Monday 24 April 2017

அப்பாவின் மிதிவண்டி

தேனீ சேகரித்து கொணரும்
துளி தேன் போல் இனிதாய்
மனதின் ஓரத்தில்
உறைந்து கிடக்கும்
அக்கால நினைவுகள்

காலங்கள் கடந்தும்
மனதிற்கு புத்துயிர் பாய்ச்சும்
பாசமிகு பயணங்களும்
பயணத்தில் விரிந்த பாதைகளும்

ஏற்றமான பாதைகளில்
படபடக்கும் நெஞ்சமும்
காற்றில் கலக்கும் பெருமூச்சும்
அவர் பாசத்தின் வாசமென
ஏனோ அன்றறியவில்லை

"பாரமாய் இருக்கிறதா?"
"இறங்கி நடந்து செல்லவா?"
அன்னையின் கேள்விக்கெல்லாம்
பொய்யையே பதிலாய்த் தருவார்.

முள்தைத்த சக்கரத்தால்
எனை வைத்து நெடுந்தூரம்
தள்ளிச் செல்லும்போது

அவர் உதிர்த்த
வியர்வைத் துளிகள்
நெஞ்சின் ஆழத்தில் உறைந்து
இன்று நினைவு முத்துக்களாய்

அறிஞர்களின் அறிமுகம் கிடைத்ததும்
அறநெறிகளை கதை வழி கேட்டதும்
அவருடான மிதிவண்டிப்பயணங்களில் தான்

முன்சக்கரத்தின் இடையே
கால் இடறி சிக்கியதில்
முள்தைத்த நெஞ்சம்போல்
பதறிவிட்டார் மீசைக்காரர்

குடும்ப அட்டையில்
விடுபட்ட பெயராய்
அப்பாவின் மிதிவண்டி

இன்று வீட்டின் பின்புறம்
பயன்படுத்தா பொருட்களுக்கிடையே
ஒற்றடையால் போர்த்தப்பட்டு
பேச்சு மூச்சின்றி கிடந்தவனை

துடைத்து, குளிப்பாட்டி,
எண்ணெய் வைத்து,
காற்றுசெலுத்தி உயிர்கொடுத்து,

பலவருடங்கள் கழித்து
மீண்டும் மிதித்துச்செல்கையில்
"டிங் டிங்" மணியோசையில்
நிறைந்தது மனது
புலர்ந்தது பொழுது.




#memories #bicycle #childhood #father #lifeonwheels

Wednesday 19 April 2017

கரும்புச்சாறு பிழிபவர்


பட்டத்தை சுமந்து
மாநகரின் வீதிகளில் 
பாதுகைகள் நடக்க
சாலை, இனி
இல்லையென்றானபின்
வெவ்வேறு வடிவங்களில்
வேண்டாம் எனும்
பதிலே செவிகளில்.
வேலையே விடிவென்று
எதிர்பார்த்த குடும்பமும்
பொறுமையின் விளிம்பில் இடறி
சலசலக்க ஆரம்பிக்க
பெற்றவளின் அங்கலாய்ப்பும்
தமக்கையின் முணுமுணுப்பும்
காதுபடவே அரங்கேறியது.
படர்ந்த நம்பிக்கை
பட்டுபோகும் முன்
வீட்டிற்கு பயன்பட
சிந்தனையில் மூழ்கினான்
பெரும் விவாதத்தின் இறுதியில்
பட்டத்தை பரணில் வைத்து
தாயின் சரடை முதலாக்கி
சாறு பிழியும் கடை வைத்தான்
கரும்புச் சாற்றுடன்
பிற சுவைகளும் கூட்டி
பனிக்கட்டிகளுடன்
பணிவாக குடுத்து
குளிர்ந்த வயிறெல்லாம்
வீட்டாரின் ரணத்திற்கு
மெல்ல மருந்தாயின.
வசந்தத்தின் வாயிலை
அனைவருக்கும் காட்டி
புழுங்கித்தான் கிடக்கிறான்
உறங்கும் பட்டத்தை எண்ணி
துடிக்கும் சதையோ
இயலாமை கனலில்
வெந்து கொண்டே இருக்க
பாதையோ பிறழ்வுற்று
கனவுகள் சிறைவைத்து
கரும்பான வாழ்வு தான் இவனது
இரும்பு எந்திரத்திடையே


ஓவியம்: Ravi Palette

#கோடை #வெப்பம் #வெய்யில் #வாழ்க்கை

நடுனிசியில்
மின்சாரம்
நின்றகனத்தில்
விழித்து
பிள்ளைகளுக்கு
வியர்க்காமல்
விசுறுவது
#தாயுள்ளம்

********************************************************************************************************

மின்சார ரயிலிலே
கைக்குட்டை 
விற்கும் சிறுமிக்கு
கூடுதல் விற்பனை
ஆகுமெனில்
கூடுதல் வெப்பமும்
சம்மதமே

********************************************************************************************************

குட்டை வற்றி
துடித்துக் 
கொண்டிருந்த
கெண்டையைக்
கொத்தவில்லை
தாகத்திலிருந்த
கொக்கு.

********************************************************************************************************

ஆறு அருவி
குளம் குட்டை
கேணி கம்மாயி
அனைத்தும் 
வரண்டிருக்க
இரு சொட்டு
நீருக்காய்
ஊரெங்கும் பறந்த
சிட்டுக்குருவியின் 
தாகத்தை தீர்க்காத
பாவப்பட்ட பிறப்புகள் 
#நாம்

********************************************************************************************************

ஆண்டுதோறும்
நடக்கும் 
போருக்கு
தன் ஆயுதங்களையே
அழித்து
ஆயத்தமாபவன்
அறிவுடையோனா?
பின் ஏன்
மனிதனுக்கு
மரமழித்து
பகலவனை
எதிர்க்கும்
கோடைப்போர்?

********************************************************************************************************

தவணையிலாவது
குளிரூட்டி 
வாங்க முயல்வோர்
தவறியும் கூட
நினைப்பதில்லை
மரக்கன்றினை பற்றி.

********************************************************************************************************

மின்விசிரியை
நாடுதலும்
மின்வெட்டை
சாடுதலும்
கோடையில்
இயற்கையே.

********************************************************************************************************

பகலவனை
பாட்டில்
எழுதிடவும்
நிழலயே
தேடுகிறது
நெஞ்சம்.

********************************************************************************************************

பணம் படைத்தவனுக்கோ
ஸ்விசர்லாந்தும்
சிம்லாவும்,
பாமரனுக்கோ
மின்வெட்டும்
நீர்மோரும் தான்
#கோடை என்பது

********************************************************************************************************

பிஞ்சு கைகள்
புதைத்த விதையை
பார்த்த இயற்கை
அகமகிழ்ந்து
தரை நனைத்துப்
போனதே
ஓர் சுட்டெரிக்கும்
கோடையில்.

********************************************************************************************************



Sunday 16 April 2017

சாமியாவது... சாத்தானாவது...

அட சாமியாவது சாத்தானாவது
கேலி கிண்டல் செஞ்சிபுட்டு,
நெஞ்சு புடைக்க பேசிபுட்டு

ஜாமத்துல ஊருக்குள்ள
ஒத்ததையில போவும்போது

வழி நெடுக்க நெஞ்சுக்குள்ள
கிலிபுடுச்சி ஆட்டிடுமே

வீடு வந்து சேருமுன்னே
காடு கழனி மெரட்டிடுமே

பனி பொழியும் ராவுலயும்
மொகத்தில் வேர்வை வழிஞ்சிடுமே

பாயில் வந்து சுருளும்முன்னே
நாயின் கொரலுக்கும் நடுங்கிடுமே

பயத்த போக்க வழியில்லாம
வீடுவர வழித்தொனைக்கு

காவல் தெய்வம் அய்யனார
மனசும் வேண்டி அழச்சிடுமே.




Friday 14 April 2017

பனியாரக்காரம்மா

மணந்தவன் மறைந்து
பெற்றவன் மறந்து
இல்லத்தில் இடம்
இல்லாது போனபின்

குறைவில்லா இல்லாளிவள்
இல்லாமையின் இறுக்கப்பிடியில்
நிர்கதியின் அர்த்தம் உணர்ந்து

தேய்பிறை வாழ்க்கையில்
ஏமாற்றத்தின் உஷ்ணம்
உண்டாக்கிய உழைப்பின் தாகம்

நெஞ்சுக் குமுறல்களை
அடுப்பில் விரகாக்கி
முனகல்களை நெருப்பில் பொசுக்கி

எஞ்சிய ஈரத்தில்
கரைத்த மாவில்
வார்த்த பனியாரங்கள்
பூத்தன நம்பிக்கையாய்

ஆயிரம் பிள்ளைகள்
அம்மா என்றழைத்திட
சுவையின் விலாசமாய்
இவள் பனியாரக்கடை.

- ச. நந்த குமார்

ஓவியம்: Ravi Palette



Wednesday 12 April 2017

கீரைக்காரர்

அசதி மிகுதியில்
பிறக்கும் ஆழ்ந்த
நித்திரை பரிசளிக்கும்
அழகிய அதிகாலை
கனவினையும் கருக்கலைத்து
ஞாயிறு எனினும்
ஞாயிறுக்கு முன் கண்விழித்து
மிதிவண்டி மீதினிலே
சந்தை நோக்கிய
பயணத்தில் அடுத்த
நாள் இனிதே ஆரம்பம்.
வந்திறங்கிய கத்தைகளை
பார்த்தெடுக்க நேரமில்லா
பரபரப்பு நிமிடங்களில்
தன் பங்கினை தக்கவைத்து
மொத்த விலையை
கணக்கு பார்த்து
விலை குறைப்பு முயற்சிகளும்
வழக்கம் போல் அன்றும்
தோல்வியே அடைய
முடிந்து வைத்த காசெடுத்து
முக்கண்ணனை நெஞ்சில் வைத்து
மூட்டைக்கானதை கொடுத்து விட்டு
கிழக்கும் சற்று சிவக்கும் நேரம்
கிழவன் முதுகில் ஏறும் பாரம்
மூட்டை ஒன்றிலே பச்சை கோபுரம்
மீதம் உள்ளதோ பையில் புகுந்திடும்
அடுக்கி வைத்து ஆயத்தம் ஆனதும்
கரீம் பீடியுடன் ஒரு கோப்பை தேனீர்
விரிச்சோடி கிடைக்கும்
விடுமுறை வீதிகள்
விழிக்கும் இவரின் கீரை கூவலில்
கீரை வகைகளின் பெயர்களை சொல்லி
ஊர்ந்து செல்லும் வீதிகளில் வாகனம்
அழைப்பொலி கேட்டு
அங்கும் இங்குமென
வாசல் திறந்திடும் கீரைகள் வாங்க
ஒவ்வொரு வாடிக்கையாளர்
முகம் காணும் போதும்
புன்னகை பிரதிகளையும்
தவறாது தந்திடுவார்
அனைத்தும் எடுத்துவிட்டு
அலசி பார்த்துவிட்டு
கட்டு சிறிது என்றும்
பூச்சி புசித்ததென்றும்
காரணங்கள் சொல்லி
குறைத்து கொடுப்பதுண்டு
ஊரைக் காத்திடும்
காவல் தெய்வங்களும்
தனக்கான காணிக்கையை
காசாகவோ கட்டாகவோ
பிடுங்கிச் செல்வதும் உண்டு
கீரைக்காரர் என
கேட்டு பழகியதில்
தொட்டில் பெயரும்
ஏதோ பழைய ஞாபகமாய்
இலைகள் வாடும் முன்னே
உலைகள் கொதிக்கும் முன்னே
விற்று தீர்த்துவிட
வியர்வை பயணம் இது
நேரம் போவதற்குள்
பொழுது சாய்வதற்குள்
பையை காலி செய்யும்
வேட்க்கை பயணம் இது
வீட்டு கிழவி அவள்
வயிற்றை நிரப்பிவிட
பதறும் கிழவன் இவன்
காதல் பயணம் இது


ஓவியம்: Ravi Palette

#StreetVendors #UrbanEconomy #UrbanVendor #DailyUtilities #TriCycles#PushCarts #Cycles #BasketOverHeads #Vibrant #Traditional#MeetMiddleClassNeeds #Vegetables #Fruits #Greens #Flowers #Garments#VisibleWorkForce #InformalEconomy #PerishableGoods #MenAndWomen#EarnTheirLiving #Survival #LivesOnStreets #Bribe #Police #Keeraikaarar

Tuesday 11 April 2017

பூக்காரம்மா

வாழ்க்கை விதைத்த
சிக்குண்ட கேள்விகளின்
விடைகளை தேடுகையில்
இதயத்தின் குருதிக் கசிவிலும்
விரல்களில் மாலைகள் மலர்கின்றன
தனலென உள்ளம்
கொதித்துக்கிடக்கையில்
ஒரு முழம் வேண்டிய
வாடிக்கையாளரை
இன்முகம் கூடியே
இவளும் அணுகினாள்
இல்லத்து இன்னல்கள்
சுயநிலை விழுங்கினும்
விரல்களின் பணி மட்டும்
ஓயாது நடந்தது
மகள்களின் வாழ்க்கையை
எண்ணி வருந்தியே
ஆழ்துளை கிணற்றைபோல்
நீரின்றி கண்களும்
ஆதவன் அக்கினியும்
பேருந்து புழுதியும்
கடுகளவும் பாதிக்கா
கவனச் சிதறலில்
தன்னையே தொலைத்தவளாய்
பூக்கள் தொடுப்பவளாய்
நடைபாதை இரைச்சல்களில்
இருக்கின்றாள் விடை தேடி

ஓவியம்: Ravi Palette

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...