Wednesday 12 April 2017

கீரைக்காரர்

அசதி மிகுதியில்
பிறக்கும் ஆழ்ந்த
நித்திரை பரிசளிக்கும்
அழகிய அதிகாலை
கனவினையும் கருக்கலைத்து
ஞாயிறு எனினும்
ஞாயிறுக்கு முன் கண்விழித்து
மிதிவண்டி மீதினிலே
சந்தை நோக்கிய
பயணத்தில் அடுத்த
நாள் இனிதே ஆரம்பம்.
வந்திறங்கிய கத்தைகளை
பார்த்தெடுக்க நேரமில்லா
பரபரப்பு நிமிடங்களில்
தன் பங்கினை தக்கவைத்து
மொத்த விலையை
கணக்கு பார்த்து
விலை குறைப்பு முயற்சிகளும்
வழக்கம் போல் அன்றும்
தோல்வியே அடைய
முடிந்து வைத்த காசெடுத்து
முக்கண்ணனை நெஞ்சில் வைத்து
மூட்டைக்கானதை கொடுத்து விட்டு
கிழக்கும் சற்று சிவக்கும் நேரம்
கிழவன் முதுகில் ஏறும் பாரம்
மூட்டை ஒன்றிலே பச்சை கோபுரம்
மீதம் உள்ளதோ பையில் புகுந்திடும்
அடுக்கி வைத்து ஆயத்தம் ஆனதும்
கரீம் பீடியுடன் ஒரு கோப்பை தேனீர்
விரிச்சோடி கிடைக்கும்
விடுமுறை வீதிகள்
விழிக்கும் இவரின் கீரை கூவலில்
கீரை வகைகளின் பெயர்களை சொல்லி
ஊர்ந்து செல்லும் வீதிகளில் வாகனம்
அழைப்பொலி கேட்டு
அங்கும் இங்குமென
வாசல் திறந்திடும் கீரைகள் வாங்க
ஒவ்வொரு வாடிக்கையாளர்
முகம் காணும் போதும்
புன்னகை பிரதிகளையும்
தவறாது தந்திடுவார்
அனைத்தும் எடுத்துவிட்டு
அலசி பார்த்துவிட்டு
கட்டு சிறிது என்றும்
பூச்சி புசித்ததென்றும்
காரணங்கள் சொல்லி
குறைத்து கொடுப்பதுண்டு
ஊரைக் காத்திடும்
காவல் தெய்வங்களும்
தனக்கான காணிக்கையை
காசாகவோ கட்டாகவோ
பிடுங்கிச் செல்வதும் உண்டு
கீரைக்காரர் என
கேட்டு பழகியதில்
தொட்டில் பெயரும்
ஏதோ பழைய ஞாபகமாய்
இலைகள் வாடும் முன்னே
உலைகள் கொதிக்கும் முன்னே
விற்று தீர்த்துவிட
வியர்வை பயணம் இது
நேரம் போவதற்குள்
பொழுது சாய்வதற்குள்
பையை காலி செய்யும்
வேட்க்கை பயணம் இது
வீட்டு கிழவி அவள்
வயிற்றை நிரப்பிவிட
பதறும் கிழவன் இவன்
காதல் பயணம் இது


ஓவியம்: Ravi Palette

#StreetVendors #UrbanEconomy #UrbanVendor #DailyUtilities #TriCycles#PushCarts #Cycles #BasketOverHeads #Vibrant #Traditional#MeetMiddleClassNeeds #Vegetables #Fruits #Greens #Flowers #Garments#VisibleWorkForce #InformalEconomy #PerishableGoods #MenAndWomen#EarnTheirLiving #Survival #LivesOnStreets #Bribe #Police #Keeraikaarar

No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...