Friday 27 January 2017

மழை

ஏரி ஓடை கிணறுகளும்
தாகத்தில் தவித்திருக்க
நெடு நாள் வறட்சியில்
காடு கழனி வெடிப்புற்று

விதைத்தது முளைக்காமல்
முளைத்தது வளராமல்
வளர்ந்தது பூக்காமல்
பூத்தது காய்க்காமல்

காய்த்தது கனியாமல்
கனிந்தும் விலைபோகாமல்
சோலையூர் கிராமமே
பாலையாய்க் கிடந்தது

இரு ஊர் தள்ளி சென்று
ஒரு குடம் நீரெடுத்து
தங்கம் போல் சேமித்து
கண்ணாக அதைக் காத்து

ஒவ்வொரு துளியையும்
கருத்தாக பயன்படுத்தி
தண்ணீரில் திளைத்த காலம்
தூரத்து ஞாபகமாய்

நீரிருக்கும் திசை நோக்கி
கால்கள் இடம் பெயர
ஆயிரம் குடும்பங்கள்
பாதியாய் குறைந்ததிங்கு

கலப்பையை பிடித்த கைகள்
கட்டுமானப் பணிகளிலே
உணவு படைத்தவர்கள்
உணவகத்தில் வேலையிலே

ஊரிலுள்ள பெரியவர்கள்
கலந்து பேச ஒன்று கூடி
தெய்வத்தால் ஆகுமென
ஒருசேர முடிவெடுத்து

மாரி அது பொழியத்தான்
மாரியம்மன் விழா நடத்தி
நேர்த்திக்கடன் பாக்கியெல்லாம்
நேரத்தே தீர்த்துவைத்து

கழுதைகள் மணம் முடிந்தும்
மனமிரங்கா மழை மேகம்
மாரியப்பன் மாண்ட செய்தி
முரசு கொட்டி அறிவிக்க

மேகமும் மனம் வருந்தி
இரங்கலை தெரிவிக்க
கடைசியாய் கண்ணீரை
தூறலாய் தூறியது.











Wednesday 25 January 2017

குடியரசு தினம்..?!

குடியரசு தினம்...?!

உலகின் மிகப்பெரிய
குடியரசாம்,
மிக நீளமான
அரசியலமைப்பாம்.

சமூகத்துவமும்,
சமயச்சார்பின்மையும்
என்கிறது அரசாங்கம்.
காவிகளின் ஆட்சியென
குடிமக்கள் ஒருசாரார்.

சமத்துவமும், சமநிலையும்
லஞ்சம் ஊழலில் மட்டும்.
வாய்ப்புகள் திறமைக்கல்ல,
சட்டங்கள் வகுத்தவனுக்கல்ல.

ஒற்றுமையும் ஒருமைப்பாடும்
நாம் ஒன்றுபட்டு
இருக்காததில் மட்டும்.

உடன்பிறப்புணர்வெல்லாம்
வீட்டிற்குள்ளேயே அரிதாக.
நாட்டில் இல்லையென்பதற்கு
ஸ்வாதியும் நிர்பயாவும் சாட்சி.

குடியுரிமையும் வாழ்வுரிமையும்
கேள்விகள் கேட்காதவர்க்கு மட்டும்.

அனைவருக்குமாய்
இயற்றப்பட்ட சட்டம்
ஒரு சிலரின் சட்டைப்பையில்.

அனைவருக்கும் சமபாதுகாப்பாம்.
சமீபத்தில் பார்த்தோம்
தமிழகம் முழுவதும்.

தமிழக மீனவன் குரல்
எங்கள் பாராளுமன்றத்தில்
ஒலிப்பதில்லை.
தமிழக மாணவர்கள்
போராட்டத்தை நடுவண் அரசு
மதிப்பதேயில்லை.

அனைத்தும் அனைவருக்கும்
சமாய் இருப்பது
உண்மையெனில்
காவிரிக்கு ஏன்
எல்லைக் கோடுகள்?

விவசாய நாட்டின்
தலைப்புச் செய்திகளில்
துயர் மரணங்கள்.

தீர்ப்பெழுதும்
பேனா முனைகள்
யாரோ விலைகொடுத்து
வாங்கியதே
நடுநிலை இல்லா
நீதிமன்றங்கள்

மக்களை சுரண்டும்
திட்டங்கள் வகுக்கும்
மக்களவை கூட்டங்கள்

அடிப்படை வசதிகள்
அநேகம்பேருக்கில்லா
நிலையில்,
ஆன்லைன்
வர்த்தகத்திற்கு
மாறுவோமென முழக்கங்கள்.

தூய்மை இந்தியா
திட்டத்தின் வெற்றியை
வெட்டவெளிக்
கழிப்பிடங்களில்
கொண்டாடும் மக்கள்.

தொழில் செய்ய
ஏற்ற சூழல்
அந்நிய நிறுவனங்களுக்கே
வேலை வாய்ப்பு
என்னும் பெயரில்
இயற்கை வளங்களை
விற்கும் ஒப்பந்தங்கள்.

மனிதர்களை
அடித்து மிதித்து
மிருக வதைக்கு
போர்க்கொடிகள்

பல இடங்களில்
தீண்டாமை மிளிரும்
தேநீர் குவளைகளில்,
காதலின் கழுத்தறுக்கப்படும்
சாதிய சாக்கடையில்
பிரகாசமாய் ஒளிர்கிறது
டிஜிட்டல் இந்தியா

தமிழை
இந்திய நாட்டின்
அங்கீரிக்கப்பட்ட
மொழியாகவும்
ஏற்றுக்கொள்ளா
சமூகம் உள்ளவரை
ஹிந்தி பயிலாததை
தேச துரோகம் என்று
சொல்லும் சகோதரர்கள்
உள்ள வரை

வேற்றுமையில்
ஒற்றுமையெல்லாம்
வெறும் வாசகமே
குடியரசு தினமும்
ஞாயிறு போல்
வெறும் விடுமுறையே.

#republicday #january26 #india #indianconstitution



Thursday 19 January 2017

பெங்களூர் தமிழர்குரல்


ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், உலகின் பல நாடுகளிலும் தமிழினம் நடத்தும் போராட்டங்களைத் தொடர்ந்து இன்று பெங்களூர் தமிழர்கள் ஜல்லிக்கட்டிற்காக ஒன்று கூடினர். தெளிவான முன்னறிவிப்பின்றியே இன்று பலர் கூடியிருந்தனர். சரியான திட்டமிடல் இருந்துருப்பின் இதுவே இன்னும் பெருமளவில் இருந்திருக்கும். கடைசி நிமிடம் வரை இன்று கூட்டம் இருக்கிறதா என்ற கேள்விகள் இருந்துகொண்டே இருந்தன. இருப்பினும் ஒரு பெரும் கூட்டம் கூடியது.

இக்கூட்டமும், கூச்சலுமே தமிழர் உணர்வை பிரதிபலித்தது. கடந்து செல்வோரை ஒரு கனம் திரும்பிப்பார்க்க வைத்தது. சாலை போக்குவரத்து  நெரிசலையும் சத்தத்தையும் விஞ்சி விண்ணைக் கிழித்த முழக்கங்கள் தமிழுணர்வை ஊட்டின. அங்கிருந்த ஒவ்வொருவர் குரலிலும் போர்த்தன்மை இருந்தது.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பங்கேற்றது ஆரோக்கியமான விசயம். பெண்களும் பெருமளவில் வந்திருந்தனர். பெங்களூர் தமிழர்கள் சனிக்கிழமைகளில் பிரிகேட் ரோட் பப்களுக்கும், ஐ.பி.எல். விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமின்றி தமிழ் பாரம்பரியம் காக்கவும் கூடுவர் என்பதையே இக்கூட்டம் அறிவித்தது. அடுத்தடுத்து நடக்கவிருக்கும் கூட்டங்களின் முன்னோடியாகவே இது பார்க்கப்படுகிறது. உலகத்தமிழர்கள் ஒன்றாக குரல் கொடுப்போம், தமிழர் உணர்விற்க்கு எல்லோரும் உயிர் கொடுப்போம்.










#ஜல்லிக்கட்டு #ஏறுதழுவல் #தமிழர் #தமிழர்உணர்வு #போராட்டம் #பீட்டாஎதிர்ப்பு #பெங்களூர்

#supportjallikattu #bangalore #tamils #banpeta #bengaluru #savejallikattu #bangaloretamils

Thursday 12 January 2017

விவசாயி நிலை

பாதம்
பாலையாய்
வெடித்தபோதும்
சோலையைக்
கண்டு
புன்னகைத்தான்.

கதிரவன்
கரங்கள்
கொளுத்தியபோதும்
நெற்கதிர்
தலையசைக்க
மனங்குளிர்ந்தான்.

மண்வெட்டி
பெருவிரலை
வெட்டியபோதும்
சேற்றை
அள்ளிப்பூசி
காயம் மறந்தான்.

வயலே
வீடாய்
உழவே
வாழ்க்கையாய்
நிறைவாய்
உணவு படைத்தான்.

நீரின்றி
பயிர்கள்
தலைசாய
மடியேந்தி
மனமுடைந்து
உயிர் நீத்தான்.

#farmer #death


விவசாயி தற்கொலை

வண்ணக்
கோலங்கள்
வாசலில்
இட்டவள்
விதவைக் 
கோலத்தில்
இவ்வருடம்


தாலிச்சரடின்
கடைசி குண்டுமணியை
நெல்மணி வாங்க
அவள் கழற்றித்
தரும்போது
சத்தியமாய்
நினைக்கவில்லை
மூன்றே மாதத்தில்
அவள் தாலி
அறுவடை என்று.


இரைப்பையை
பட்டினி போடாது
நிரப்பி
நிறைவாய்
ஒரு தூக்கம்


ஜல்லிக்கட்டில்
உயிர் போவதாய்
அக்கறை காட்டும்
அரசே
அது நடக்காமலே
பல உயிர்கள்
போகிறதே


போகிப் பண்டிகையில்
எரிக்கப்பட்டது
நேற்று இறந்தவன்
உடல்


தை பிறந்தால்
வழி பிறக்குமென
நம்பினான்.
வழி பிறந்தது
இடுகாட்டிற்கு.


இந்த
பொங்கலுக்கும்
அவன் வீட்டில்
சொந்தங்கள்
எல்லாம் 
கூடியது
குலவிச்சத்தத்துடன்
பொங்க வைக்க
அல்ல
சங்கு முழக்கத்துடன்
ஒப்பாரி பாட.


அடுத்தபோகம்
அமோகமாய்
இருந்தால்
ஆத்தாளுக்கு
கெடாவெட்டி
பொங்கல் வைக்க
முடிஞ்சுவெச்ச
மஞ்சதுணிகாசுக்கு
இப்ப வேலை
வந்துருச்சு
இறுதியாத்திரை
செலவு...


பாடை
கட்டுவதற்காய்
வெட்டிய
ஓலையிலும்
தெரிகிறது
வறட்சியின்
ரேகைகள்


இவன்
தோட்டத்து
விலைபோகா
சாமந்தி
இறுதியாய்
அலங்கரித்தது
இறுதி
ஊர்வலத்தை


செழிப்பாய்
வளர்ந்த
நவதானியங்களை
அவன்
சிரித்துக் கொண்டே
பார்க்கிறான்.
இறந்தவன்
படத்தின் முன்
முளைப்பாரி


ஏர்முனை
மண்ணில்
புதைவதெல்லாம்
அப்போது
ஏரோட்டுபவனே
புதைகிறான்
இப்போது


வறட்சி நிவாரணப்
பெயர் பட்டியலில்
பெயரைச் சேர்க்க
விலை கேட்டதால்
மானஸ்தன்
மாண்டுவிட்டான்


நிவாரண நிதி
சற்றே
தாமதமாய்
வந்தது
பதினாறாம் நாள்
காரியத்தன்று..


இரு சொட்டு 
நீரில்லா
நிலத்திற்கு
சொந்தக்காரன்
இருகுட
தண்ணீரில்
ஊர்பார்க்க
ஒரு குளியல்.


கல் சுமக்க 
போயிருந்தால்
இருகால்களால்
நடந்திருப்பேன்
நெல் சுமக்க
நினைத்துதான்
எட்டு காலில்
தவழ்கிறேன்


இந்த தையிலும்
பானை விற்பனை
அமோகமாம்.
இறுதிச்சடங்கில்
பிணத்தை
சுற்றி வந்து
உடைப்பதற்கு.


அறுவடைத் திருவிழா
ஆரவாரமின்றி
அமைதியாய்,
விழாக் கூட்டத்தைவிட
இரங்கல் கூட்டங்கள்
அதிகமானதால்.


மூன்றுக்கு
மூன்று
குழியில் 
தென்னை
நட்டவனோ
ஆறுக்கு
நான்கு
குழியில்
அசதி தீர
தூங்குகிறான்.


ஒவ்வொரு முறை
பறிக்கும் போதும்
தனியாய் தொடுத்து
அன்பாய் சூட்டியவன்
ஏனோ இன்று
ஒரேடியாய்
பறித்துக்கொண்டான்.
#மல்லிப்பூ விவசாயி.


புத்தாண்டில்
சுவற்று அணியில்
புதிதாய் மாட்டினாள்
பயிர்கள் வாடக் கண்டு
உயிர் விட்ட
தன் கணவன் படத்தை.


காலனுக்கு
ஏனிந்த
அகோரப் பசி
உணவு 
படைப்பவர்களை
மொத்தமாய்
உண்டு
களிக்கிறான்.


தாரையும் 
தப்பட்டையும்
தான் 
அவனுக்கு
சோறு போடுகிறது.
இருந்தும்
அவனுமே
வருந்துகிறான்
விவசாயி எழவில்
இசைக்க.


சர்க்கரைப் 
பொங்கலும்
லேசாய் 
கசக்கிறது
மேலும் ஒருவர் 
எனும் செய்தி
காதில்
ஒலிக்கையிலே


அரசாங்கம்
அறிவிக்கும்
பொங்கல் பரிசு
ஆண்டுகளாக;
மாறுதலுக்காய்
இந்த ஆண்டு
வறட்சி நிவாரணம்


நெல் விளைவித்து
வாழ்ந்தவனை
புதைத்த இடத்தில்
புல் கூட
முளைக்கவில்லை












Tuesday 10 January 2017

ஆசைச்செல்வி

சரோஜினி நாயுடு, கமலாபாய்,
டாக்டர் முத்துலட்சுமி, எம் எஸ் சுப்புலட்சுமி
அன்னை தெரேசா, அன்னை இந்திரா,
கிரண் பேடி, லத்திகா சரண்,

அருந்ததி ராய், ஐஸ்வர்யா ராய்,
சானியா மிர்சா, சைனா நேவால்,
இந்திரா நூயி, அருந்ததி பட்டாச்சார்யா,
ஆசைச்செல்வி

அனைவரையும் பற்றி பேச ஆயிரம் இருப்பினும்
ஆசைச்செல்வியை பற்றி ஆழமாய் பார்ப்போம்
வாழ்க்கையும் குடும்பமும் அனைவருக்கும் பிரகாசிக்க
இவளோ தன் வாழ்வினை இருட்டாக்கி
குடும்பத்தில் அடுப்பேற்றினாள்

கனவுகள் நனவானதில் அனைவரும் பிரபலம்
கனவுகள் புதைந்து, வாழ்க்கை சிதைந்ததில் தான்
ஆசைச்செல்வி ஜனனம்

உழைத்த கைகளும் ஓடிய கால்களும்
பக்கவாதத்தால் ஓய்வெடுக்க
ஏழு இரைப்பைகளை நிரப்பும் பொறுப்பு
மூத்தவள் தலையில்

பருந்து நடத்தும் பஞ்சாலையில்
பணிக்கு சென்ற கோழிக்குஞ்சு
பருந்தின் பசிக்கு இரையாக வாழ்க்கை புரண்டது

சிதைந்த உடல் மேலும் சிதைய
ஓடும் ரயிலினை எதிர்க்க துணிந்தாள்
எதேர்ச்சியாய் அவளை சரோஜா மீட்டு
தன்னுடன் அழைத்து அடைக்கலம் தந்தாள்

அவளது வாழ்வின் சாரம்
இவள் வாழ்க்கை கப்பலை திசை திருப்ப
அவள் பாதையே நடக்க இவளும்  துணிந்தாள்

ஏழ்மையின் பிடியில் சிக்கிய கற்பை
செல்வம் மீட்டதில் அவள் வாழ்க்கை இருண்டது
இவளின் இருண்ட தருணத்தில் குடும்பம் ஒளிர்ந்ததால்
இருளும் தொடர்ந்தது

விலைப் பட்டியலில் பெண்மை சேர்ந்த நாள்
அது ஆண் வர்கம் தலைகுனிய வேண்டிய நாள்

சிலரின் அந்தரங்கத்தை புரட்டடிப் பார்த்தால்
பல படுக்கைகளின் விலாசம் இருக்கும்.
உன் விலாசம் தேடி வருபவனை விட
நீ  என்றும்  உயர்ந்தவளே

தனியொருவன் சுவைத்து படிக்க
இயற்றப்பட்ட உயிர்க்கவிதை - பெண்
காலத்தின் பிழையால் தனிக்கவிதை பொதுநூலகத்தில்

தமிழறியா தற்குறிக்கு ழகரம் புரியாததுபோல்
மொழியறியா முரடனும், கவியறியா காமுகனும்
காசிருக்கும் காரணத்தால் கவிதையுடன் தனிமையில்

இலக்கணம் மீறிய புணர்ச்சி விதிகள்
இங்கே அணைக்கும் கரங்கள் ஆயிரம் இருந்தும்
ஆறுதல் விரல்கள் கண்ணீர் தொடைக்க இல்லை.

தனது ஆசைகளுக்கு கொல்லி வைத்து
பிறர் ஆசைகளுக்காகவே வாழும்
மிகச் சிலருள் ஒருத்தி நீ

உன்னையே அழித்து
உன் குடும்பத்திற்கு ஒளி தருவதால்
நீயும் மெழுகுவர்த்தியை

ஆசைச்செல்விகள் அவனியில் இல்லையெனில்
கற்புக்களவுகள் அதிகமாகிப் போயிருக்கும்
இன்றைய கற்புக்கரசிகளே ஒரு நிமிடம்
நன்றி சொல்லுங்கள் அவளுக்கு

அவள் இழப்புகளை ஈடுகட்ட ஏழுலகம் போதாது
துயரத்தை எதுத்துச்சொல்ல தமிழில்
வார்த்தைகள் கிடையாது


Monday 2 January 2017

பழயசோறு

அரசாங்கம் குடுத்த இலவச சைக்கிள் எத்தனை பேருக்கு பயன்பட்டுச்சுன்னு  தெரில, ஆனா  பதினாறு  கிலோமீட்டர்  தள்ளிப்போய்  பதினோறாம் வகுப்பு  படிச்ச குருவிமலை  குணசேகருக்கு  நிச்சயம் அது வாழ்க்கையே  குடுத்துச்சுனு தான்  சொல்லனும். எடுத்ததுமே  அம்பதாயிரம்  சம்பளத்துல  ஐ.டீ கம்பேனில  வேல பாத்துகிட்டு  ஏதாச்சும் தனியார்  தொலைக்காட்சி  நடத்தர  வெட்டிப் பேச்சு  நிகழ்ச்சிக்கு வந்து  இலவசத்த தட பண்ணனும்.... அப்படி பன்னா அதுல மிச்சமாகுற  வரிப்பணத்துல  நான்  இன்னும்  ஒரு சனிக்கெழம  குடிச்சுட்டு  கூத்தடிப்பேன்னு   வெட்டி  நியாயம்  பேசுறவனுக்குலாம் , ஒத்த பையன வெச்சுட்டு ஒத்தையுல  கஷ்டபடற ஓச்சாயி  பத்தி  ஒரு நாளும்  தெரியாது.

பொறந்த  எடத்துல  சுகமா  இருந்தவனாலும் வாக்கப்பட்டு  வந்த  எடம் ஒன்னும் பெருசா இல்ல . அவ புருஷன்  பன்னிட்டு  இருந்த  சின்ன  வியாபாரமும் சின்னா பின்னமாக, சீக்கிரம் ஊர  காலிபன்னிட்டு குருவிமலைக்கு வந்துட்டாங்க. நாச்சியப்பன்  ஏதோ கட்டட வேலைக்கு  போய்வர,  பத்துமாச கைக்கொழந்த  வெச்சிக்கிட்டு படாதபாடு  பட்டா இந்த  ஓச்சாயி . வரி  கட்றதா   நெனச்சிக்கிட்டு  வாங்கர   கூலில  பாதி அரசாங்கத்துக்கே செலவு  பன்ன, ரெண்டே  வருசத்துல  ஒத்தைல  நின்னா   ஓச்சாயி . காட்டு வேல , வீட்டுவேலனு  இவ   எவ்ளோ  கஷ்டப்பட்டாலும் , அவ  பையன  மட்டும்  பசிக்கு  அழாம பாத்துக்கிட்டா.

ஆத்தா  கஷ்டப்படறதயே  பாத்த  அந்த  பிஞ்சு  மனசு, படிச்சு  பெருசாகி அத  கஷ்டபடமா  பாத்துக்கணும்னு மட்டும்  வைராக்யமா  இருந்தான். எட்டாத இஞ்சினீரியங்குக்கு   அரசு சலுகை  ஏணியா கைகுடுக்க,  எட்டிப்புடிச்சு  இப்ப  அவன், இஞ்சினீயர்  குணசேகர். அவன் ஆத்தா ஆசப்படியே   சொந்த  ஊர்ல  ஒரு  வீட்டயும் கட்டிமுடிச்சான்.  ஆறுமாச  காண்ராக்ட்ல  கலிஃபோர்னியாவும்  மனசில்லாம  போனான் நம்ம குணசேகர் நாச்சிமுத்து.  போன ஊரும்  புடிக்கல  சோறும்  எறங்கல. எப்படா திரும்புவோம்னு  துடிச்சிட்டு  இருந்தான் நம்ம குணசேகரன்.

அன்னைக்கும் ஏதோ "பன்"ன தின்னுபுட்டு வேலைக்கு கெலம்பவனுக்கு  இடியா வந்துச்சு ஒரு சேதி. அவனுக்கா துடிச்சுட்டு கெடந்த ஒத்த உசுரும் ஒரேடியா ஒறங்கிருச்சாம். மடைய தொறந்துவுட்டது போல மளமளன்னு தண்ணி . ரெண்டு நாள்ல திரும்ப வந்தவன் கடேசியா பாத்ததெல்லாம் ஐஸ் பொட்டிலதான்.

எல்லாம் முடிஞ்சு இப்ப ஒரு வாரம் ஆயிடிச்சு. ஒத்தயிலயே கெடந்தான். அன்னம் தண்ணியெல்லாம் பக்கத்து வீட்டு பார்வதியம்மா கொடுத்துவிட, பாதி நாளு அது தொடாமலே கெடந்துச்சு .சோடா கட  வெச்சிருக்க சோமு அண்ணன்தான் சாயங்காலத்துல வந்து கொஞ்சநேரம் பேசிட்டுபோவாரு . அவரு தான் அவருக்கு தெரிஞ்ச அம்மா ஒருத்தர் இருக்காங்கன்னும், சாப்பாடு பொங்கிபோட வரவைக்கரன்னும் சொன்னாரு. ஒரு கட்டத்துக்கு மேல அவனாலயும் தட்ட முடியல. இப்போ ரெண்டு நாளா அந்த அம்மா தான் சமையல். ஆனா ஒரு பருக்க கூட பல்லுல படல. டீ குடிச்சே காலம் போச்சு.

இவன சாப்டு கண்ணுனு சொல்லிப்பாத்து தோத்துப்போயி  அந்தம்மாவும் சாப்டாமலே கெடந்துருக்கு. அடுத்த நாள் காலைல ஏதோ நெனச்சவன், உள்ள அடுக்கலைல போய் பாத்தான். ராத்திரி பொங்கன சோறு தண்ணி ஊத்தி இருந்துச்சு . வெச்ச  உருளைக்கிழங்கு  கொலம்பு மொத்தம் குண்டான்லயே இருந்துச்சு . தண்ணிசாதத்த  தட்டுல வெச்சு கொஞ்சம் கொலம்பும் ஊத்தி  சாப்ட்டு இருக்கும் போது அந்தம்மாவ கூட்டு, நீங்க சாப்டிங்கலாமானு கேட்டான். நீ பட்டினி கெடக்கறப்ப நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன்னு சொல்லுச்சு அந்தம்மா. பழைய சோத்துல அவன் பழைய வாழ்க்கையும், இந்த அம்மா பேச்சுல அவன் ஆத்தா கொரலையும்   கேட்டான் . அடுத்த நாளே அவன் சென்னைக்கு கெலம்பிட்டான், பொட்டி படுக்கையோட அந்த அம்மாவையும் கூப்டுகிட்டு...


சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...