Tuesday 23 May 2017

முதுமை - வாழ்க்கை

பல ஆண்டுகளாய்
என் நாட்குறிப்பின்
ஒவ்வொரு பக்கத்தையும்
நிரப்பும் அவளின்
ஒரு பக்க கடிதம்

#அவள்

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

நலமா என விசாரித்து
நாற்பது நிமிடம்
பேசிச் சென்றவனை
நாள் முழுதும்
சிந்தை கசக்கியும்
யாரென்று தெரியவில்லையே
♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

உழைத்து ஓய்ந்த
உள்ளம் இன்று
மீண்டும்
உழைக்க வேலை
தேடுவதோ

ஹிட்லராய் கர்ஜிக்கும்
மருமகளுக்கும்
புத்தனாய் மௌனிக்கும்
மகனுக்கும்
அஞ்சி அல்ல

மாறுதலான பகலிற்கும்
உழைக்கும்
செல்வம் உணவிற்கும்
களைப்பில் பிறக்கும்
உறக்கத்திற்குமே

#தேடல்

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

ஐம்பது காசளவில்
குங்குமம் சுமந்த நெற்றியும்
முடிந்த கொண்டையில்
மலர்ந்த மல்லியும்
பெரிய மூக்குத்தியின் கீழ்
அளவாய் புன்னகையும்
சுமந்த விசாலாட்சியின்
வண்ணப்  படத்தின் கீழ்

மகன் மகள்கள்
மருமகப்பிள்ளைகள்
பேரன் பேத்திகள்
பெயர்களுடன்
என் பெயரும் அச்சிட்டு
வருந்துவதாக
செய்தி கொடுத்து
கோடை விடுமுறையாம்
கேளிக்கையில் அவர்கள்
பத்திரிக்கையுடன் நான்

#நினைவு

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

பேரனின் பள்ளி
சுற்றுலாவிற்கு
கொடுத்து வழியனுப்ப
என்னிடம் வெறும்
முத்தங்களே இருந்தன

எப்படி சொல்வேன்
நான் ஆகாஷிடம்
என் ஓய்வூதிய
வங்கி கணக்கட்டை
ரகுநந்தனிடம் உள்ளதென...

#சோதனை

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

தினசரியை எடுத்து வைத்தவுடன்
அடடே என நினைவுக்கு வர
வீட்டினுள் அதைத்
தேடிச் சென்றேன்
அறையினுள் சென்ற கனமே
வந்த காரணம் மறக்க
எதற்க்கென யோசித்தவாறே
மீண்டும் வாசல் வந்தேன்

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

மூட்டுக்கு ஒன்று
மூச்சிற்கு ஒன்று
நித்திரை வந்திடவும்
மாத்திரை உண்டு

இடை வலிக்கு ஒன்று
இதயத்திற்க்கொன்று
இரைப்பைக்கு பல வண்ண
மாத்திரைகள் உண்டு
இமியளவு இனிப்புடன்
உப்பில்லா உபசரிப்பு
பத்தியச் சோறும்
சுவையில்லா வாழ்வும்
வயதாகிப்போனாலே
வாடிக்கையாகும்.

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

நாற்பது தொலைபேசி எண்களை
மனப்படமாய் சுமந்த மனது
இன்று வீட்டு கதவு இலக்கம்
என்னவென வினவுகிறது

தூரத்து பேருந்திலுள்ள
எழுத்தைப் படித்த கண்கள்
இன்று கையிலுள்ள தாளில்
எழுத்துக்களை அறிய திணறுகிறது
பத்து மையில் தொலைவிலுள்ள
பள்ளி நடந்த கால்கள்
இன்று பத்தடி கடந்து
கழிவறை செல்ல ஆடுகிறது
என் பாட்டன் பேசியதை
சலித்துக் கேட்ட நானோ
என்னுடன் கதை பேச
உறவொன்றை தேடுகிறேன்

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

முதுமை
****************
தியான நிலையில்
நினைவுகளுக்கு 
தூண்டில்

மேடைப் பேச்சாளனும்
குறள் அளவே
குரல் எழுப்ப
இருமலுக்கு இடையே
அளவாய்
வார்த்தைகள்
நடுநிசி தாண்டியும்
தூக்கத்தை விரட்டும்
இரவுகள்
தொலைக்காட்சியும் வானொலியும்
வேறு வழியில்லா
நண்பர்கள்
இணையமும் முகநூலும்
எட்ட முடியா
விந்தைகள்
மருத்துவனும் மருந்துகளும்
பழகிப்போன
அவஸ்தைகள்
இமையடைத்து இந்நாளும்
இறுதி வேண்டி
உறங்குகிறேன்

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

மகனின் தொழில்வளம்
மருமகளின் மனநிறைவு
பேரப்பிள்ளைகளின் கல்வி
அவர்கள் அனைவரின் உடல்நலம்
வேண்டியே ஜெபிக்கும்
மரியம்மாவின் பிராத்தனைக்கு
கருனை விழியே காட்டுகிறார்
முதியோர் காப்பகத்து கிறிஸ்து.

#பிராத்தனை

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...