Monday 24 October 2016

வேட்டை

"ஒன்னு நான் சொல்றத செய்... இல்லனா வேற வேல தேடிக்க" மெரட்டீட்டு கைப்பேசியை  துண்டிச்சான் அவன். தூண்டில போட்டாச்சு எப்படியும் மீன் வந்து மாட்டும்னு நெனச்சிட்டே அந்த பீர் பாட்டில வாயிலேயே கடிச்சு தொறந்து ரெண்டு சிப் குடிச்சான். அப்ப வீட்டு காலிங் பெல் அடிச்சுது. சரக்கு பாட்டிலை தொறந்தாலே மோப்பம் புடிச்சிட்டு அழையா விருந்தாளிங்க பங்குக்கு வந்துருவாங்களேனு நெனச்சிக்கிட்டே  கதவ தொறந்தா, அவன் ஆடர் பன்ன சாப்பாடு பார்சல் வெச்சிட்டு ஒரு பைய்யன் நின்னுட்டு இருந்தான். சாப்பாடுக்கான காச வாங்கீட்டு, டெலிவரி பாய்க்கே உரிய அசட்டு சிரிப்போட "தேங்யூ சார் ஹாப்பி டைனிங்"னு சொல்லீட்டு போனான். சைடு டிஷ்ஷும் அவன் கொண்டு வந்து குடுத்தது, செம டைமிங்

டைனிங் டேபிள்ல அத வெச்சிட்டு அப்டியே டிவிய ஆன் பன்னா, புலி வேட்டைக்கு போறத பத்தி சொல்லீட்டு இருந்தாங்க. அத பாத்துட்டே சாப்பிட ஒக்காந்தான். ஒரு பத்தடி தூரத்துல மேஞ்சிட்டு இருக்கற மான புடிக்க ஒரு புலி பதுங்கி இருந்துச்சு. மான் எப்படியும் மாட்டீரும்னு ஆர்வமா பாத்துட்டே இருந்தான். அப்ப கைப்பேசில ஒரு குறுஞ்செய்தி. "மன்னிச்சிருங்க. என் புருஷனுக்கு என்னால துரோகம் செய்ய முடியாது"னு அவ அனுப்பியிருந்தா. "உனக்கு வேற வழி இல்ல. நல்ல முடிவா எடு" பதில் அனுப்பீட்டு அவன் சிக்கென கடிச்சான். நேரம் பாத்து சரியா புலி பாஞ்சிது. துளியும் அத எதிர்பார்த்திராத அந்த மானோட பின்னங் கால் புலியோட வாயில. அது முன்னங் கால்களால அப்டியே மானோட வயிற்று பகுதியை அழுத்தி புடிச்சிருச்சு. துடிதுடிச்ச மான் உயிருக்காக எவ்ளோவோ போராடுச்சு. ஒரு கட்டத்துல புலி மானோட கழுத்த நல்லா கவ்வீறுச்சு. மான் உயிரை விடற வரைக்கும் புலி மான விடல. இதை ரொம்ப ரசிச்சு பாத்தான். பீரும் காலி, தட்டுல இருந்த சோறும் காலி

சாப்டு முடிக்கும்போதுதான் அந்த கவர்ல ஒரு துண்டு சீட்டு இருந்தத கவனிச்சான். அது என்னனு பாக்க எடுக்கும்போதே தலை சுத்தி சேர்ல இருந்து சரிஞ்சி கீழ விழுந்துட்டான்.  சும்மா ரெண்டு பீருக்கு போய் போதை ஆகற ஆல் கெடயாது. வேற ஏதோ நடந்திருக்கு. ஆனா என்னனு தெரியல கண்ணுலாம் மங்கீருச்சி. மூச்சு விட முடியல. மொகமெல்லாம் வியர்வை. மூக்குல ஏதோ வடியறத உணர்ந்து, என்னனு தொட்டு பாத்தா செவப்பா இருந்துச்சு. ரத்தம்.. மொபைல் அவன்  கைக்கு எட்டற தூரத்துல இல்ல. வயித்து மேலயும் தொண்டை மேலயும் நாலு பேரு நிக்கற அளவுக்கு ஒரு பாரம். அதுல இருந்து அவனால மீண்டு வர முடியல. தரைல போட்ட மீன் மாதிரி ஒரு பத்து நிமிஷம் துடிச்சான்

அது எல்லாத்துக்கும் நடுல பல முகங்கள் நிழலாடுச்சு. பல கதறல்கள் அவன் காதுல ஒலிச்சிது. அந்த துண்டு சீட்டுல இருந்த வரிகள் வேற மறுபடியும் கண்ணுக்குள்ள ஒரு ஓவியம் மாதிரி வந்து போச்சு. ரொம்ப பழக்கப் பட்ட ஒரு கையெழுத்து. ஓவியம் வரைஞ்சு வெச்ச மாதிரி ஒரு கையெழுத்து. ஏதோ அழகான விரல்களுக்கு சொந்தமான கையெழுத்தா தான் இருக்கணும். ஆனா யாரு, எந்த ஊரு, எதுமே தெரியல. அவன் தலையெழுத்து முடியற நேரத்துல அவன் பாத்த ரெண்டு வரிகள் "ஹாப்பி லாஸ்ட் டின்னர். குட் பை பார்எவர்"


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...