Thursday 12 January 2017

விவசாயி தற்கொலை

வண்ணக்
கோலங்கள்
வாசலில்
இட்டவள்
விதவைக் 
கோலத்தில்
இவ்வருடம்


தாலிச்சரடின்
கடைசி குண்டுமணியை
நெல்மணி வாங்க
அவள் கழற்றித்
தரும்போது
சத்தியமாய்
நினைக்கவில்லை
மூன்றே மாதத்தில்
அவள் தாலி
அறுவடை என்று.


இரைப்பையை
பட்டினி போடாது
நிரப்பி
நிறைவாய்
ஒரு தூக்கம்


ஜல்லிக்கட்டில்
உயிர் போவதாய்
அக்கறை காட்டும்
அரசே
அது நடக்காமலே
பல உயிர்கள்
போகிறதே


போகிப் பண்டிகையில்
எரிக்கப்பட்டது
நேற்று இறந்தவன்
உடல்


தை பிறந்தால்
வழி பிறக்குமென
நம்பினான்.
வழி பிறந்தது
இடுகாட்டிற்கு.


இந்த
பொங்கலுக்கும்
அவன் வீட்டில்
சொந்தங்கள்
எல்லாம் 
கூடியது
குலவிச்சத்தத்துடன்
பொங்க வைக்க
அல்ல
சங்கு முழக்கத்துடன்
ஒப்பாரி பாட.


அடுத்தபோகம்
அமோகமாய்
இருந்தால்
ஆத்தாளுக்கு
கெடாவெட்டி
பொங்கல் வைக்க
முடிஞ்சுவெச்ச
மஞ்சதுணிகாசுக்கு
இப்ப வேலை
வந்துருச்சு
இறுதியாத்திரை
செலவு...


பாடை
கட்டுவதற்காய்
வெட்டிய
ஓலையிலும்
தெரிகிறது
வறட்சியின்
ரேகைகள்


இவன்
தோட்டத்து
விலைபோகா
சாமந்தி
இறுதியாய்
அலங்கரித்தது
இறுதி
ஊர்வலத்தை


செழிப்பாய்
வளர்ந்த
நவதானியங்களை
அவன்
சிரித்துக் கொண்டே
பார்க்கிறான்.
இறந்தவன்
படத்தின் முன்
முளைப்பாரி


ஏர்முனை
மண்ணில்
புதைவதெல்லாம்
அப்போது
ஏரோட்டுபவனே
புதைகிறான்
இப்போது


வறட்சி நிவாரணப்
பெயர் பட்டியலில்
பெயரைச் சேர்க்க
விலை கேட்டதால்
மானஸ்தன்
மாண்டுவிட்டான்


நிவாரண நிதி
சற்றே
தாமதமாய்
வந்தது
பதினாறாம் நாள்
காரியத்தன்று..


இரு சொட்டு 
நீரில்லா
நிலத்திற்கு
சொந்தக்காரன்
இருகுட
தண்ணீரில்
ஊர்பார்க்க
ஒரு குளியல்.


கல் சுமக்க 
போயிருந்தால்
இருகால்களால்
நடந்திருப்பேன்
நெல் சுமக்க
நினைத்துதான்
எட்டு காலில்
தவழ்கிறேன்


இந்த தையிலும்
பானை விற்பனை
அமோகமாம்.
இறுதிச்சடங்கில்
பிணத்தை
சுற்றி வந்து
உடைப்பதற்கு.


அறுவடைத் திருவிழா
ஆரவாரமின்றி
அமைதியாய்,
விழாக் கூட்டத்தைவிட
இரங்கல் கூட்டங்கள்
அதிகமானதால்.


மூன்றுக்கு
மூன்று
குழியில் 
தென்னை
நட்டவனோ
ஆறுக்கு
நான்கு
குழியில்
அசதி தீர
தூங்குகிறான்.


ஒவ்வொரு முறை
பறிக்கும் போதும்
தனியாய் தொடுத்து
அன்பாய் சூட்டியவன்
ஏனோ இன்று
ஒரேடியாய்
பறித்துக்கொண்டான்.
#மல்லிப்பூ விவசாயி.


புத்தாண்டில்
சுவற்று அணியில்
புதிதாய் மாட்டினாள்
பயிர்கள் வாடக் கண்டு
உயிர் விட்ட
தன் கணவன் படத்தை.


காலனுக்கு
ஏனிந்த
அகோரப் பசி
உணவு 
படைப்பவர்களை
மொத்தமாய்
உண்டு
களிக்கிறான்.


தாரையும் 
தப்பட்டையும்
தான் 
அவனுக்கு
சோறு போடுகிறது.
இருந்தும்
அவனுமே
வருந்துகிறான்
விவசாயி எழவில்
இசைக்க.


சர்க்கரைப் 
பொங்கலும்
லேசாய் 
கசக்கிறது
மேலும் ஒருவர் 
எனும் செய்தி
காதில்
ஒலிக்கையிலே


அரசாங்கம்
அறிவிக்கும்
பொங்கல் பரிசு
ஆண்டுகளாக;
மாறுதலுக்காய்
இந்த ஆண்டு
வறட்சி நிவாரணம்


நெல் விளைவித்து
வாழ்ந்தவனை
புதைத்த இடத்தில்
புல் கூட
முளைக்கவில்லை












No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...