Wednesday 26 October 2016

யாழினி

ஓயாம அழுதுட்டே இருந்தா யாழினி. அவ அழுகைய நிறுத்த படாத பாடு பட்டான் பிரபாகரன். சாக்லேட், ஐஸ் கிரீம், எத குடுத்தாலும் அவ வாய மூடறதா இல்ல. அந்த டெட்டி பியரும், பார்பி டால்லும் இந்த ஆங்கிரி பேர்ட்ட அமைதியாக்கர முயற்சில தோத்து போச்சு. எந்த விளையாட்டு பொருளானாலும் ரெண்டு நிமிஷம் தான் அப்பறம் அவளோட கச்சேரி ஆரம்பமாயிடும்.

அன்னைக்கு காலைல இருந்து எல்லாமே அமைதியாதான் இருந்துச்சு. வழக்கத்துக்கு மாறா யாழினி கேட்டது எல்லாமே அவளுக்கு தாராளமாவே கெடச்சுது. வழக்கமா ஒரு ஐஸ் கிரீம் சாப்பிட்டு ரெண்டாவது வேணும்னு வாய தொறந்தா அவ அம்மா வாய் மேலயே போடுவா. ஆனா அவ இல்லாதது ரொம்ப நல்லதா போச்சு. வயிறு நெறையற அளவுக்கு ஐஸ் கிரீம்.

அவ எப்ப கத சொல்ல ஆரமிச்சாலும் வாய மூடு. அமைதியா டிவி பாருனு ஒரு பதில் தான் கேட்டுருக்கா. இன்னைக்கோ இவ வாய் ஒயரவரைக்கும் கத கேட்டுட்டு இருந்தான் நம்மாளு. அவளுக்கே அது கனவா நெஜமானு கிள்ளி பாத்துக்கற அளவுக்கு நடந்த ஒரு எட்டாவது அதிசயம். அவ பிரென்ட் நான்சி வீட்டு நாய்க்குட்டி ஜூஜூல ஆரமிச்சு, ரீனா மிஸ், வாட்ச்மேன் தாத்தா, சோட்டா பீம் கதைல நேத்து நடந்தது, பேஸ்ட்ல புடிச்ச டேஸ்ட், கிஷோர் வீட்ல அவன் வளக்கற டைனோசர், லான்ல பொதச்சு வெச்ச பல்லு, சாக்லேட்ட விட டேஸ்ட்டா இருக்கற சாக்பீஸ்னு சீசன்ல கொட்டற குத்தால அருவி மாதிரி அவ பேசீட்டே இருந்தா...

பிரபாகர் சுயதொழில் செய்றான். சுயதொழில்னு சொன்னாலே நிரந்தர வருமானம் இல்லனு அர்த்தம். கெடச்சா பிரியாணி இல்லைனா ஈரத்துணிங்கற நெலம தான். ஆனா அவன் பிரச்சனையெல்லாம் தீரரமாதிரி இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங். ரொம்ப நாள் யோசிச்சு அவன் செஞ்ச ஒரு வேலையோட முழு பலனே இன்னைக்கு மீட்டிங்ல தான் இருக்கு. ராஜேஷ் ரங்கராஜன். கன்ஸ்ட்ரக்ஷன் பீல்ட்ல கொஞ்சம் பிரபலம். அவரோட தான் இன்னைக்கு மீட்டிங். டைம், வெனியூ, ஏற்கனவே பிக்ஸ் பன்னியாச்சு. அதுக்கு கிளம்பும் போது தான் இவளோட கதையெல்லாம்.

அவ பிசியா செவுத்துல ஏதோ ஓவியம் தீத்தீட்டே இருந்தப்ப அவன் கெளம்பீட்டே இருந்தான். ஒரு வீடு வரைஞ்சிருந்தா. பக்கத்துல ஒரு மரம். கீழ ரெண்டு ஜீவன். குருவியா, கோழியானு தெரியல. அதுக்கு பக்கத்துல பூச்செடிங்க. எல்லாத்தையும் முடிச்சிட்டு பாத்தா. கொஞ்சம் எக்கி வீட்டுக்கு மேல ஒயரத்துல இவளால தொட முடியற அதிகபட்ச ஒயரத்துல ஒரு வட்டம் வரைஞ்சா. ஒரு அஞ்சாறு கோடு இழுத்துட்டே இருந்தா. சூரியன் முழுமையடையறதுக்குள்ள எதையோ யோசிச்சவ, "இன்னைக்கு என்ன டே?" பிரபாகர பாத்து கேட்டா. இன்னைக்கு சாட்டர்டே மா இவன் சொல்ல. ஓவிய பணிய பாதில விட்டுட்டு அவ ஓன்னு அழ ஆரமிச்சிட்டா.

மன்னாதி மன்னன் கூட மண்ணை கவ்வன எடம் குழந்தை வளர்ப்பு. அகராதிலயே அடம்ங்கற வார்த்தைக்கு அர்த்தம் நிச்சயம் யாழு குட்டின்னு தான் போட்ருப்பாங்க. டிவில வர கார்ட்டூன், ஐபோன்ல இருக்கற கேம் எதுமே செல்லமா போக, மீட்டிங்கு வேற நேரம் ஆகுது, இவ இப்டி அழுதுட்டு இருந்தா எப்படி போறதுன்னு யோசிச்சான்.

சாட்டர்டேனு சொன்னதுக்கு ஏன் அழறானு தெரியல. ஒரு கால் மணி நேரத்துக்கு அப்பறம், சாட்டர்டே மூவீக்கு போயிட்டு அப்டியே தீபாவளிக்கு புது டிரஸ் எடுக்கலாம்னு மம்மி சொன்னாங்கனு சொல்லீட்டு மறுபடியும் அழ ஆரமிச்சிட்டா. சமாதான படுத்த வழியே இருக்கற மாதிரி தெரியல. கொஞ்சம் யோசிச்சு பாத்துட்டு, சரிம்மா அழாத. நானே உன்ன மூவி கூட்டிட்டு போறன். அப்பறம் டிரஸ் எடுக்கலாம். நீ அழக்கூடாதுனு சொன்னான். அதுக்கு பிறகு தான் அவ அமைதியானா. இந்த மீட்டிங்க என்ன செய்றதுனு யோசிச்சவன் அவருக்கு கால் பன்னி "சார். பிளான்ல ஒரு சின்ன சேஞ்ச். ஈவினிங் ஒரு அஞ்சு மணிக்கு ஃபீனிக்ஸ் மால்கு வந்துருங்க. அங்கேயே நாம மீட் பன்னலாம்" னு சொல்ல, அவரும் சரினு சொல்லீட்டாரு.

இவள கூட்டிட்டு படத்துக்கு போனான். அனிமேஷன் படம். காலைல கதறி அழுதவ வேற ஒருத்தியோன்னு நெனைக்கற அளவுக்கு ஒரே சிரிப்பு சத்தம். படம் முடியற வரைக்கும் சிரிச்சிட்டே இருந்தா. நல்ல ரிங் டோன் மாதிரி இருந்துச்சு அவ சிரிப்பு. படம் முடிஞ்சி ரெண்டு பேரும் புட் கோர்ட்ல. கங்காரு மாதிரி இவளை சுமந்துட்டே எல்லா கவுண்டரையும் நோட்டம் விட்டான். அவ நூடுல்ஸ் வேணும்னு சொல்ல, அதையே வாங்கனான்.

அடுத்து ஷாப்பிங். அவ அமைதியா கடைக்குள்ள இருந்தா. வழக்கமா இவ எதனா எடுத்தா, அவளோட அம்மா இதெல்லாம் வேணாம் நானே எடுத்து தரேன். உனக்கு எது வேணும்னு மம்மிக்கு தெரியும்னு அவ இஷ்டத்துக்கு தான் எடுத்து குடுப்பா. ஆனா மொதமொறயா உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோன்னு இவன் சொன்னதும் அவளுக்கு எதுமே புரியல. ஹெட் மாஸ்டர பாத்த ஸ்டூடெண்ட்டாட்டம் அமைதியா இருந்தா. அப்பறமா அவனே சிலதை எடுத்து இது புடிச்சிருக்கா? இது எப்படி இருக்கு? இதுல எது புடிச்சிருக்குன்னுலாம் கேட்டான். ஒன்னே ஒன்னு போதும் இருந்தவ இப்ப அஞ்சு டிரஸ் எடுத்துட்டா. சந்தோஷத்தோட உச்சத்துல இருக்கா.
அடுத்து அங்கேயே ஒரு ஐஸ் கிரீம் டப் வாங்கி குடுத்தான்.

அப்ப அவனுக்கு ஒரு கால் வந்துச்சு. ராஜேஷ் பார்க்கிங்ல இருக்கறதா சொன்னாரு. இவன் அவர மேல காபி ஷாப்கு வர சொன்னான். இவ பக்கத்துல அந்த டிரஸ் எல்லாமே வெச்சிட்டு, இவ கிட்ட ஒரு சின்ன வேல இருக்கு நீ ஐஸ் கிரீம் சாப்டுட்டே இரு, ஒரு டென் மினிட்ஸ்ல நான் வந்துர்ரன். எங்கயும் போக கூடாது. இங்கயே இருனு சொன்னான். இங்கயே இருக்கறதா அவளும் தலையாட்டி டாட்டா சொல்லி சிரிச்சா.

ராஜேஷ் கைல ஒரு லெதர் பேக் எடுத்துட்டு அவன மீட் பன்ன வந்தாரு. எதிர்லயே அவன் கண்ணு பாக்கற எடத்துலயே தான் யாழினி இருந்தா. குட்டி தேவதை. சுத்தி நடக்கற எதையுமே கவனிக்காம ஐஸ் டப்ல மூழ்கீருந்தா. ராஜேஷ் வந்து அவன் கிட்ட பேசன ரெண்டு நிமிஷத்துலயே நாலு தடவ அவள இருக்காளான்னு பாத்தான். பேசி முடிச்சதும் அந்த லெதர் பேக்க எடுத்துட்டு அதுக்குள்ளயே ஒரு தடவ எதையோ சரிபாத்துட்டு பிரபாகர் கிளம்பீட்டான்.

சாப்டுட்டே இருந்த யாழினி நிமிந்து பாத்தா ராஜேஷ் நின்னுட்டு இருந்தாரு. வாமா போகலாம்னு அவள அவர் தூக்க. அவ வரமாட்டேன்னு அழுதா. பக்கத்துல இருக்கவங்களாம் ஒரு மாதிரி பாக்க, யாழினி ஏன் பிரச்னை பன்ற? டாடி கூட வானு ராஜேஷ் அதட்டி கூப்பிட, இல்ல வரமாட்டேன். நான் அங்கிள் கூடவே இருக்கேன். எனக்கு நீ வேணாம். நீ ஆபீஸ்லயே இரு. எனக்கு உன்ன புடிக்கல. ஏன் இங்க வந்த? நான் உன் கூட வரலனு அழ ஆரமிச்சிட்டா.

ஐ ஆம் யுவர் பாதர் டாமிட். அவன் குரல உயர்த்த. நீ என் கூட பேசல. ஸ்டோரி சொல்லல. நான் பேசறதை எதுவும் கேட்கல. ஸ்கூல்ல ட்ராப் பன்னல, ஷாப்பிங் கூட்டிட்டு போல. ஹோம் வர்க் செஞ்சி குடுக்கல. உன் லேப்டாப்ல கேம் விளையாட குடுக்கல. ஐ போன் பாஸ்வோர்ட் சொல்லல. நான்சி, கிஷோர், ரம்யாவோட பாதர் செய்றது எதுமே நீ செய்யல. அப்பறம் எப்படி நீ என் பாதர்?

அந்த அங்கிள் எங்க? அவரு வேணும். அங்கிள்.. அங்கிள்... என்ன விட்டுட்டு எங்க போனீங்க? யாழினியோட கலங்கன கண்ணுங்க பிரபாகரனை அந்த கூட்டத்துல தேடுச்சு. இருவத்தஞ்சி லட்சம் டீல் முடிச்சு, பிரபாகர் லெதர் பேக்கோட போகும்போது அவளோட அழுக சத்தம் மட்டும் காதுல கேட்டுட்டே இருக்க, பாலன்ஸ் ஷீட்டையே பாத்துட்டு பர்சனல் லைப்ல பாலன்ஸ் இல்லாம பாதாளத்துல விழுந்திருக்கறத மொதமுறையா உணர்ந்தான் ராஜேஷ்.



No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...