Wednesday 18 July 2018

கிணற்றில் கிடந்தது போதும்

பாடப்புத்தகங்கள் சொல்லிக் கொடுத்தது
திருக்குறளில் ஒரு சில அதிகாரங்களையே.
வள்ளுவன் எழுதியதும் வெறும் 133 தான்.
வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் அதற்க்கும் மேல்.
கைநாட்டு பாட்டனுக்கு கையெழுத்து போடும் அப்பன் ஆனந்தம்.
கையெழுத்து அப்பனுக்கோ பட்டம் பெற்ற மகன் பேரானந்தம். ஆனால் அவன் பெற்றவனோ இரண்டு பட்டங்களுடன் மூன்று ஆண்டுகளாய் வேலைத் தேடி.
அன்றைய எஸ்.எஸ்.எல்.சியின் அறிவைக்கூடவா இன்றைய முதுகலைப் பட்டதாரி பெறவில்லை.
ஆண்டுகள் வளர திறமைகள் தேய்ந்தா போயின? எல்லாம் கற்க முனைந்து வழியில் முக்கியமானதெதையோ கற்க மறந்தோம்.
பொறியியல் படிப்பு வெளிநாட்டு விசாவையும், கிரீன் கார்டையும் பெற்றுத்தருமென சீட்டுக் கம்பேனியில் பணம் போட்டு ஏமார்ந்தோர் போல்
பொறியியல் பொறியில் ஆயிரக் கணக்கான எலிகள்.
அறியாமை என்று யாரைச் சுட்டுவது?
ஆய் அப்பனையா? ஆசானையா?
அனைத்தையும் பார்த்து உண்மை என நம்பி
நாமே ஏமார்ந்ததால் நம்மையேவா.
படிப்பிற்க்கும் பணிக்குமான சம்பந்தம்
என்றோ எங்கோ துண்டிக்கப்பட்டது தெரியாமல் அனைவரும், அனைவருமே அப்பயணத்தை மேற்கொண்டு, உண்மை உணரும் போது திரும்பவியலா தூரம் வாழ்வில்.
படிக்கும் போதே வேலையென
நம்பிக் கொண்டுதானே சிலர் சேர்கிறார்கள்.
பக்கத்து வீட்டு அண்ணன் பகரின் சென்றானே என அவன் வழி செல்லாதீர்
எதிர் வீட்டு அக்கா அமெரிக்காவில் உள்ளதால் அவள் பாதை நம்மையும் அமெரிக்கா எடுத்துச் செல்லுமென உறுதியில்லை.
என்னவாகப் போகிறோமென்ற தேடல் நமக்கு வெளியே, நம்மைச் சுற்றி இருப்பதை விட,
அதிகமாய் நமக்குள் இருக்க வேண்டும்.
என் நாட்டம் எங்கு இருக்கிறது
என் இதயம் எதில் துடிக்கிறது
என் கனவு எத்திசையில் உள்ளது.
அதைத் தேட வேண்டும்.
அதன் பின் ஓட வேண்டும்.
பாதைகள் கடினமான இருக்கலாம்.
கரடுமுரடாக, காட்டு வழியாக, அரவங்கள் நிறைந்து அபாயங்களுடன் இருக்கலாம்.
கல் தடுக்கி கால் இடறுமிடத்தில் பெரிய பள்ளத்தாக்கு இருக்கலாம்.
சீறும் அலைகளுடன் கொந்தளிக்கும் ஆழி இருக்கலாம்.
காடு மலைகள் தாண்டி வெற்றிக் கோடு
எங்கோ தூர தேசத்தில் இருக்கலாம்.
ஆயத்தமாவோம். அப்பாதை நடக்க.
உண்மையில் வெற்றி என வரையறுக்கப்பட்ட ஒன்று ஏதுமில்லை. அது ஒரு மன நிலையே.
நம் வெற்றி மகுடத்தை யாரும் தயார் செய்வதில்லை. அது சுயமாக நாமே எடுத்துக்கொள்வது. நமக்கு நாமே சூடிக்கொள்ளும் மணிமகுடம்.
நம் சந்தோஷத்தில், நிம்மதியான உறக்கத்தில், உள்ளத்தின் பூரிப்பில், ஆர்ப்பரிப்பில், மனதின் கொண்டாட்டத்தில் தான் உள்ளது உண்மையான வெற்றி.
கிணற்றில் கிடந்தது போதும். புறப்படுவோம் கடல் நோக்கி ஒரு பயணம்.

No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...