Tuesday 21 March 2017

என் பாதையை நான் அறிவேன்

நான் பார்வையற்றவன் அல்ல
என் பார்வைகள் வேறு
கதிரவனை வெப்பத்தாலும்
நிலவினை குளுர்ச்சியாலும்
பார்க்கிறேன்

ஒளியும் நிறமும்
ஒன்றுமில்லை
ஒலியின் துணையில்
வாழும் எனக்கு

கண்கள் தேவையில்லை
செவியால் பார்க்கும் எனக்கு

கொசுவின் ரீங்காரம்
தென்றலின் தழுவல்
மலரின் வாசம்
உயிர்களின் சுவாசம்
குயிலின் கானம்
ரயிலின் ராகம்
என அனைத்தும் அறிவேன்

என் உலகில் நானே பிரம்மன்.
அனைத்திற்குமான உருவத்தை
நானே சிருஷ்டிப்பேன்
அந்த பிரம்மனையும் சேர்த்து

மகிழ்ச்சியை வெளிப்பாடு
பெருந்துயரின் மௌனம்
நான் அறிவேன்

சிரிப்பொலியின் சப்தமும்
விசும்பலின் ஓசையும்
நன்கறிவேன்

இரயிலின் ரீங்காரத்தில் என் உதயம்
இரைச்சல்களின் இடையிலே
என் பகல் பயணம்

கடலை விற்கும் கண்ணன்
கைக்குட்டை விற்கும் மதி
மொழம் போடும் செல்வி
பழக்கூடை ராசாத்தி
இவர்களை பார்க்க
குரல் கூட வேண்டியதில்லை
அருகில் வந்தாலே
உணர்ந்துகொள்வேன்

எண்ணெழுத்து தெரியாதெனினும்
எழுதுகோல் விற்கின்றேன்

ஏதும் பேசாமலே
வாங்குபவரும் உண்டு
எல்லாமே கேட்டுவிட்டு
பார்க்கர் இல்லையா
என்பவர்களும் உண்டு

உச்சு கொட்ட வேண்டாம்
உமிழ்ந்து துப்ப வேண்டாம்
பிச்சை கேட்கவில்லை
பரிகாசம் செய்ய வேண்டாம்

எங்கேயோ பார்த்து வந்து
என்மீது மோதிவிட்டு
பார்த்து வரக்கூடாதா என்று
சொல்லிச் செல்லும்
குருடர்களும் உண்டு

வானொலி என்
உடன் பிறவா சகோதரன்
இசை என்னை தினமும்
தாலாட்டும் தாய்
இடையிலே கொசுக்களும்
அவ்வப்போது
என் காதில் கவிதை
சொல்லிப் போகும்

இன்றைய சந்தோஷங்களை
அசை போட்டு
இரவைக் கடந்து,
நாளைய விடியலுக்காய்
நம்பிக்கையுடன் நான்.

என் கைத்தடி
என் தடம் அறியும்
என் பாதையை
நான் அறிவேன்


படம்: ஓவியர் ரவி
https://www.facebook.com/ravi.artist.98

2 comments:

  1. Semalines nandhu..... really super i like it.. """"unarvugal pothume athan uruvam thevaiya"""" indha varigal ninaivirku varugirathu.....💐💐💐🌹🌹🌹🌹

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...