Tuesday 28 March 2017

போர்க்களம்

காலம் மாற்றுமெனவும்
மறக்கச்செய்யுமெனவும்
சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள்
புத்தகங்களில் மூழ்கு
இசையில் தொலைந்து போ
தியானத்தில் நிலைபடு என்றனர்
பயப்பட தேவையில்லையெனவும்
பாதுகாப்பாய் இருப்பதாகவும்
மீண்டும் நிகழாதெனவும் சொல்கின்றனர்
சங்கடம் மறக்கச் சொல்லி
சந்தோஷமாய் இருக்கச் சொல்லி
சமாதானங்கள் உரைக்கின்றனர்
அனால் வீட்டை விட்டு வெளியே
வீதியில் கால் வைத்தாலே
பீதியும் தொற்றிக்கொள்கிறது
இயற்கையாகவே கழுத்து
வலது பின்புறம் திரும்புகிறது
கண்கள் அங்கும் இங்கும் ஓடுகிறது
மீசையுள்ள முகங்களெல்லாம்
மிருகமாகவே தோன்றுகிறது
மனதும் பயத்தில் நீந்துகிறது
கூட்டமுள்ள பேருந்து பயம்
தனியான சாலை அதிக பயம்
தெரியா விலாசத்திற்கு ஆட்டோவும்
தெரிந்த அலுவலக மகிழுந்தும் பயம்
அதிகாலை வேளையும்
நள்ளிரவு சாலையும் பயம்
திரையரங்கு இருட்டும்
திருவிழா வெளிச்சமும் பயம்
நிறைந்த அரங்கமும்
ஆளில்லா சுரங்கமும் பயம்
தெரிந்த இடத்தில் தெரியா பயம்
தெரியா இடத்தில் அனைத்தும் பயம்
பயத்தினை வென்றிட முயற்சிகள் எடுத்ததுமே
பயமே முந்திப்போய் முயற்சிகள் தோற்க்குதே
ஒவ்வொரு கணமும் பயத்துடன் நகரவே
ஒவ்வொரு நாளும் போர்க்களம் ஆகுதே


Saturday 25 March 2017

குழல்

வாழ்க்கை இதுநாள் வரை
அவனுக்களித்த
சிறு சிறு சந்தோஷத் துகள்களை
சோகப்பெட்டகத்தின்
ஒரு மூலையில்
சேமித்தது வைத்திருந்தான்.

துன்பம் எதிர்ப்படும் போதெல்லாம்
அத்துளிகளிலிருந்து
ஒரு துளி எடுத்து
மனதெங்கும் பரப்பி
சிந்தையிலும் நிறுத்தி

நுரையீரல் கக்கும்
கரிவளிக்கும் உயிர் செலுத்தி
மூங்கில் துளையில் அதை நிரப்பி
காற்றலையில் பிரசவித்தான்

இரைச்சல்களின் இடையினிலும்
இவன் இசைப்பது ஓயவில்லை
இரைப்பையின் சமிஞைகளும்
இவன் இயக்கத்தை நிறுத்தவில்லை

நெரிசல்களின் மத்தியிலும்
உயிரிசை அது உன்னதமே
விரிசல்களும் கூடிக்கொள்ளும்
இசைக்கு அது சாத்தியமே

கதிரவனும் இசைகேட்டு
தன் சூடினைதான் தனித்துக்கொண்டான்
தென்றலுமே முத்ததெடுக்க
அவன் உடலை தழுவிக் கொண்டான்

இசை கக்கும் இவனுக்கோ
குழல் விற்பது நோக்கமில்லை
குழல் விற்பது நடந்தேறின்
இல்லாளும் குழல் இசைப்பாள்
இவன் குழலோ செவிக்குணவு
அவள் குழலோ வயிற்றுக்கு


படம்: ஓவியர் ரவி
https://www.facebook.com/ravi.artist.98

Thursday 23 March 2017

அரிதாரம்

அவதாரம் போலே
அரிதாரம் பூசி
அரை வயிறு நிரப்ப
அல்லல் வாழ்க்கை

பண்ணிசைத்த பலருக்கு
நேரில் வந்த அவனோ
என் இசைக்கு இதுவரை
கனவிலும் கூட இல்லை

நீளமான சாலையிலே
கடும் வெயிலில் பயணம்
நீல நிற வியர்வை
என் அரிதாரம் கலையும்

சோதனை வாழ்க்கையினை
வேதனையுடன் சொல்ல
செவிசாயா கூட்டத்தில்
நாவறண்டு போகும்

அரை கதவு இடுக்கினிலே
தலை எட்டி பார்க்கும்
அரையணா தந்துவிட
அரைமனது மறுக்கும்

எலும்பு தெரியும்
தெரு நாயும்
என்னை கண்டதும்
குரைக்கும்

கடவுளே நீ
பூமி வந்தால்
என்நிலை தான்
உனக்கும்

சிலுமிஷச் சிறுவர்கள்
சீண்டியும் பார்ப்பார்
கடவுளாய் கிடைப்பதனால்
புன்னகையே உதிர்ப்பேன்

ஈர மனங்களை
காணாத நாளில்
ஈரத்துணி தான்
துணையாகிப் போகும்

வருகின்ற சில்லரையில்
வண்ணங்கள் வாங்கி
எஞ்சியதில் கிடைப்பதெல்லாம்
அரை கட்டு பீடி

சிலையாகிக் கிடந்தாலும்
சில்லரைகள் சேரும்
உயிராகி உலவுவதால்
இன்னல்கள் தான் நேரும்

தோற்றமோ பன்னிறத்தில்
பொலிவுடனே இருக்க
வாழ்க்கையோ இதுநாள் வரை
நிறமின்றி இருட்டில்


படம்: ஓவியர் ரவி
https://www.facebook.com/ravi.artist.98

Tuesday 21 March 2017

என் பாதையை நான் அறிவேன்

நான் பார்வையற்றவன் அல்ல
என் பார்வைகள் வேறு
கதிரவனை வெப்பத்தாலும்
நிலவினை குளுர்ச்சியாலும்
பார்க்கிறேன்

ஒளியும் நிறமும்
ஒன்றுமில்லை
ஒலியின் துணையில்
வாழும் எனக்கு

கண்கள் தேவையில்லை
செவியால் பார்க்கும் எனக்கு

கொசுவின் ரீங்காரம்
தென்றலின் தழுவல்
மலரின் வாசம்
உயிர்களின் சுவாசம்
குயிலின் கானம்
ரயிலின் ராகம்
என அனைத்தும் அறிவேன்

என் உலகில் நானே பிரம்மன்.
அனைத்திற்குமான உருவத்தை
நானே சிருஷ்டிப்பேன்
அந்த பிரம்மனையும் சேர்த்து

மகிழ்ச்சியை வெளிப்பாடு
பெருந்துயரின் மௌனம்
நான் அறிவேன்

சிரிப்பொலியின் சப்தமும்
விசும்பலின் ஓசையும்
நன்கறிவேன்

இரயிலின் ரீங்காரத்தில் என் உதயம்
இரைச்சல்களின் இடையிலே
என் பகல் பயணம்

கடலை விற்கும் கண்ணன்
கைக்குட்டை விற்கும் மதி
மொழம் போடும் செல்வி
பழக்கூடை ராசாத்தி
இவர்களை பார்க்க
குரல் கூட வேண்டியதில்லை
அருகில் வந்தாலே
உணர்ந்துகொள்வேன்

எண்ணெழுத்து தெரியாதெனினும்
எழுதுகோல் விற்கின்றேன்

ஏதும் பேசாமலே
வாங்குபவரும் உண்டு
எல்லாமே கேட்டுவிட்டு
பார்க்கர் இல்லையா
என்பவர்களும் உண்டு

உச்சு கொட்ட வேண்டாம்
உமிழ்ந்து துப்ப வேண்டாம்
பிச்சை கேட்கவில்லை
பரிகாசம் செய்ய வேண்டாம்

எங்கேயோ பார்த்து வந்து
என்மீது மோதிவிட்டு
பார்த்து வரக்கூடாதா என்று
சொல்லிச் செல்லும்
குருடர்களும் உண்டு

வானொலி என்
உடன் பிறவா சகோதரன்
இசை என்னை தினமும்
தாலாட்டும் தாய்
இடையிலே கொசுக்களும்
அவ்வப்போது
என் காதில் கவிதை
சொல்லிப் போகும்

இன்றைய சந்தோஷங்களை
அசை போட்டு
இரவைக் கடந்து,
நாளைய விடியலுக்காய்
நம்பிக்கையுடன் நான்.

என் கைத்தடி
என் தடம் அறியும்
என் பாதையை
நான் அறிவேன்


படம்: ஓவியர் ரவி
https://www.facebook.com/ravi.artist.98

Sunday 12 March 2017

காணிக்கை

காணிக்கைக்கு
வெச்சிருந்த
அஞ்சிருவா
கால் சட்ட
ஓட்ட வழி
தொலைஞ்சு போவ
வேண்டுதலு
நடக்குமோனு
பயத்துல தான்
மேலத்தெரு
மாணிக்கம்
ஒக்காந்திருந்தான்.

மணி அடிச்சு
கணக்கு டீச்சர்
உள்ள வர
கையில தான்
அரை பரீட்சை
கட்டிருக்க
வரிசை படி
ஒவ்வொருத்தரா
கூப்டு விட
மாணிக்கம் மனசு
ரொம்ப பாரமாச்சு

நெத்தியெல்லாம்
வேர்வையாள
பூத்துப்போச்சு
கையிலுள்ள
ரேகையெல்லாம்
ஊத்து ஆச்சு
இவன் பேரையும்
கணக்கு டீச்சர்
கூப்புட்டாச்சு

ஓட்டையான
கால் சட்டைய
நொந்துக்கிட்டு
பெரம்படிய தாங்கிக்கிட
நெனச்சுக்கிட்டு
ஒருவழியா
முன்ன போய்
அவனும் நிக்க
பெயில் இல்ல
பாஸ்னு
டீச்சர் சொல்ல
தலையசுத்தி
மயக்கம் வந்து
விழுந்துபுட்டான்.


இயற்கையை காப்போம்

எந்திரங்கள்
பிளக்கின்றன
இயற்கைதாயின்
இதயத்தை
அமுதம் சுரக்கும்
அவள் மார்பை
துளைத்து
மீத்தேன் வாயுவும்
கச்சா எண்ணையும்
வேளாண் நிலங்களின்
கருவினை அறுத்து
சுரண்டும் வர்த்தகம்
வங்கியை நிரப்பலாம்
வயிற்றை நிரப்பாது
அதீத பணமும்
எந்திர மனமும்
இடுகாட்டிற்க்கே
பாதை காட்டும்
பயிர் செய்பவன்
சமாதியில் மிஞ்சும்
கடைசி கல்
உன் சமாதிக்கான
முதல் கல்


Wednesday 8 March 2017

மகளிர் தினம்

ஆழ்கடல் ஆராய்ச்சியும்
மண்ணியலும் விண்வெளியும்
ஓவியமும் ஆயுதமும்
மென்பொருளும் மெல்லிசையும்
அவள்செல்லா திசையில்லை
அவளில்லா இடமில்லை
கலைமகளின் கரம்பற்றி
அலைமகளை அடைந்தாலும்
சம்பளக் கணக்கட்டை
கணவரின் கைப்பிடியில்
#மாற்றம் வேண்டும்



முதுமை முத்தமிட்டு
முதுகுத்தண்டு
வளைந்தபோதும்
ஐந்தடிக்கு அப்பால் உள்ளது
அறவே கண்ணில் 
தெரியாதபோதும்
நான்கடி நடந்து செல்ல
கைத்தடி கட்டாயமானபோதும்
வாய்க்கு அரிசி
விழுந்திடும் வரையில்
ஒற்றை பருக்கை
கையேந்திப் பெறேன் என
கோவில் வாசலில்
கூடை வைத்து
முல்லையும் மல்லியும்
சம்பங்கி சாமந்தியும்
அழகாய் தொடுத்து
ஆனந்தமாய் விற்கிறாள்
மலர்ந்த முகம் கொண்ட
பொக்கை வாய்
பொன்னம்மா



எடுத்து சொருகிய
நேற்றைய புடவையில்
திருத்தமாய் வாராத
களைந்த முடியுடன்
உதிர்த்த வியர்வையால் 
ஒழுகும் சாந்துடன்
அலாரமாய் பிள்ளைகளுக்கு
அறைகூவல் விடுத்தது
செய்தித்தாளும் தேநீரும்
கணவனுக்கு கொடுத்து
கத்தும் குக்கரை
தலையில் தட்டி
காலை மதிய
உணவும் படைத்து
அவருடன் குழந்தைகளை
வழியனுப்பி வைக்கும்
பெண்ணே நீ
அழகிய தெய்வம்

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...