Friday 7 October 2016

பொறந்தநாள் பரிசு

ராஜரத்தினம் கைக்கடிகாரத்தை இன்னொரு முறை பாத்துட்டு லட்சுமியை ஒரு மொற மொறச்சாரு. "என்னத்துக்கு இந்த மொறப்பு? கடைத்தெருவுக்கு வரதே என்னைக்காச்சம் ஒரு நாள். வந்த எடத்துல நாலு துணி பாக்கறதுக்குள்ள உங்களுக்கு ப்ரெஸ்ஸரு ஏறீடும். இதுக்கு தான் வீட்டுலயே கெடங்க, நானே பாரதியையும், பசங்களையும் கூட்டிட்டு போரேன்னாளும் விடறதில்ல. கூடவே வந்துட்டு இப்படி எதனா எடாகூடம் பன்றது." அந்த மொறப்புக்கு லட்சுமியம்மா நாலு பக்கம் பதிலை சொல்ல, ஹிந்து பேப்பர் குள்ள ஒளிஞ்சிகிட்டாரு ராஜரத்தினம். பக்கத்துல இருந்த ரம்யா குட்டி இதை பாத்து மேல் வரிசைல ரெண்டு பல்லு விழுந்தது கூட மறந்து விழுந்து விழுந்து சிரிச்சா.

"ஏம்மா.. எல்லாருக்கும் எடுத்தாச்சுல்ல. யாரையும் விட்டர்லயே" பாரதியிடம் லட்சுமி கேட்டாள். அனைவரையும் நினைவு கூறியவாறு யோசித்தவள். "ஹ்ம்.. எல்லாருக்கும் எடுத்தாச்சு" பாரதி பதிலதித்தாள். "நம்ம சாந்திக்கும் ஒரு பொடவ எடுத்தரலாம்" லட்சுமி சொன்னதுக்கு "எம்மா.. அதான் தீபாவளி, பொங்கலுக்கு குடுக்கறோம்ல. அதோட நிறுத்திக்க. இப்படிலாம் நடுல குடுத்து பழகாத. அப்டியே சாந்திக்கு குடுக்கணும்னா... என்கிட்ட வேணா பழசு ரெண்டு பொடவ இருக்கு. அத வேணா குடுத்துவிடறன், கண்டிப்புடன் சொன்னாள்.

எல்லாரும் காலைல பத்து மணிக்கு கடைய தொறக்கும் போது உள்ள போனது. வெளில வரும்போது மணி ரெண்டரை. பில்லு மட்டும் செல்வத்துக்கு குடுக்கற வருஷ சம்பளத்துல பாதிக்கு மேல. "செல்வம்... வண்டிய நேரா ஒரு நல்ல ஹோட்டல்கு விடு" ராஜரத்தினம் குரல்ல ஒரு வாரமா பசில இருக்கற சிங்கத்தோட கர்ஜனை இருந்துச்சு. "பாரதி.. அந்த பச்சை கலர் பொடவ  நல்ல தான்டி இருந்துச்சு. பேசாம அதையும் எடுத்திருக்கலாம்..." மறுபடியும் இவங்க பொடவ பேச்சையே ஆரமிக்க... "அட சீக்கிரம் போப்பா..." இவரு செல்வத்த வெரட்டனாரு.

ராஜரத்தினம் டிஸ்ட்ரிக் கோர்ட் ஜட்ஜ்ஆ இருந்து ரிட்டையர் ஆனவர். கோர்ட்டுல தீர்ப்பு எழுதற பேனாவ வீட்டுக்கு வந்ததும் லட்சுமி கிட்ட குடுத்துருவாரு. தங்கமான மனுஷன். ஊர்ல அவருக்கு தோட்டம் தொரவு, மில்லு லாம் பூர்வீகமாவே இருக்கு. பொண்ணு பாரதி அமெரிக்கன் காலேஜ்ல இங்கிலீஷ் ப்ரோபெஸ்ஸர். கண்ணுக்கெதுர்லயே இருக்கட்டும்னு அவள ஊருக்குள்ளேயே கட்டி குடுத்தாரு. பைய்யன் முகிலன் குழந்தை நல மருத்துவர். ராஜரத்தினம் பேத்தியோட மொத பொறந்தநாள் இங்க தான் கொண்டாடணும்னு ஸ்ட்ரிக்ட்ஆ ஜட்ஜ்மெண்ட் சொல்ல, குடும்பத்தோட அடுத்த வாரம் லண்டன்ல இருந்து வர்றான்.

இந்த தடபுடலான ஷாப்பிங் எல்லாம் அபியோட பொறந்தநாளுக்குதான். "மாடில அந்த ரூமை நாளைக்கு கொஞ்சம் ரெடி பன்னீடுமா" வேலைய முடிச்சிட்டு கிளம்பின சாந்தி கிட்ட லட்சுமியம்மா சொன்னாங்க. "சரிங்கம்மா.. நாளைக்கு செஞ்சுர்ரான்" அவ சொல்லீட்டு போனா. நாலு நாள் போனதே தெரியல. பிரிட்டிஷ் ஏர்வேஸ் எறங்கி இப்ப இருவத்தினாலு மணிநேரம் ஆச்சு. கொண்டு வந்த மூட்ட முடிச்சியெல்லாம் பட்டுவாடா பன்னியாச்சு. ஏதோ ப்ரஸருக்கு போடற மாத்தர மாதிரி வேலைக்கு ரெண்டு சாக்லேட் லட்சுமிக்கு தெரியாம இவரு சாப்டுட்டு இருக்காரு. லட்சுமி பாத்தானா போதும் "பேரபுள்ளைங்களுக்கு குடுக்காம சின்ன புள்ளையாட்டம் முட்டாய் சாப்டுட்டு கெடங்கனு" சத்தம் போட்டுட்டு போவா. விடிஞ்சா அபி பொறந்தநாளு.

தடபுடலான ஏற்பாடு. கலர் கலரா தோரணங்கள். பலூன் அலங்காரம். வீட்டுக்குள்ளயே ஒரு சின்ன திருவிழா மாதிரி இருந்துச்சு. சாயங்காலம் சுமார் ஆறு மணிக்கு ஆரமிச்சது. முக்கியமான நண்பர்கள், சொந்தங்கள்னு ஒரு நூறு பேராச்சம் இருந்துருப்பாங்க. அந்த கூட்டத்தை பாத்தா இந்த துணிக்கட, நகைக்கடக்குலாம் ஒரே எடத்துல விளம்பரம் எடுக்க சேந்த கூட்டம் மாதிரி இருந்துச்சு. அங்க பலர் முகத்துல அழக மிஞ்சின ஒரு ஆடம்பரம் கெடந்துச்சு. சாப்பாடு லாம் சொல்லவே வேணாம். ஒரு கல்யாண பந்தில இருக்கற மாதிரி சாப்பாடு.

அபி அந்த பிங்க் கலர் கவுன்ல குட்டி தேவதை மாதிரியே இருந்தா. பாட்டுலாம் பாடி, கேக் வெட்டி, எல்லாரும் கொண்டு வந்த கிப்ட்லாம் குடுத்தாங்க. ராஜரத்தினம் பேத்திக்கு வைர மோதிரம் போட, பாரதி தங்க காப்பு ஒன்னு குடுத்தா. பிறகு தடபுடலா பந்தி நடந்துச்சு. இவ ஒக்கார நேரமில்லாம ஓடி ஓடி பரிமாறனா. நேரம் போக போக எப்பதான் வேல முடிஞ்சி போறதோன்னு அவ கிட்ட ஒரு தவிப்பு இருந்துச்சி. மொத்த கூட்டமும் போன பெறகு தான் இவளோட சில வேலைங்க ஆரமிக்கும்.

ஒரு ஒம்போதைரைக்குலாம் எல்லாருமே போய்ட்டாங்க. அந்த இடமே வெறிச்சோடி இருந்துச்சு. ஓரளவுக்கு வேல முடிஞ்சப்ப, "மீதிய காத்தால நேரமா வந்து செஞ்சருட்டுமா மா?" அவ லட்சுமியம்மாகிட்ட கேட்டுட்டு இருக்க. "அத வேற என்ன நாளைக்கு செஞ்சிகிட்டு. கையோட முடிச்சிட்டு போய்டு சாந்தி" பாரதியோட கொரல் பதிலா வந்துச்சி. எல்லாத்தையும் ஏறகட்டீட்டு இவ வீட்டுக்கு போவ மணி பதினொண்டரை ஆயிடுச்சி.

இவ வீட்டுக்குள்ள நொழஞ்சதும் நொழயாததும் "ஏண்டி.. இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா வர கூடாது" சாந்தியோட அம்மா ஆண்டாள் கேட்டா. ஆண்டாள பொருட்படுத்தாம சாந்தி உள்ள எட்டி பாத்தா. அந்த ஓரம் கிழிஞ்ச கோர பாய்ல, முடிஞ்ச துணிமூட்டைய தலைக்கு வெச்சி, இவளோட கிழிஞ்ச சேல ஒன்ன போத்தீட்டு வாடிப்போன ரோசா மாதிரி படுத்து கெடந்துச்சு இவ மக மீனா. அதனோட பிஞ்சு கை அந்த பிங்க் கலர் கவுன புடிச்சிருந்துச்சு. போன வியாழக்கிழம சந்தைல, இவ புடிச்ச புடிவாதம் தாளம, அடிச்சு பேசி நூத்தம்பது ரூபாய்க்கு வாங்கனது. வாங்கன அன்னைக்கே போட்டு பாக்கணும்னு அவ தவியா தவிக்க. ".. பாரு.. இப்பயே போட்டுபுட்டா.. அடுத்த வாரம் பொறந்தநாளைக்கு பழசா போய்டும். அன்னைக்கு தான் போடணும்னு சாந்தி அதட்டியே வெச்சிருந்தா.

இன்னைக்கு காத்தால கூட ஆண்டாளு தண்ணி ஊத்தி விட. குளிச்ச ஈரத்தோட வந்து நின்னவ நேரா அந்த டிரங்க் பொட்டில இருந்து அந்த புது துணிய எடுத்து நிக்க. சாந்தி "இத போட்டுனு எப்படி பள்ளிக்கூடம் போவ... இந்த யூனிபார்ம் போட்டுக்க. சாயங்காலம் பள்ளிக்கூடத்துல இருந்து வந்த ஒடனே புது சொக்கா போட்டுட்டு, அம்மா கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்"னு வாக்கு குடுத்து அத வாங்கி வெச்சிட்டா.

"நீ வருவ வருவனு எதிர்பாத்து ஏமாந்து போய் தூங்கீருச்சி டி. அது ஆசயா வாங்கன அந்த புது சொக்காய கூட போடல. அம்மா வந்து தான் போட்டுவுடனும்னு ஒரே அடம். என்ன கிட்டவே நெருங்க விடல" ஆண்டாள் சொன்னாள். "பொறந்தநாளதுவுமா சாயங்காலம் அந்த சொக்காய மாட்டி, பக்கத்தல இருக்கற புள்ளயார் கோவிலுக்கு கூட்டீட்டு போவகூட நேரமில்லாம அப்படி என்னாடி கலெக்டர் உத்தியோகம் பாக்கற" ஆண்டாளு சொல்ல சொல்ல இவ ஒடிஞ்சு போய்ட்டா.


அங்க அடுத்தவன் வீடு பொறந்தநாளுல ஓடி ஓடி ஊருக்கெல்லாம் பரிமாறானவளுக்கு, அவ சுமந்து பெத்த செல்லத்துக்கு பொறந்தநாளதுமா ஒரு வா சோறு ஊட்டி விட கூட குடுத்துவெக்கல. அவளோட இயலாமையும், தேக்கி வெச்ச மொத்த பாசமும் தார தாரயா கண்ணுல இருந்து வந்துச்சு. தூங்கீட்டு இருந்த பொக்கிஷத்த அள்ளி அனைச்சு ஒரு முத்தம் குடுத்தா. அந்த ஆத்மார்த்தமான முத்தம் தங்கத்தையும் வைரத்தையும் விட ஒசத்தியான பொறந்தநாள் பரிசு.


1 comment:

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...