Wednesday 25 January 2017

குடியரசு தினம்..?!

குடியரசு தினம்...?!

உலகின் மிகப்பெரிய
குடியரசாம்,
மிக நீளமான
அரசியலமைப்பாம்.

சமூகத்துவமும்,
சமயச்சார்பின்மையும்
என்கிறது அரசாங்கம்.
காவிகளின் ஆட்சியென
குடிமக்கள் ஒருசாரார்.

சமத்துவமும், சமநிலையும்
லஞ்சம் ஊழலில் மட்டும்.
வாய்ப்புகள் திறமைக்கல்ல,
சட்டங்கள் வகுத்தவனுக்கல்ல.

ஒற்றுமையும் ஒருமைப்பாடும்
நாம் ஒன்றுபட்டு
இருக்காததில் மட்டும்.

உடன்பிறப்புணர்வெல்லாம்
வீட்டிற்குள்ளேயே அரிதாக.
நாட்டில் இல்லையென்பதற்கு
ஸ்வாதியும் நிர்பயாவும் சாட்சி.

குடியுரிமையும் வாழ்வுரிமையும்
கேள்விகள் கேட்காதவர்க்கு மட்டும்.

அனைவருக்குமாய்
இயற்றப்பட்ட சட்டம்
ஒரு சிலரின் சட்டைப்பையில்.

அனைவருக்கும் சமபாதுகாப்பாம்.
சமீபத்தில் பார்த்தோம்
தமிழகம் முழுவதும்.

தமிழக மீனவன் குரல்
எங்கள் பாராளுமன்றத்தில்
ஒலிப்பதில்லை.
தமிழக மாணவர்கள்
போராட்டத்தை நடுவண் அரசு
மதிப்பதேயில்லை.

அனைத்தும் அனைவருக்கும்
சமாய் இருப்பது
உண்மையெனில்
காவிரிக்கு ஏன்
எல்லைக் கோடுகள்?

விவசாய நாட்டின்
தலைப்புச் செய்திகளில்
துயர் மரணங்கள்.

தீர்ப்பெழுதும்
பேனா முனைகள்
யாரோ விலைகொடுத்து
வாங்கியதே
நடுநிலை இல்லா
நீதிமன்றங்கள்

மக்களை சுரண்டும்
திட்டங்கள் வகுக்கும்
மக்களவை கூட்டங்கள்

அடிப்படை வசதிகள்
அநேகம்பேருக்கில்லா
நிலையில்,
ஆன்லைன்
வர்த்தகத்திற்கு
மாறுவோமென முழக்கங்கள்.

தூய்மை இந்தியா
திட்டத்தின் வெற்றியை
வெட்டவெளிக்
கழிப்பிடங்களில்
கொண்டாடும் மக்கள்.

தொழில் செய்ய
ஏற்ற சூழல்
அந்நிய நிறுவனங்களுக்கே
வேலை வாய்ப்பு
என்னும் பெயரில்
இயற்கை வளங்களை
விற்கும் ஒப்பந்தங்கள்.

மனிதர்களை
அடித்து மிதித்து
மிருக வதைக்கு
போர்க்கொடிகள்

பல இடங்களில்
தீண்டாமை மிளிரும்
தேநீர் குவளைகளில்,
காதலின் கழுத்தறுக்கப்படும்
சாதிய சாக்கடையில்
பிரகாசமாய் ஒளிர்கிறது
டிஜிட்டல் இந்தியா

தமிழை
இந்திய நாட்டின்
அங்கீரிக்கப்பட்ட
மொழியாகவும்
ஏற்றுக்கொள்ளா
சமூகம் உள்ளவரை
ஹிந்தி பயிலாததை
தேச துரோகம் என்று
சொல்லும் சகோதரர்கள்
உள்ள வரை

வேற்றுமையில்
ஒற்றுமையெல்லாம்
வெறும் வாசகமே
குடியரசு தினமும்
ஞாயிறு போல்
வெறும் விடுமுறையே.

#republicday #january26 #india #indianconstitution



2 comments:

  1. தமிழனின் தாகம் தணியும் நாள்..
    அதிவிரைவில்..
    கங்கையின் நீர் கொண்டு தமிழகத்து நிலங்களுக்கு பாய்ச்சும் நாள்
    வெகு தொலைவில் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. நடக்குமென நம்புவோம்..

      Delete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...