Saturday 1 October 2016

தண்ணில கண்டம்

ஒரு காந்தி ஜெயந்தி. கெணத்துக்கு குளிக்க போன அந்த ரெண்டு பசங்க கத்தி கூப்பாடு போட்டு ஊரையே கூட்டிட்டாங்க. மொட்ட கெணத்த சுத்தி சுவர் எழுப்பன மாதிரி கூட்டம் எட்டிப் பாக்கையில, அந்த பிரேதத்தை வெளிய எடுத்தாங்க ஊர்க்காரங்க. ராத்திரிலாம் தண்ணில கெடந்ததுல ஊறிப்போய் மொகமெல்லாம் வெளீர்ன்னு இருந்துச்சு. இந்த மனுஷன் இப்படி செஞ்சிபுட்டாரேன்னு கூட்டத்துல ஒரே சலசலப்பு. வீட்டுக்கு தூக்கீட்டு வந்து போடறதுக்குள்ள, அங்க ஏற்கனவே கூட்டம் கூடிடுச்சு.

"அவருக்கு ரெண்டும் பொட்ட புள்ளைங்க வேற, அவரு பொஞ்சாதியும் அதிர்ச்சில கெடக்கு. போலீஸ் கேஸ்னுலாம் போக தேவையில்லை. இங்கிட்டே எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னு" ஊர் பெரியவங்க பேசி முடிவெடுக்க, ஒப்பாரி சத்தம் ஒலிக்க ஆரமிச்சுது. பந்தலுக்கும், தப்பட்டைக்கும் சொல்லி விட்டுட்டு, அப்டியே சொல்ல வேண்டியவங்க யாருன்னு பேச்சு நடந்துட்டு இருந்துச்சு.

அதிர்ச்சில ஒரஞ்சிபோன ராமசாமி பொஞ்சாதிய, அழுது தீக்கச்சொல்லி அந்த கெழவிங்களாம் சொல்லுச்சு. பக்கத்துல ஒரு முப்பது கிலோமீட்டர் தூரத்துல தான் மொத பொண்ண கட்டி குடுத்தாய்ங்க. தகவல் அறிஞ்சதுமே சம்மந்தி வீட்டுல எல்லாருமே அதிர்ச்சியாக, மருமகப் பய மட்டும் வேர்த்து வெடவெடத்தான். பொறத்தால போனவன் கொஞ்சம் சுதாரிச்சு, கைநடுக்கத்தோட தம்ம பத்தவெச்சான். "ரெண்டு லட்சம் இல்லாம வீட்டு பக்கம் வந்துராத" கற்பகத்துக்கிட்ட அவன் கடேசியா சொன்னது. அவள தொரத்திவிட்டு ரெண்டே நாள்ல, இப்படி ஒரு சேதிய, அவன் கனவுலயும் கூட எதிர்பாக்கல. கற்பகத்த இனி எப்படி ஏறெடுத்து பாக்கறது. மாமியார் முகத்துல எப்படி முழிக்கறது. பணத்தாசை ஒரு உசுர குடிச்சிருச்சேனு தன்னதானே சபிச்சிட்டு, நெஞ்சு கனத்து கலங்கி கெடந்தான்.

நெடுங்குன்றத்துல இருந்த ஒரு நூறு குடும்பத்துல, பாதிக்கு மேல ராமசாமி வீட்ல இருந்துச்சு. “ரெண்டாவது பொண்ணு ஏதோ படிச்சிட்டு இருக்குல்ல?” பால் சொசைட்டி வாசல்ல ரெண்டு பொம்பளைங்க கூட, செத்தவன் குடும்பத்த பத்தியே பேசீட்டு இருந்தாங்க. “இதுக்கொரு கண்ணாலம் காட்சி கூட பண்ணாமலே போய்ட்டியே”ன்னு, செண்பகத்தை கட்டிபுடிச்சு அழுதுகிட்டே, ராமசாமி கூட பொறந்தவ, சேலையில மூக்கசிந்தனா. செண்பகத்தோட அழுகைய பாத்தா, அது அப்பா செத்ததுக்கா மட்டும் இருந்ததா தெரியல.

ராமசாமி, அக்கம் பக்கத்து பேச்ச கேட்காம, பன்னெண்டாவதோட படிப்ப நிறுத்தாம, காலேஜ்ல செண்பகத்த சேத்துவிட்டாரு. பக்கத்தால இருக்கற டவுன்ல பி.காம். கடேசி வருஷம் படிச்சிட்டு இருக்கா அவ. முந்தாநேத்து நெஞ்சுவலி மருந்து வாங்க கடத்தெருவுக்கு போனவரு, அது வர சாயங்காலம் ஆகும்னு மருந்து கடைக்காரர் சொல்ல, நேரத்த கடத்த வழியில்லாம, பக்கத்துல இருந்த கமலா டாக்கீஸ்ல, சினிமா ஒன்னு பாக்கலாம்னு நெனச்சாரு. மதிய ஆட்டம் சினிமாக்கு போனவர், ஆட்டம்கண்டுபோய் வீடு திரும்பனாரு. ராத்திரி முழுக்க ஒரு வார்த்த கூட செண்பகத்துக்கிட்ட வாய தொரக்கல. காத்தாலஅது போட்டுக்குடுத்த வர காப்பிய கூட குடிக்காம, கோவத்துல கிளம்பி போனதுதான், கடேசியா அவரை அவ கண்ணுல பாத்தது.

காதல் வெவகாரம் காத்துல பரவரதுக்குள்ள, மூச்ச புடிச்சுகிட்டு மூழ்கீட்டாரே. ஜாதி இல்லனு தமிழ் வாத்தியார் சொன்னத, உண்மைன்னு நம்பனது தான் உசுர குடிச்சிருச்சி. தண்டவாளத்துல தலைவெட்டி கிடந்த சேதியெல்லாம், அப்பா நடமாடும் போதே நெனவுக்கு வந்துருந்தா, மனச கழட்டி வீட்லயே வெச்சிட்டு, படிப்புல மட்டும் மூழ்கிருப்பனே. காரவீட்டு காதல்ல கூட, ஜாதிப்பற்று கலந்துதான் கெடக்குது. செண்பகத்தோட கண்ணீருக்குள்ள, ஒரு ஒடஞ்ச காதலும் ஒளிஞ்சிருக்குது.

ஊரு ஆளுங்களாம் ஒவ்வொருத்தரா மாலை மரியாதை செஞ்சிட்டு இருந்தாங்க. ஓலையை வெட்டி பாடையை பின்னர வேலையும், ஒருபக்கம் நடந்துட்டு இருந்துச்சு. மளிகை கடை நாகராஜ், ராமசாமியோட பால்ய சிநேகிதர். ரெண்டு நாள் முன்னாடி கூட டீத்தூள் வாங்க கடைக்கு வந்தவரு, மழை தண்ணி வரலயேன்னு, பேசீட்டு போனதா, அங்க இருந்த நாலு பேரு கிட்ட அங்கலாய்ச்சிட்டு இருந்தாரு.

தார தப்பட்ட சத்தத்துக்கு நடுல, ஒரு புல்லெட் சத்தம் காதுல கேட்டுச்சு. சத்தத்தை கேட்டு திரும்பானவங்க சலசலத்தது ஏன்னு தெரியல. ராஜரத்தினம் மாலையை போட்டுட்டு ஒரு அஞ்சு நிமிஷம் அங்க மௌனமா இருந்தாரு. ரொம்ப நேரமும் இருக்க முடியாம வெரசா பொறப்பட்டுச்சு புல்லெட் அங்கேருந்து. வண்டிய ஓட்டீட்டு வீட்டுக்கு போகையில, நேத்து காத்தால நடந்ததெல்லாம் நெனைவுக்கு வந்துச்சு.

அஞ்சு ஏக்கருக்கான குத்தக பணத்துல, அஞ்சு பைசா கூட வந்து சேராத காரணத்த இவரு கேட்க. வர வேண்டிய மழை வந்து சேரலனும், வெதச்ச வெதையும் மொளச்சு தொலையலன்னும், ஏ.டி.எம் ல பாக்கற வாட்சுமேன் வேல தான் குடும்பத்துக்கு இருக்கற ஓரே வருமானம்னும், அடுத்த போகத்துல வர்றதெல்லாம் எனக்கே தர்றதா சொல்லி அழுதாரு. பணத்த குடுக்க வக்கில்லைன்னு, வாய்க்கு வந்ததெல்லாம் பேசித்தீத்துப்புட்டேன்.

சும்மாவே கெடந்த அஞ்சு ஏக்கருக்கு, அஞ்சும் பத்தும் கொடுத்துட்டு இருந்த அப்பாவி ராமசாமி அநியாயமா சாவ, தானே காரணம்னு ராஜரத்தினம் நெனச்சிட்டாரு. அங்க செத்துப் போனது ஒரு விவசாயி மட்டுமில்ல, அஞ்சு ஏக்கர் விவசாயமும் தான்.

ஆண் வாரிசு இல்லாத காரணத்தால மூத்த மருமகன் தான் கொல்லி போடணுமாம். ரகுபதியோட மீசையை மழிக்க சவரக்கத்தியோட முனியனும் வந்துட்டான். தண்ணிய ஊத்தி குளிப்பாட்டி விட்டு, வேட்டி சட்டையும் மாட்டி விட்டு, விபூதியை நெத்திக்கு பூசிவிட்டு, ஒத்த ரூபாய நெத்தில வெச்சி, பேரப் பைய்யன் நெய்ப்பந்தம் புடிக்க, வேட்டுச் சத்தம் வானத்த கிழிச்சுது. தண்ணில ராத்திரி பூரா கெடந்ததால, ரொம்ப நேரம் தாங்காது, மூனு நாலரை ராகுகாலம், அதுக்கு முன்னாடியே எடுத்தரணும்னு, வீச்சருவா மீச வெச்ச வேலுசாமி சொல்லீட்டாரு.

ஜடமா இருந்த ராமசாமி பொஞ்சாதி, நேத்து சாயங்காலம் நடந்தத நெனச்சி பாத்தா. வாக்கப்பட்டு வந்த இத்தன வருஷத்துல, வாழ்க போனதா ஒவ்வொருநாளும் சொல்லுவா. இவரு கூட பொறந்த பொறப்பு கூட சூதனமா பொழைச்சிருக்க, இவர பொழைக்கத் தெரியாதவன்னு, நேத்தும் கூட கறிச்சுகொட்டனா. பொட்ட புள்ளைய பெத்துவெச்சிட்டு, பொறுப்பில்லாம இருப்பதா சொன்னா. வாழாவெட்டியா வந்தவளுக்கு வழி சொல்ல வக்கில்லைன்னும், மீச மட்டும் வெச்சவன்லாம் ஆம்பளன்னு அர்த்தமில்லனும், நாலு வீடு கேட்கும்படி, வாய்க்கு வந்ததெல்லாம் வசபாடினா. இவனுக்கு போய் வாக்கப்பட்டதுக்கு ஒரு பாழ்ங்கிணத்துல விழுந்துருக்கலாமுன்னும் கடேசியா சொன்னா.

இவ சொன்னதெல்லாம் கேட்டு முடிச்சவன், மனசு ஏற்கனவே செத்துக் கெடக்க நடைபிணமா வெளிய போனான். இப்படி ஒரு முடிவ எடுப்பானுன்னு, ஏற்கனவே தெரிஞ்சிருந்தா, திட்டாமலே இருந்துருப்பா, பொட்டாவது மிஞ்சிருக்கும். பொணத்த தூக்கி போகையில, பொல பொலன்னு அழுதுதீத்தா.

மூத்தவளா, இளையவளா, வாக்கப்பட்டு வந்தவளா, பணங்காசு பிரச்னையா, மானம் போன சங்கதியா, ராமசாமி செத்ததுக்கு காரணம் தான் என்னானு யாருக்குமே தெரியலையே.
பொண்டாட்டி கத்தனதுல வீட்ட விட்டு போனவரு, அவசர அவசரமா கடைக்கு போயி, தொண்ணூறுவா குவாட்டர் ரெண்டு வாங்கி, ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒக்காந்து குடிச்சாரு. குறுக்கு வழியில வீட்டுக்கு வர நெனச்சி, வயக்காட்ட கடந்து வரப்போரம் வந்தவரு, நிதானம் இல்லாம கெணத்துல கவுந்துட்டாரு. நான் தான் காரணம்னு ஒவ்வொருத்தரும் நெனச்சிருக்க, உண்மையான காரணம் யாருக்குமே தெரியாது.




2 comments:

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...