Thursday 23 March 2017

அரிதாரம்

அவதாரம் போலே
அரிதாரம் பூசி
அரை வயிறு நிரப்ப
அல்லல் வாழ்க்கை

பண்ணிசைத்த பலருக்கு
நேரில் வந்த அவனோ
என் இசைக்கு இதுவரை
கனவிலும் கூட இல்லை

நீளமான சாலையிலே
கடும் வெயிலில் பயணம்
நீல நிற வியர்வை
என் அரிதாரம் கலையும்

சோதனை வாழ்க்கையினை
வேதனையுடன் சொல்ல
செவிசாயா கூட்டத்தில்
நாவறண்டு போகும்

அரை கதவு இடுக்கினிலே
தலை எட்டி பார்க்கும்
அரையணா தந்துவிட
அரைமனது மறுக்கும்

எலும்பு தெரியும்
தெரு நாயும்
என்னை கண்டதும்
குரைக்கும்

கடவுளே நீ
பூமி வந்தால்
என்நிலை தான்
உனக்கும்

சிலுமிஷச் சிறுவர்கள்
சீண்டியும் பார்ப்பார்
கடவுளாய் கிடைப்பதனால்
புன்னகையே உதிர்ப்பேன்

ஈர மனங்களை
காணாத நாளில்
ஈரத்துணி தான்
துணையாகிப் போகும்

வருகின்ற சில்லரையில்
வண்ணங்கள் வாங்கி
எஞ்சியதில் கிடைப்பதெல்லாம்
அரை கட்டு பீடி

சிலையாகிக் கிடந்தாலும்
சில்லரைகள் சேரும்
உயிராகி உலவுவதால்
இன்னல்கள் தான் நேரும்

தோற்றமோ பன்னிறத்தில்
பொலிவுடனே இருக்க
வாழ்க்கையோ இதுநாள் வரை
நிறமின்றி இருட்டில்


படம்: ஓவியர் ரவி
https://www.facebook.com/ravi.artist.98

2 comments:

  1. அரிதாரம் அழகுக்கு அழகு சேர்க்கிறது...ஓவியம் மிக அழகு...வாழ்த்துக்கள்.... மேலும் அழகு சேர்க்க....

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...