Monday 3 October 2016

இரண்டு மூன்றானது

விடிந்தால் இவர்களுக்கு நான்காம் ஆண்டு திருமண நாள். அபிநயாவின் முகத்தில் சந்தோஷத்திற்க்கான அறிகுறி சிறிதும் இல்லை. முகிலனும் மும்முரமாய் மடிக்கணினியில் ஏதோ வேலையில் மூழ்கியிருந்தான். "முக்கியமான வேலையா?" அபிநயா படுக்கையை சரி செய்தவாறே கேட்டாள். "இல்ல அபி. நெக்ஸ்ட் வீக் ஒரு ப்ரெசென்ட்டேஷன் இருக்கு, அதுக்கு தான் டேட்டா பூல் பன்னீட்டு இருக்கன்" வேலையைத் தொடர்ந்தவாறே அவனது பதில். "நாளைக்கு காலைல நாம அங்க போறோம்ல?" அவள் குரலில் நிதானம் கலந்த தீர்மானம் ஒலித்தது. வேலையை அப்படியே நிறுத்தி நிதானமாய்த் திரும்பினான் முகிலன். "என்ன சொல்றீங்க?" பரிதாபமாய்க் கேட்டாள் அவள். எழுந்து வந்தவன் லேசான ஈரம் ஓடும் அவள் கண்களைப் பார்த்து, கைகளின் இடுக்கில் அவள் முகத்தைக் கொணர்ந்து "போகலாம்..." அவள் நெற்றியில் முத்தம் பதிக்கையில் இரு துளி நீர் அவள் கன்னத்தைக் கடந்தோடியது.

மாநகரின் மைய்யப் பகுதியில் மைதானத்துடன் கூடிய, பள்ளி, தாங்கும் விடுதி என  விசாலமாய் மட்டுமின்றி, கைவிடப்பட்ட குழந்தைகளின் விலாசமாகவும் இருந்தது அந்த  அன்னை தெரேசா இல்லம். ஆம், பெயருக்கேற்றார் போல் தாய்மை மொத்தமாய்க் கொட்டிக்கிடந்த வளாகம் அது. போக்குவரத்து சத்தத்தையும் மீறிய விளையாடும் குழந்தைகளின்  சத்தம் அந்த பகுதியில் இருப்போருக்கு புதிதல்ல. அவ்வளாகத்தின் வாயிலில் ஒரு சிவப்பு  ஸ்விப்ட்  நுழைந்தது அனைத்து குழந்தைகளின் கவனத்தையும் ஒரு கனம் ஈர்த்தது. உள்ளே  நுழையும் வாகனங்கள் பெரும்பாலும் ஏதோ பிறந்தநாளிற்கு இனிப்பு வழங்கவோ, நோட்  புத்தகம் கொடுக்கவோ இருக்கும். சில நேரங்களில் நிர்வாகியை சந்தித்து காசோலை  குடுத்துச் செல்லும் பார்வையாளர்களும் உண்டு.

முகிலனும் அபிநயாவும் காப்பக நிர்வாகியை சந்தித்தனர். முகிலனின் நண்பர் பிரபாகரன்  ஏற்கனவே அனைத்தையும் தொலைப்பேசியில் தெரிவித்ததாகவும், இவர்களது முடிவை  வரவேற்பதாகவும் தம்பிதுரை சொன்னார். பேசியவாரே அவர்கள் மூவரும் குழந்தைகள்  விளையாடிக் கொண்டிருக்கும் பகுதிக்கு வந்தனர். மூன்று வயது முதல் சுமார் பத்து  பன்னிரண்டு வயது வரையிலான சுமார் இருநூறு குழந்தைகள் இருந்தனர். அபிநயாவின்  கண்கள் இங்கும் அங்கும் ஓடின. நான்கு வருட தாய்மைக் கனவின் தேடல் அது. வயிற்றில்  கரு தரிக்கும் அனைவரும், தன் குழந்தையை தானே தேர்ந்தெடுக்கும் பாக்கியமற்றவர்கள்  என்றே எண்ணத் தோன்றுகிறது.

கவலையற்ற, கள்ளமற்ற, வெறும் சிரிப்பும் சந்தோஷமும் மட்டும் கலந்திருக்கும் கூட்டத்தின் நடுவே, வாடிய முகமாய், சோகத்தின் உருவாய் ஒரு பூமுகம் இவள் கண்ணில் பட்டது. முகிலன் மட்டுமே அறிந்தது இவள் கண் பேசும் பாஷைகளை. நீல நிற கவுனில் நிலம் பார்த்து அமர்ந்திருக்கும் நித்தியாவின் கதையை தம்பிதுரை ஆரம்பித்தார். கடந்த வாரம் வரை பல கனவுகளுடன் இருந்த அவளின் பெற்றோர்களோடு சேர்த்து கனவுகளையும் பறித்துக் கொண்டது அந்த கோர கார் விபத்து என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தாய்மை அடைந்ததை அபிநயா உணர்ந்தாள். நித்யாவின் கலைந்த கனவுகளுக்கு உயிர் கொடுப்பதாய் உள்ளத்தில் உறுதி பூண்டாள். நித்திரையற்ற இரவுகளுக்கு முற்றுப்புள்ளியாய் நித்யா.

அப்பிஞ்சு உள்ளத்திற்கு, தான் அபிநயாவைத் தாயாக்கியிருப்பது புரிந்திருக்க வாய்ப்பில்லை. சுற்றி நிகழ்பவையெல்லாம் ஆயிரம் கேள்விகளை விதைக்க, விடைகள் தேடியவாறே வினாக்களுக்குள் தொலைந்தவளாய் நித்யா. நிலம் பார்த்தமர்ந்திருந்தவள் ஏனோ தோன்றி சற்றே நிமிர்ந்தாள். ஒரு ஆறடி தூரத்தில் அபிநயாவின் விழிகள் அரவணைப்பாய் அவளையே பார்த்திருந்தன. இருவரின் கண்களுக்கிடையே இரு நிமிட சம்பாஷணை. அதில் ஆயிரம் கேள்விகளுக்கும் விடை கண்டவளாய் நித்யா, நான்கு வருட கேள்விக்கான பதிலைக் கண்ட இன்பத்தில் அபிநயா. இரண்டு இன்று மூன்றானது.




No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...