Friday 22 June 2018

அம்மாவின் முந்தானை


கசியும் குழந்தையின்
கண்ணீரைத் துடைக்கும்
கொதிக்கும் குழம்பு 
சட்டியையும் இறக்கும்
மழையில் நனைந்த
தலையத் துவட்டும்
மழலைக் காதில்
அழுக்கும் அகற்றும்
மடியில் சாய்ந்தால்
மெத்தையாகும்
வெட்கி மறைய
திரையாய் மாறும்
பங்குனி வெய்யிலில்
விசிறியும் அதுவே
மார்கழிப் பனிக்கு
போர்வையும் அதுவே
தோட்டத்தில் காய்களையோ
வீதியில் உதிரி
சாமந்தியோ அதை
முந்தானையே ஏந்தும்
கொதிக்கும் தனலில்
சமைக்கும் போது
உதிர்க்கும் வியர்வையை
ஒத்தி எடுக்கும்
சமையல் முடித்து
கழுவிய கைகளின்
சொட்டும் ஈரமும்
அதுவே உலர்த்தும்
கதைகள் சொல்லி
ஊட்டி முடித்து
வாயைத்துடைக்க
முந்தானை போதும்
அவள் வாசம் பரவிய
முந்தியைப் பற்றி
ஆனந்தமாய் அவள்
குழந்தையும் துயிலும்

யார் கரை ஒதுங்கியது

நீள் சாலையின்
அடர் நெரிசலில்
சிக்குண்ட வாகனமாய்
அகண்ட வானின்
அறியா பாதையில்
அறுந்த காத்தாடியாய்
பிடிப்பைத் தேடி
உயிர்த் துடிப்பில்
நீந்தும் எறும்பாய்
ஓயா பசியிலும்
தேயா பொறுமையுடன்
ஒற்றைக்கால் நாரையாய்
வார்த்தைக் கடலில்
மையம் கொண்ட
எண்ணப் புயலில்
எங்கோ தொலைந்து
எழுதி அடித்து
மீண்டும் துவங்கி
சுழலில் சிக்கி
ஆழியில் மூழ்கி
மூச்சிரைத்து
கரை ஒதுங்கியது
இறந்த கவிஞனா
பிறந்த கவிதையா


பெண்ணுரிமை

எஞ்சியுள்ள 
கறித்துண்டு 
அவன் தட்டைச் 
சேரும்போதே 
சம உரிமை 
சிதைகிறது


*************


அவன் விரும்பிய
அலைவரிசையே
அந்நாள் முழுதும்
ஒளிபரப்பில்


***************

சுதந்திரமாய்
பறக்கிறாள் அவள்
இவன் அடைத்து
வைத்த கூண்டிற்குள்


******************

50 கிமீ வேகத்தில்
அவள் முந்தியதை
ஏற்கா மனதா
50 சதவிகிதம்
அனைத்திலும்
மனமுவந்து
கொடுக்கும்


****************

அதே அலுவலகத்தில்
அதே பணிக்கு
ஒன்றாய்ச் சென்று
ஒன்றாகவே
வீடடைந்து

அவன் கையில் ரிமோட்
அவள் கையில் கரண்டி

*********************

அவள் சம்பளத்தின்
செலவுக் கணக்கிலும்
இவன் பெயரே
இருக்கிறது

******************

மகனுக்கு
பொறியியல்
மகளுக்கு
இயற்பியல்
சிலர் வீட்டில்
எழுநூறு
எடுத்தவன்
காமர்ஸும்
ஆயிரமெடுத்தவள்
அடுப்படியிலும்
சிலர் வீட்டில்

********************


நான்காவது சுற்று...!

மூச்சிரைக்க மூன்று முறை
பூங்காவை வளம் வந்து
கல்லிருக்கையில் அமர்ந்தவுடன்
இரு தினம் முன்பு 
பரிசோதனை முடிவில்
துடிக்கும் இருதயம்
தவிக்கும் நிலையெனவும்
சர்க்கரையின் சதவிகிதமும்
சற்றே கூடுதலெனவும்
அதிக உடல் எடை
அதிக ஆபத்தெனவும்
மருத்துவர் சொன்னது தான்
அவர் மனதினில் ஒலித்தது
திருமணத்திற்கு நிற்கும் அபிநயா
பிளஸ் டூ பயிலும் அபிஷேக்குடன்
தன்னை தவிர ஏதுமறியா
சிவகாமியின் முகமும்
ராஜேந்திரனின் கண் முன் வர
ஒரு பெருமூச்சுடன்
மீண்டும் எழுந்து
நடக்கத் தொடங்கினார்
சற்றே வேகமாக
நான்காவது சுற்று...!

ஆறறிவு அரக்கர்கள்

வேர் சாய்ந்த
மரத்திற்கு
ஒப்பாரிப் பாடும்
குயில்கள்
இறந்த தட்டானின்
பிரேதத்தை சுமக்கும்
எறும்புகள்
உதிர்ந்த மலரின்
மெளன அஞ்சலியில்
வண்ணத்துப் பூச்சிகள்
வாடும் செடிகளுக்கு
வருத்தம் தெரிவிக்கும்
வண்டுகள்
மரணமும் அழிவும்
இயற்கைக்கு தான்
இந்த ஆறறிவு
அரக்கர்களால்.

Breaking News

எட்டு மணி
ஒளிபரப்பில்
முதன்மைச் செய்திக்கு
பத்து மணி
செய்திகளில்
இடமில்லை
நாட்டை உலுக்லிய
துர்மரணத்தின்
சிதை பற்றுவதற்க்குள்
அச்செய்தி
அனைந்து விடுகிறது
அதே நேரத்தில்
வெளியாகும்
பத்து விவாத
மேடைகளில்
நூறு தலைப்புகள்
ஐ.பி.எல். தடை
வழக்கை
முன்னிலைப்படுத்தி
காவிரி நடுவர் மன்ற
வழக்கு ஒத்திவைப்பு
ஐ.பி.எல் ல்
கலந்துவிட்டதால்
காவிரியும்
கேளிக்கையாய்
வேண்டாமென்றும்
இங்கேயே வேண்டுமென்றும்
போராட்டங்கள்
பரிதாபங்களுக்கிடையில்
பலரின் கனவு
கருவறுக்கப்பட்டதுடன்
சில உயிர்களும்
ஸ்ரீஜாவின்
அரைநிர்வாணப்
போராட்டம்
முதற் பக்கத்தில்,
ஸ்டெரிலைட்டும்
முழு நிர்வாண
விவசாயியும்
இருட்டடிப்பில்
வன்புணர்வொன்றின்
உயிர் சேதத்திற்கெதிராய்
கருப்பு புரொபைல்
மாற்றுவதற்க்குள்
சிவப்பு சட்டை
சேலஞ்சுகள்
எது முக்கியமென
யோசிக்கவிடாது
ஒற்றை நாளுக்குள்
ஓராயிரம் செய்திகள்
எழுதுவதற்காய்
பட்டியலிடுகையில்
அந்த முக்கிய
பட்டியல் வெளியீடு
பிக் பாஸ் - சீசன் டூவில்
ராய்லட்சுமியுடன்
லட்சுமி மேனன்.

துளிகள்

குரங்குகளாகவே
இருந்திருப்பின்
அகிலமே
அடர்வனமாயிருக்கும்.

*****************

ஒரு விதையில்
காடாகும் 
விந்தையும்;
சில கருவில்
காடழிக்கும்
சிந்தையும்.


*******************

சதுரடி நிலத்திற்கென
விலையான போதே
முருங்கைக்கும்
வாழைக்கும்
வழியின்றிப் போனது.


*********************


என்றோ நதிக்கரைகள்
வளர்த்த நாகரீகம் தான்
அந்நதிகளையே
இன்று சூறையாடுகின்றன



************************

வந்தமர்வோரை
ஏற்கும், மறுக்கும்
உரிமை மட்டும்
நாற்காலிக்கு
இருந்திருந்தால் 
வேட்பாளர்களின்
தரம் கூடிப் போகும்



***********************

எதிர்பாரா 
அதிகாலை
அழைப்புகள்
ஏதும்
நற்செய்தி 
தாங்கி
வருவதில்லை.


*********************

அவசரப்பட்டோமென
ஆதங்கப்படுகையில்
அநேகமாய்
அனைத்துமே
முடிந்து தான் 
போயிருக்கும்.


*********************

அந்த கோரத்
தீ விபத்தில்
கருகிய
பதிமூன்று பேரின் 
சாம்பலை
எப்படிப் பகிர்ந்து
கொடுப்பது
எட்டு
சாதியினர்க்கு


*********************

வார்த்தைகள் மரித்த
அவ்வீட்டின்
தனித்தனி அறைகளில்
முகநூல் பகிரி என
சில ஜி.பிகளோடு
கரைகின்ற இரவில்
அடர் மெளனத்தின்
விசும்பலும்



**************************


ஏதோ ஒரு வீட்டில் 
குழந்தையின் 
அழுகுரல் தான்
இவள் அடி 
வயிற்றை புரட்டி
நெஞ்சை 
கனக்கச் செய்கிறது

ஐந்தைவிட ஆறொன்றும் பெரிதல்ல

யானைகள்
பொய்யுரைப்பதில்லை
பூனைகள்
புறம் பேசுவதில்லை
வண்ணத்துப் பூச்சிகள்
வதந்தி பரப்புவதில்லை
குயில்களும்
குறை கூறுவதில்லை
குரோதத்துடன்
குருவியோ
பாரபட்சம் பார்க்கும்
பருந்தோ
எள்ளி நகையாடும்
எறும்போ
ஏசிப் பேசும்
எருதோ எங்குமில்லை
கோள் மூட்டுதலோ
பொறாமை கொள்ளுதலோ
தற்பெருமை பேசுதலோ
தீண்டாமை பழகுதலோ
துரோகம் வஞ்சனை
வயிற்றெரிச்சல்
கோபம் தாபம்
சூது வாது கிடையாது
பழி போடுதல்
பழி வாங்குதல்
பிறர் துயரில்
மனம் துள்ளுதல்
உயர்திணை
தீக்குணங்கள் ஏதும்
அஃறிணையில்
அறவேயில்லை
ஐந்தைவிட
ஆறொன்றும்
எவ்வகையிலும்
பெரிதேயில்லை.


சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...