Tuesday 23 May 2017

முதுமை - வாழ்க்கை

பல ஆண்டுகளாய்
என் நாட்குறிப்பின்
ஒவ்வொரு பக்கத்தையும்
நிரப்பும் அவளின்
ஒரு பக்க கடிதம்

#அவள்



♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

நலமா என விசாரித்து
நாற்பது நிமிடம்
பேசிச் சென்றவனை
நாள் முழுதும்
சிந்தை கசக்கியும்
யாரென்று தெரியவில்லையே
♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠


உழைத்து ஓய்ந்த
உள்ளம் இன்று
மீண்டும்
உழைக்க வேலை
தேடுவதோ

ஹிட்லராய் கர்ஜிக்கும்
மருமகளுக்கும்
புத்தனாய் மௌனிக்கும்
மகனுக்கும்
அஞ்சி அல்ல

மாறுதலான பகலிற்கும்
உழைக்கும்
செல்வம் உணவிற்கும்
களைப்பில் பிறக்கும்
உறக்கத்திற்குமே

#தேடல்



♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

ஐம்பது காசளவில்
குங்குமம் சுமந்த நெற்றியும்
முடிந்த கொண்டையில்
மலர்ந்த மல்லியும்
பெரிய மூக்குத்தியின் கீழ்
அளவாய் புன்னகையும்
சுமந்த விசாலாட்சியின்
வண்ணப்  படத்தின் கீழ்

மகன் மகள்கள்
மருமகப்பிள்ளைகள்
பேரன் பேத்திகள்
பெயர்களுடன்
என் பெயரும் அச்சிட்டு
வருந்துவதாக
செய்தி கொடுத்து
கோடை விடுமுறையாம்
கேளிக்கையில் அவர்கள்
பத்திரிக்கையுடன் நான்

#நினைவு



♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠


பேரனின் பள்ளி
சுற்றுலாவிற்கு
கொடுத்து வழியனுப்ப
என்னிடம் வெறும்
முத்தங்களே இருந்தன

எப்படி சொல்வேன்
நான் ஆகாஷிடம்
என் ஓய்வூதிய
வங்கி கணக்கட்டை
ரகுநந்தனிடம் உள்ளதென...

#சோதனை


♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

தினசரியை எடுத்து வைத்தவுடன்
அடடே என நினைவுக்கு வர
வீட்டினுள் அதைத்
தேடிச் சென்றேன்
அறையினுள் சென்ற கனமே
வந்த காரணம் மறக்க
எதற்க்கென யோசித்தவாறே
மீண்டும் வாசல் வந்தேன்

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠


மூட்டுக்கு ஒன்று
மூச்சிற்கு ஒன்று
நித்திரை வந்திடவும்
மாத்திரை உண்டு

இடை வலிக்கு ஒன்று
இதயத்திற்க்கொன்று
இரைப்பைக்கு பல வண்ண
மாத்திரைகள் உண்டு
இமியளவு இனிப்புடன்
உப்பில்லா உபசரிப்பு
பத்தியச் சோறும்
சுவையில்லா வாழ்வும்
வயதாகிப்போனாலே
வாடிக்கையாகும்.

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

நாற்பது தொலைபேசி எண்களை
மனப்படமாய் சுமந்த மனது
இன்று வீட்டு கதவு இலக்கம்
என்னவென வினவுகிறது

தூரத்து பேருந்திலுள்ள
எழுத்தைப் படித்த கண்கள்
இன்று கையிலுள்ள தாளில்
எழுத்துக்களை அறிய திணறுகிறது
பத்து மையில் தொலைவிலுள்ள
பள்ளி நடந்த கால்கள்
இன்று பத்தடி கடந்து
கழிவறை செல்ல ஆடுகிறது
என் பாட்டன் பேசியதை
சலித்துக் கேட்ட நானோ
என்னுடன் கதை பேச
உறவொன்றை தேடுகிறேன்

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

முதுமை
****************
தியான நிலையில்
நினைவுகளுக்கு 
தூண்டில்

மேடைப் பேச்சாளனும்
குறள் அளவே
குரல் எழுப்ப
இருமலுக்கு இடையே
அளவாய்
வார்த்தைகள்
நடுநிசி தாண்டியும்
தூக்கத்தை விரட்டும்
இரவுகள்
தொலைக்காட்சியும் வானொலியும்
வேறு வழியில்லா
நண்பர்கள்
இணையமும் முகநூலும்
எட்ட முடியா
விந்தைகள்
மருத்துவனும் மருந்துகளும்
பழகிப்போன
அவஸ்தைகள்
இமையடைத்து இந்நாளும்
இறுதி வேண்டி
உறங்குகிறேன்


♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

மகனின் தொழில்வளம்
மருமகளின் மனநிறைவு
பேரப்பிள்ளைகளின் கல்வி
அவர்கள் அனைவரின் உடல்நலம்
வேண்டியே ஜெபிக்கும்
மரியம்மாவின் பிராத்தனைக்கு
கருனை விழியே காட்டுகிறார்
முதியோர் காப்பகத்து கிறிஸ்து.

#பிராத்தனை


♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

Sunday 7 May 2017

பச்சோந்தி மேகம்

வெளீர் வானம்
திடீரென கருத்தது

சுளீர் வெய்யில்
மேகத்துள் ஒளிந்தது

அசையா மரங்கள்
களியாட்டம் போட்டன

மண்புழுதி கிளப்பி
சுழலொன்று எழுந்தது

ஊசித்தட்டான் கூட்டம்
தாழ்வாக பறந்தது

சாரையாய் எறும்புகள்
புற்றுக்குள் நுழைந்தன

தவளைகள் உற்சாகத்தில்
பாடல்கள் இசைத்தன

சிட்டுக் குருவிகள்
மண்குளியல் போட்டன

கோழிக் குஞ்சுகள்
தாயிடம் ஒதுங்கின

காய்ந்த துணிகளெடுக்க
கால்களும் ஓடின

பெருமழை உண்டென
அனைவரும் நினைக்கையில்

இரண்டே துளிகள்மட்டும்
மண்வந்து சேர்ந்தது

பச்சோந்தி மேகமோ
நிறம்மாறிப் போனது.





Friday 5 May 2017

சுயநலக்கூட்டம்

விளைச்சலுக்காய் விஷம் வைத்ததில்
மண்புழுக்கள் நுரை தள்ளின
அவை தவழ்ந்த மண்ணோ
இன்று பொலிவிழந்து தரிசாய்

மனிதனின் மரவேட்டையில்
குருவிகள் வீடிழந்தன
கோவித்த குயில்களின் மெளனத்தால்
விடியல்கள் கலையிழந்தன

அணில்களும் உண்ணாவிரதம்
அவை தீண்டா கனிகள் கசப்புற்றன
விதைகள் அடைபட்டன
முளைப்புகள் முடங்கின

வண்ணத்துப் பூச்சிகளும்
பறப்பதை நிறுத்தியதில்
சோலைகள் சுயம் தொலைத்து
சோர்வாய் இருந்தன.

காளைகளை இறைச்சியாக்கியதில்
பசுக்கள் காதல் மறந்தன
சினை ஊசியும் கூடுதலாய் வலித்தது

கன்றுகளை பட்டினிபோட்டு
சுரப்பவற்றை முழுதாய்
கறந்து கயவன் காசாக்கினான்

குஞ்சு பொறிக்கும் கோழியின் கனவும்
தோசைக் கல்லில் உடைபட்டது
புல்லிற்கு அடைக்கலமான ஆடு
இலையில் விருந்தானது

கூட்டத்தின் கடும் உழைப்பினை
தனியொருவன் அபகரித்தான்.
தேனீக்கள் வேலை நிறுத்தம் செய்ய
மலர்கள் இன்று மலடாயின.

மனிதனின் இழிசெயல் எதிர்த்து
காகங்கள் கோஷம் போட்டன
எறும்புகள் ஊர்வலம் சென்றன
வானம் மழை மறுத்தது

அனைத்தையும் சூரையாடும்
ஆறறிவு சுயநல கூட்டம்
பருந்தின் பசிக்கும் எறும்பின் ருசிக்கும்
இரையாகும் நாள் தூரமில்லை.



புத்தகம்

சோழர் காலத்தில் வாழ்வதும்
காந்தியுடன் பயணிப்பதும்
ஹிட்லருடன் உரையாடுவதும்
வெவ்வேறு உலகங்களில் பிரவேசிப்பதும்
வாசிப்பில் மட்டுமே நிகழும்
#புத்தகம்



நான் 
தவழ்ந்து
பறந்து
மறந்து
புரிந்து
பிறந்து
தொலைந்து
கிடக்குமிடம்
#புத்தகம்



காதலியின் பிரிவையும்
அன்னையின் மறைவையும்
மறக்கச் செய்யும்
சக்தி இதற்குண்டு
#புத்தகம்



Wednesday 3 May 2017

சித்தாள்

கோடையின் உக்கிரம்
காண்டிராக்டரின் வக்கிரம்
தலைமீதிருக்கும் பாரம்
மேஸ்திரி சொல்லின் காரம்
மனமெல்லாம் ரணமாய்
நடமாடும் பிணமாய்
புலிகளின் காட்டில் மானாய்
அவளுக்காக இவள்


துளிகள்

இலவச
அரிசியைத் தான்
எதிர்பார்த்து
இருக்கின்றனர்
இடுகாட்டில் 
எரிப்பவனும்
வயக்காட்டில்
விதைப்பவனும்



மீனுக்கு மட்டுமல்ல
இவனுக்கும்
தெரியாது
எப்பொழுது
பிடிபடுவானென



பட்டுநூலெடுக்க
பரிதவித்திறக்கும்
பட்டுப்புழுவின்
சாபம்தான்
பாடாய்படுத்துகிறதோ
அதை வாங்கி
புடவை நெய்யும்
நெசவாளியை



அறுக்கப்படும்
நெற்கதிர்க்கெல்லாம்
நிர்ணயிக்கப்படும்
விலையே
தீர்மானிக்கிறது
கயிறா விஷமா என்று.



அகரம் கற்பித்து
அறிவினை ஊட்டிய
அன்னை தமிழுக்கு
பட்ட கடனைத்தான்
திருப்பித்தர இயலாமல்
அவ்வப்போது வட்டியாய்
கொடுக்கிறேன் ஒரு
கவிதை.
திடீர் காற்றில்
முறிந்த கிளையில்
கொத்துக் கொத்தாய்
மலர்கள் மரணம்
#மரணம்




வதை

கரைத்து
குழைத்து
வடித்து
வைத்த
பின் தான்
மழையும்
அழித்துச்
செல்லும்
உழுது
விதைத்து
வளர்ந்து
பூக்கும்
பொழுது தான்
வெய்யிலும்
பயிர் கருகச்
செய்யும்
இயற்கையும் கூட
வதைதான்
செய்கிறது
அரைப் பை
இரைப்பையாவது
நிறைத்திட
வியர்க்கும்
உயிர்கள் அதை.


சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...