Monday 24 April 2017

அப்பாவின் மிதிவண்டி

தேனீ சேகரித்து கொணரும்
துளி தேன் போல் இனிதாய்
மனதின் ஓரத்தில்
உறைந்து கிடக்கும்
அக்கால நினைவுகள்

காலங்கள் கடந்தும்
மனதிற்கு புத்துயிர் பாய்ச்சும்
பாசமிகு பயணங்களும்
பயணத்தில் விரிந்த பாதைகளும்

ஏற்றமான பாதைகளில்
படபடக்கும் நெஞ்சமும்
காற்றில் கலக்கும் பெருமூச்சும்
அவர் பாசத்தின் வாசமென
ஏனோ அன்றறியவில்லை

"பாரமாய் இருக்கிறதா?"
"இறங்கி நடந்து செல்லவா?"
அன்னையின் கேள்விக்கெல்லாம்
பொய்யையே பதிலாய்த் தருவார்.

முள்தைத்த சக்கரத்தால்
எனை வைத்து நெடுந்தூரம்
தள்ளிச் செல்லும்போது

அவர் உதிர்த்த
வியர்வைத் துளிகள்
நெஞ்சின் ஆழத்தில் உறைந்து
இன்று நினைவு முத்துக்களாய்

அறிஞர்களின் அறிமுகம் கிடைத்ததும்
அறநெறிகளை கதை வழி கேட்டதும்
அவருடான மிதிவண்டிப்பயணங்களில் தான்

முன்சக்கரத்தின் இடையே
கால் இடறி சிக்கியதில்
முள்தைத்த நெஞ்சம்போல்
பதறிவிட்டார் மீசைக்காரர்

குடும்ப அட்டையில்
விடுபட்ட பெயராய்
அப்பாவின் மிதிவண்டி

இன்று வீட்டின் பின்புறம்
பயன்படுத்தா பொருட்களுக்கிடையே
ஒற்றடையால் போர்த்தப்பட்டு
பேச்சு மூச்சின்றி கிடந்தவனை

துடைத்து, குளிப்பாட்டி,
எண்ணெய் வைத்து,
காற்றுசெலுத்தி உயிர்கொடுத்து,

பலவருடங்கள் கழித்து
மீண்டும் மிதித்துச்செல்கையில்
"டிங் டிங்" மணியோசையில்
நிறைந்தது மனது
புலர்ந்தது பொழுது.




#memories #bicycle #childhood #father #lifeonwheels

2 comments:

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...