Monday 2 January 2017

பழயசோறு

அரசாங்கம் குடுத்த இலவச சைக்கிள் எத்தனை பேருக்கு பயன்பட்டுச்சுன்னு  தெரில, ஆனா  பதினாறு  கிலோமீட்டர்  தள்ளிப்போய்  பதினோறாம் வகுப்பு  படிச்ச குருவிமலை  குணசேகருக்கு  நிச்சயம் அது வாழ்க்கையே  குடுத்துச்சுனு தான்  சொல்லனும். எடுத்ததுமே  அம்பதாயிரம்  சம்பளத்துல  ஐ.டீ கம்பேனில  வேல பாத்துகிட்டு  ஏதாச்சும் தனியார்  தொலைக்காட்சி  நடத்தர  வெட்டிப் பேச்சு  நிகழ்ச்சிக்கு வந்து  இலவசத்த தட பண்ணனும்.... அப்படி பன்னா அதுல மிச்சமாகுற  வரிப்பணத்துல  நான்  இன்னும்  ஒரு சனிக்கெழம  குடிச்சுட்டு  கூத்தடிப்பேன்னு   வெட்டி  நியாயம்  பேசுறவனுக்குலாம் , ஒத்த பையன வெச்சுட்டு ஒத்தையுல  கஷ்டபடற ஓச்சாயி  பத்தி  ஒரு நாளும்  தெரியாது.

பொறந்த  எடத்துல  சுகமா  இருந்தவனாலும் வாக்கப்பட்டு  வந்த  எடம் ஒன்னும் பெருசா இல்ல . அவ புருஷன்  பன்னிட்டு  இருந்த  சின்ன  வியாபாரமும் சின்னா பின்னமாக, சீக்கிரம் ஊர  காலிபன்னிட்டு குருவிமலைக்கு வந்துட்டாங்க. நாச்சியப்பன்  ஏதோ கட்டட வேலைக்கு  போய்வர,  பத்துமாச கைக்கொழந்த  வெச்சிக்கிட்டு படாதபாடு  பட்டா இந்த  ஓச்சாயி . வரி  கட்றதா   நெனச்சிக்கிட்டு  வாங்கர   கூலில  பாதி அரசாங்கத்துக்கே செலவு  பன்ன, ரெண்டே  வருசத்துல  ஒத்தைல  நின்னா   ஓச்சாயி . காட்டு வேல , வீட்டுவேலனு  இவ   எவ்ளோ  கஷ்டப்பட்டாலும் , அவ  பையன  மட்டும்  பசிக்கு  அழாம பாத்துக்கிட்டா.

ஆத்தா  கஷ்டப்படறதயே  பாத்த  அந்த  பிஞ்சு  மனசு, படிச்சு  பெருசாகி அத  கஷ்டபடமா  பாத்துக்கணும்னு மட்டும்  வைராக்யமா  இருந்தான். எட்டாத இஞ்சினீரியங்குக்கு   அரசு சலுகை  ஏணியா கைகுடுக்க,  எட்டிப்புடிச்சு  இப்ப  அவன், இஞ்சினீயர்  குணசேகர். அவன் ஆத்தா ஆசப்படியே   சொந்த  ஊர்ல  ஒரு  வீட்டயும் கட்டிமுடிச்சான்.  ஆறுமாச  காண்ராக்ட்ல  கலிஃபோர்னியாவும்  மனசில்லாம  போனான் நம்ம குணசேகர் நாச்சிமுத்து.  போன ஊரும்  புடிக்கல  சோறும்  எறங்கல. எப்படா திரும்புவோம்னு  துடிச்சிட்டு  இருந்தான் நம்ம குணசேகரன்.

அன்னைக்கும் ஏதோ "பன்"ன தின்னுபுட்டு வேலைக்கு கெலம்பவனுக்கு  இடியா வந்துச்சு ஒரு சேதி. அவனுக்கா துடிச்சுட்டு கெடந்த ஒத்த உசுரும் ஒரேடியா ஒறங்கிருச்சாம். மடைய தொறந்துவுட்டது போல மளமளன்னு தண்ணி . ரெண்டு நாள்ல திரும்ப வந்தவன் கடேசியா பாத்ததெல்லாம் ஐஸ் பொட்டிலதான்.

எல்லாம் முடிஞ்சு இப்ப ஒரு வாரம் ஆயிடிச்சு. ஒத்தயிலயே கெடந்தான். அன்னம் தண்ணியெல்லாம் பக்கத்து வீட்டு பார்வதியம்மா கொடுத்துவிட, பாதி நாளு அது தொடாமலே கெடந்துச்சு .சோடா கட  வெச்சிருக்க சோமு அண்ணன்தான் சாயங்காலத்துல வந்து கொஞ்சநேரம் பேசிட்டுபோவாரு . அவரு தான் அவருக்கு தெரிஞ்ச அம்மா ஒருத்தர் இருக்காங்கன்னும், சாப்பாடு பொங்கிபோட வரவைக்கரன்னும் சொன்னாரு. ஒரு கட்டத்துக்கு மேல அவனாலயும் தட்ட முடியல. இப்போ ரெண்டு நாளா அந்த அம்மா தான் சமையல். ஆனா ஒரு பருக்க கூட பல்லுல படல. டீ குடிச்சே காலம் போச்சு.

இவன சாப்டு கண்ணுனு சொல்லிப்பாத்து தோத்துப்போயி  அந்தம்மாவும் சாப்டாமலே கெடந்துருக்கு. அடுத்த நாள் காலைல ஏதோ நெனச்சவன், உள்ள அடுக்கலைல போய் பாத்தான். ராத்திரி பொங்கன சோறு தண்ணி ஊத்தி இருந்துச்சு . வெச்ச  உருளைக்கிழங்கு  கொலம்பு மொத்தம் குண்டான்லயே இருந்துச்சு . தண்ணிசாதத்த  தட்டுல வெச்சு கொஞ்சம் கொலம்பும் ஊத்தி  சாப்ட்டு இருக்கும் போது அந்தம்மாவ கூட்டு, நீங்க சாப்டிங்கலாமானு கேட்டான். நீ பட்டினி கெடக்கறப்ப நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன்னு சொல்லுச்சு அந்தம்மா. பழைய சோத்துல அவன் பழைய வாழ்க்கையும், இந்த அம்மா பேச்சுல அவன் ஆத்தா கொரலையும்   கேட்டான் . அடுத்த நாளே அவன் சென்னைக்கு கெலம்பிட்டான், பொட்டி படுக்கையோட அந்த அம்மாவையும் கூப்டுகிட்டு...


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...