Saturday 8 October 2016

விடிவு காலம் தூரமில்ல

கார வீட்டு
மருமக
சொமந்த கரு
வெளிவர,
சந்தோஷத்துக்கு
பஞ்சமில்லை,
கொண்டாட்டத்துக்கு
எல்லையில்ல.

ரெண்டு தெரு
பக்கத்துல,
குடுசை வீடு
ஒண்ணுத்துல,
பத்து மாச
முடிவுல,
பெத்தெடுத்தா
ஒத்தபுள்ள.

மேனகாவின்
மாமியாரு
பொட்டபுள்ள
பெத்ததுக்கு,
லட்சுமியே
பொறந்ததா,
கன்னத்துல
முத்தம் வெக்க;

சாந்தியோட
மாமியாரோ, இவ
செத்து பொழச்சு
பெத்தெடுத்தது,
தங்கமில்ல
தகரமுன்னு
சாந்தியை தான்
தள்ளிவெக்க;

தாத்தாவான
சந்தோஷத்துல,
கெடாவெட்டுனார்
நாட்டாம,
பொண்ணு பெத்ததும்
பொண்ணாவ,
விதியை வெறுத்தா
ஆண்டாளு.

தரையிலேயே
கால் படாம
குடும்பம் தாங்க
அவ அங்க,
கட்டாந் தரைல
பாய விரிச்சி,
படுத்து கெடந்தா
இவ இங்க.

பேத்திக்குதான்
பேரு வெக்க,
ஜோசியம் லாம்
பாத்தாங்க,
எழுத்து நாலு
வெச்சிக்கிட்டு,
கூகிள் கிட்டயும்
கேட்டாங்க.

பொறந்த நேரம்
குறிக்கல,
ஜோசியமும்
பாக்கல,
மனச பாதிச்ச
கதையில,
இருந்த பேர
வெச்சிபுட்டா.

நல்ல நாள்
ஒண்ணுத்துல,
ஊர் உலகம்
சுத்தி நிக்க,
வெள்ளி கம்பி
தொட்டிலிலே,
அபிநயானு
பேரு வெக்க;

தென்னை ஓலை
குடுசையில,
பழைய சேலை
தொட்டிலிலே,
மின்னுன
சின்ன பொண்ணுக்கு
மீனா னு
பேரு வெச்சா.

பாலும் பழமும்
ஒரு பக்கம்,
பழைய சோறு
மறு பக்கம்,
வாய் ருசிக்கு
அந்த பக்கம்,
வைத்து பசிக்கு
இந்த பக்கம்.

ஏசி போட்ட
ரூமுக்குள்ள,
பஞ்சு மெத்தை
மத்தியில,
கரடி பொம்ம
பக்கத்துல,
படுத்து கெடக்கு
சின்னபுள்ள.

நிலா வெளிச்சம்
வீட்டுக்குள்ள,
அம்மா பாட்டு
காதுக்குள்ள,
பனை விசிறியோட
காத்தினிலே,
தூக்கம் வழியுது
கண்ணுக்குள்ள.

ஏசி போட்ட
காருகுள்ள,
எட்டடுக்கு
மாலு உள்ள,
மாசம் நாலு
ஞாயிறுமே,
காச தீக்க
போயிவர;

வெசாலகெழம
சந்தையில,
காத்தடைச்ச
பலுகுண்ட,
வாங்கி கையில
குடுத்துப்புட்டா,
சந்தோஷத்துல
குதிச்சிடுவா.

கீச்சு கீச்சுனு
பேசுமுன்னே,
கிரீச்சுல போய்
விட்டுட்டாங்க,
நாப்பதாயிரம்
பீஸ் கட்டி,
நாலுமணிநேரம்
தெனமும் அங்க.

அரசு போடும்
சத்துணவு,
அர வயித்த
ரொப்புமுன்னு,
பால் பள்ளு
மொளச்சவளா,
பால்வாடில
வுட்டுப்புட்டா.

காலச் சக்கரம்
சொழழுதே,
அபி மீனா வாழ்க்கை
வளருதே,
இறுதி தேர்வு
முடியுதே,
முடிவும் ஒடனே
தெரியுதே.

பாஸ் மார்க்கு
வாங்கிபுட்டா,
நெனச்ச படிப்பும்
சேந்துக்கிட்டா,
காசு மட்டும்
இருந்துபுட்டா,
சீட்டு ஒன்னும்
கஷ்டமில்லை.

இட்டிலி கடை
சாந்தியை,
ஹிந்துவும் தந்தியும்
தேடிவர,
குப்பத்துக்குள்ள
ஆரவாரம்,
மாநில ரேங்க்
இவ நெலவரம்.

மருத்துவம்தான்
படிச்சிப்புட்டு,
மறக்காம
இங்கயே வந்து,
மருந்து கழிச்சு
கொடுப்பேன்னு,
சாந்தி பொண்ணு
சொல்லிப்புட்டா.

ஓலை குடிசை
வீட்டுக்கெல்லாம்,
ஏட்டு கல்வி
பாரமில்ல,
சாந்தி பட்ட
கஷ்டத்துக்கு,
விடிவு காலம்
தூரமில்ல...







No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...