசெளகிரியமாய்
குறுகினார்
ஆறாவது படிக்கையில்
அவரது பிரம்பால்தான்
படிப்பே வேண்டாமென
பண்ணையில் சேர்ந்தேன்.
இன்று ஆடுகளை
விரட்ட கம்பால் அடித்தது
அவரது முதுகிலும்
தழும்பாகிப்போகுமோ?



Friday 22 September 2017

நிஜம்

மூன்று சென்டில் வீடு
இரண்டு ஏக்கர் நிலத்துடன்
ஒரு லட்சம் ரொக்கம்
கணக்கு பிள்ளையின்
மகள் திருமணத்திற்கு
பரிசாய் குடுத்த
பெரிய பண்ணை
சாந்தி காலனி
நான்காம் சந்து
மூன்றாம் தளத்தில்
இரண்டு மாதமாய்
வீட்டு வாடகை 
கொடுக்கவியலா 
நலிந்த நடிகர்


Wednesday 20 September 2017

தரம்

இரண்டாம் சிரமுடைய
இனம் ஏதும் உண்டோ

மூன்றாம் கரமுள்ள
மதத்தினர் யாரும் உண்டோ

ஏழாம் அறிவுடையோர்
எட்டுத்திக்கில் உண்டோ

சிவப்பில்லா குருதியுடன்
மேன் மக்கள் உண்டோ

சாவா வரம் பெற்ற
சாதியினர் உண்டோ

பசியென்னும் பிணியில்லா
மாந்தர் மண்ணில் உண்டோ

மனிதர் அனைவருக்கும்
சமமாய் எல்லாம் இருக்க

சமயம் சாதி சன்மார்க்கம்
மொழி இனம் நிறமென

தரம் பிரித்து வாழ்வது
தரக்குறைவன்றோ



எதைப்பற்றி எழுதுவது

பார்வை தொலைத்து
கையேந்துபவனா
கண்கள் பார்த்தும்
கடப்பவனா
முதுகு வளைந்தும்
முழம் போடுபவளா
குறைக்கச் சொல்லி
விலை பேசுபவனா
பசியின் பிடியில்
திருடுபவனா
திருட்டுக் கொடுத்து
கதறுபவனா
பெண்மையைப் பறித்த
மிருகத்தையா
கற்பே அடகாகும்
வறுமையையா
நதிகள் நடத்தும்
அரசியலையா
நிதிகள் எழுதும்
தேர்தலையா
கடலில் எல்லை
கடப்பவனா
கடப்போர் உயிரைப்
பறிப்பவனா
கழுத்தறுக்கும் சாதிய
கத்தியையா
துடித்திறக்கும் சாமானியன்
காதலையா
கனவைப் பறிக்கும்
தேர்வினையா
கனவிழந்தோர் ஆறாத்
துயரினையா
இதில் எதைப்பற்றி
எழுதுவது
கேள்விகள் என்னுள்
எழுகிறது


Tuesday 19 September 2017

சுத்தம் இருப்பினும் மருத்துவம்

மணல் குவித்து
வீடு கட்டுவதோ
நாற்றுகளாய்
சேற்றில் குதிப்பதோ
களிமண் குழைத்து
பொம்மை செய்வதோ
புழுதிக் காட்டில்
சடுகுடு ஆடுவதோ
குழாயடி நீரில்
தாகம் தணிப்பதோ
அணில் கடித்தெறிந்த
கொய்யாவோ
கிழவி உப்பிலிட்ட
நெல்லியோ
கவரில் அடைத்த
குழல் வத்தலோ
கண்ணாடி பாட்டில்
வழியே சிரிக்கும்
தேன் மிட்டாயோ
தேங்காய் பர்பியோ
மிதிவண்டி மீதுவரும்
சேமியா ஐசோ
வெங்காய சமோசாவோ
கிரிஜா அக்கா
கீரை வடையோ
முருகன் கடை
முருகல் தோசையோ
சுத்தமற்றது எனவும்
சுகாதாரமில்லை எனவும்
குளிரூட்டிய அறையில்
ஐ-பேடில் விளையடி
கண்ணாடி சுவரெழுப்பிய
கடைகளிலேயே உண்டு
சுத்திகரிப்பானில்
கைதுடைத்து
சுத்திகரிக்கப்பட்ட
நீரருந்தியவனுக்கு
எப்படி வந்ததென்றே
தெரியவில்லை
டஸ்ட் அலர்ஜியும்
புட் பாய்சனிங்கும்.
நாட்டு மருந்து
கடைக்காரர் தான்
வழி சொன்னர்
அந்த ஆறடுக்கு
மருத்துவமனைக்கு.




நாடே காடாகும்

நிலம் நீர்
மட்டுமின்றி
உரம் உழைப்பு
மட்டுமின்றி
திங்கள்கள் சில
அதிலும்
இன்னல்கள் பல.
மழையோ வெயிலோ
தவறினாலும்
தாமதித்தாலும்
கேணியோ குளமோ
தரை தெரிந்தாலும்
கரை புரண்டாலும்
ஒப்புக்கு தீர்ப்புகளும்
ஒப்புக்கொள்ளா
நாடகங்களும்
இயற்கையின் விதி
அரசியல் சதி
விளைவுகள் என்னவோ
விளைச்சலில் தான்.
முதலையும் கொடுக்கா
கொள் முதலைகள்
பசுவை அழித்து
பசுமை யுக்திகள்
தில்லியில் கூவியும்
செவி கேளாமல்
அரை நிர்வாணத்தையும்
கவனிக்காமல்
வாழ்வியல் விவசாயத்தில்
வர்த்தக விஷமேறி
ஜனநாயகம் நுரைதள்ளும்.
பால் பழம் பல்வகை
தானியங்களுடன்
அரிசியும் அரிதாகும்
நாடே காடாகும்.


அம்முவாய் மாறிய பிங்கி

அழுக்கு தேகத்தில்
ஒற்றைக் கண்ணுடன்
அறுந்து தொங்கும் காதுமாய்
குப்பையில் கிடந்த
அந்த கரடி பொம்மை
தான் முன்பிருந்த
அடுக்குமாடி குடியிருப்பின்
பதினெட்டாம் மாடியில்
குளிரூட்டப்பட்ட அறையும்
வசதியான மெத்தையையும் விட
சூரியனுன் சந்திரனும்
எட்டிப் பார்க்கும் கூரையுள்
ஓரம் கிழிந்த பாயும்
துணிகளை சேலையுள்
முடிந்த தலையணையும்
மூக்கொழுகும் அந்த
பரட்டைத்தலை சிறுமியும்
அவள் ஊட்டும் பழையதும்
பிடித்துத்தான் போயின
அம்முவாய் மாறிய பிங்கிக்கு.


பெரியார்

அன்றவன் கல்வியை
பொதுவாக்கினான்,
அறிவைப் புகட்டியே
வேற்றுமை வேரருத்தான்
இன்று குளங்கள்
மட்டும் பொதுவாகவில்லை
கோவில்களில் மட்டும்
கதவு திறக்கவில்லை
சவரம் செய்தவர் மகன்
சார்க் உச்சி மாநாட்டில்
ஆடைகள் வெளுத்தோர்
ஆடை வடிவமைப்பில்
கல்வி பறிக்கப்பட்டோர்
கல்லூரி பேராசியர்களாய்
பொதுவழி மறுக்கப்பட்டோர்
விண்வெளி ஆராய்ச்சியில்
பொறியியலும் மருத்துவமும்
கிடைக்கப் பெற்றாலும்
மலமள்ளும் இழிநிலையும்
இருக்கத்தான் செய்கிறது
பொதுக்குழாய் நீரும்
பொதுவழியில் தேரும்
வெற்றிதான் எனினும்
போதாது
சகலமும் சமமெனும்
நாளது வரும்வரை
பெரியாரின் விதைகள்
ஓயாது


சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...