Friday 27 January 2017

மழை

ஏரி ஓடை கிணறுகளும்
தாகத்தில் தவித்திருக்க
நெடு நாள் வறட்சியில்
காடு கழனி வெடிப்புற்று

விதைத்தது முளைக்காமல்
முளைத்தது வளராமல்
வளர்ந்தது பூக்காமல்
பூத்தது காய்க்காமல்

காய்த்தது கனியாமல்
கனிந்தும் விலைபோகாமல்
சோலையூர் கிராமமே
பாலையாய்க் கிடந்தது

இரு ஊர் தள்ளி சென்று
ஒரு குடம் நீரெடுத்து
தங்கம் போல் சேமித்து
கண்ணாக அதைக் காத்து

ஒவ்வொரு துளியையும்
கருத்தாக பயன்படுத்தி
தண்ணீரில் திளைத்த காலம்
தூரத்து ஞாபகமாய்

நீரிருக்கும் திசை நோக்கி
கால்கள் இடம் பெயர
ஆயிரம் குடும்பங்கள்
பாதியாய் குறைந்ததிங்கு

கலப்பையை பிடித்த கைகள்
கட்டுமானப் பணிகளிலே
உணவு படைத்தவர்கள்
உணவகத்தில் வேலையிலே

ஊரிலுள்ள பெரியவர்கள்
கலந்து பேச ஒன்று கூடி
தெய்வத்தால் ஆகுமென
ஒருசேர முடிவெடுத்து

மாரி அது பொழியத்தான்
மாரியம்மன் விழா நடத்தி
நேர்த்திக்கடன் பாக்கியெல்லாம்
நேரத்தே தீர்த்துவைத்து

கழுதைகள் மணம் முடிந்தும்
மனமிரங்கா மழை மேகம்
மாரியப்பன் மாண்ட செய்தி
முரசு கொட்டி அறிவிக்க

மேகமும் மனம் வருந்தி
இரங்கலை தெரிவிக்க
கடைசியாய் கண்ணீரை
தூறலாய் தூறியது.











4 comments:

  1. வாழ்த்துகள் தோழரே...
    அருமை..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழரே

      Delete
  2. அருமையான பதிவு நந்தா.

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...