Tuesday 10 January 2017

ஆசைச்செல்வி

சரோஜினி நாயுடு, கமலாபாய்,
டாக்டர் முத்துலட்சுமி, எம் எஸ் சுப்புலட்சுமி
அன்னை தெரேசா, அன்னை இந்திரா,
கிரண் பேடி, லத்திகா சரண்,

அருந்ததி ராய், ஐஸ்வர்யா ராய்,
சானியா மிர்சா, சைனா நேவால்,
இந்திரா நூயி, அருந்ததி பட்டாச்சார்யா,
ஆசைச்செல்வி

அனைவரையும் பற்றி பேச ஆயிரம் இருப்பினும்
ஆசைச்செல்வியை பற்றி ஆழமாய் பார்ப்போம்
வாழ்க்கையும் குடும்பமும் அனைவருக்கும் பிரகாசிக்க
இவளோ தன் வாழ்வினை இருட்டாக்கி
குடும்பத்தில் அடுப்பேற்றினாள்

கனவுகள் நனவானதில் அனைவரும் பிரபலம்
கனவுகள் புதைந்து, வாழ்க்கை சிதைந்ததில் தான்
ஆசைச்செல்வி ஜனனம்

உழைத்த கைகளும் ஓடிய கால்களும்
பக்கவாதத்தால் ஓய்வெடுக்க
ஏழு இரைப்பைகளை நிரப்பும் பொறுப்பு
மூத்தவள் தலையில்

பருந்து நடத்தும் பஞ்சாலையில்
பணிக்கு சென்ற கோழிக்குஞ்சு
பருந்தின் பசிக்கு இரையாக வாழ்க்கை புரண்டது

சிதைந்த உடல் மேலும் சிதைய
ஓடும் ரயிலினை எதிர்க்க துணிந்தாள்
எதேர்ச்சியாய் அவளை சரோஜா மீட்டு
தன்னுடன் அழைத்து அடைக்கலம் தந்தாள்

அவளது வாழ்வின் சாரம்
இவள் வாழ்க்கை கப்பலை திசை திருப்ப
அவள் பாதையே நடக்க இவளும்  துணிந்தாள்

ஏழ்மையின் பிடியில் சிக்கிய கற்பை
செல்வம் மீட்டதில் அவள் வாழ்க்கை இருண்டது
இவளின் இருண்ட தருணத்தில் குடும்பம் ஒளிர்ந்ததால்
இருளும் தொடர்ந்தது

விலைப் பட்டியலில் பெண்மை சேர்ந்த நாள்
அது ஆண் வர்கம் தலைகுனிய வேண்டிய நாள்

சிலரின் அந்தரங்கத்தை புரட்டடிப் பார்த்தால்
பல படுக்கைகளின் விலாசம் இருக்கும்.
உன் விலாசம் தேடி வருபவனை விட
நீ  என்றும்  உயர்ந்தவளே

தனியொருவன் சுவைத்து படிக்க
இயற்றப்பட்ட உயிர்க்கவிதை - பெண்
காலத்தின் பிழையால் தனிக்கவிதை பொதுநூலகத்தில்

தமிழறியா தற்குறிக்கு ழகரம் புரியாததுபோல்
மொழியறியா முரடனும், கவியறியா காமுகனும்
காசிருக்கும் காரணத்தால் கவிதையுடன் தனிமையில்

இலக்கணம் மீறிய புணர்ச்சி விதிகள்
இங்கே அணைக்கும் கரங்கள் ஆயிரம் இருந்தும்
ஆறுதல் விரல்கள் கண்ணீர் தொடைக்க இல்லை.

தனது ஆசைகளுக்கு கொல்லி வைத்து
பிறர் ஆசைகளுக்காகவே வாழும்
மிகச் சிலருள் ஒருத்தி நீ

உன்னையே அழித்து
உன் குடும்பத்திற்கு ஒளி தருவதால்
நீயும் மெழுகுவர்த்தியை

ஆசைச்செல்விகள் அவனியில் இல்லையெனில்
கற்புக்களவுகள் அதிகமாகிப் போயிருக்கும்
இன்றைய கற்புக்கரசிகளே ஒரு நிமிடம்
நன்றி சொல்லுங்கள் அவளுக்கு

அவள் இழப்புகளை ஈடுகட்ட ஏழுலகம் போதாது
துயரத்தை எதுத்துச்சொல்ல தமிழில்
வார்த்தைகள் கிடையாது


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...