Monday 26 November 2018

அசுர அமைதி

கூட்ட நெரிசல்களிலிருந்தும்
இரைச்சல்களிலிருந்தும்
வழக்குகளிலிருந்தும்
வாதங்களிலிருந்தும்

கால்கள் ஓடத்துடிக்கும்
அந்தப் பேரமைதி
நிலப்பரப்பை அடைய

ஒரு கோப்பை மதுவோ
ஒரு புத்தகமோ
பார்த்துப் பிடித்த படமோ
பழகிய பாடல் வரிசையா
திக்குத் தெரியாமல்
செல்லும் நீள் பாதையோ
தேவையில்லை.

என்றும் முடிவுறா
வார்தைப் போர்களில்
கூர் வார்த்தைகள்
நெஞ்சை ரணமாக்கும்

ஒன்று
அசுரனாகலாம்
இல்லை
அமைதி காக்கலாம்

அசுரனாகிட வெறும்
ஆயுதங்கள் போதும்
அமைதி காக்கவே
நெஞ்சில்
அசுரபலம் வேண்டும்

Thursday 26 July 2018

உயிர் கொடுங்கள்

பூமிவந்த
புத்துயிரொன்று
சுவாசிக்க
சிரமப்படுகிறது
இரும்பாலையின்
சப்தத்தில் அதன்
பிஞ்சு காது மடல்கள்
பழுதடைகின்றன
கரிவளியை
கக்கியபடியே
பராமரிப்பற்ற
அரசு பேருந்து
கடக்கையில்
அது மேலும்
மூச்சிற்கு திணறுகிறது
ஆலையை மூட
நடக்கும் சாலை மறியலில்
எரியும் டயரின் புகை
பிஞ்சு நுரையீரலை
நஞ்சாக்குகிறது
வனங்களை அழித்து
வாகனங்களுக்கு
ராஜபாட்டையிடும்
ஒப்பந்தம் ஒன்றும்
கையெழுத்தானது
இரண்டு மூன்று
நான்கென
எந்திர சக்கரங்களில்
விரைந்தோடியதில்
கரப்பனின் இடுக்கிலும்
கரும்புகையே மிச்சம்
அச்சோ
மூச்சுத்திணறலின்
வேகம் கூடுகிறது
குழந்தை
உயிர்த்திருக்க
துடிக்கிறது
யாரேனும்
உயிர் கொடுங்கள்
மரம் ஒன்றை
வளர்த்து

Wednesday 18 July 2018

கிணற்றில் கிடந்தது போதும்

பாடப்புத்தகங்கள் சொல்லிக் கொடுத்தது
திருக்குறளில் ஒரு சில அதிகாரங்களையே.
வள்ளுவன் எழுதியதும் வெறும் 133 தான்.
வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் அதற்க்கும் மேல்.
கைநாட்டு பாட்டனுக்கு கையெழுத்து போடும் அப்பன் ஆனந்தம்.
கையெழுத்து அப்பனுக்கோ பட்டம் பெற்ற மகன் பேரானந்தம். ஆனால் அவன் பெற்றவனோ இரண்டு பட்டங்களுடன் மூன்று ஆண்டுகளாய் வேலைத் தேடி.
அன்றைய எஸ்.எஸ்.எல்.சியின் அறிவைக்கூடவா இன்றைய முதுகலைப் பட்டதாரி பெறவில்லை.
ஆண்டுகள் வளர திறமைகள் தேய்ந்தா போயின? எல்லாம் கற்க முனைந்து வழியில் முக்கியமானதெதையோ கற்க மறந்தோம்.
பொறியியல் படிப்பு வெளிநாட்டு விசாவையும், கிரீன் கார்டையும் பெற்றுத்தருமென சீட்டுக் கம்பேனியில் பணம் போட்டு ஏமார்ந்தோர் போல்
பொறியியல் பொறியில் ஆயிரக் கணக்கான எலிகள்.
அறியாமை என்று யாரைச் சுட்டுவது?
ஆய் அப்பனையா? ஆசானையா?
அனைத்தையும் பார்த்து உண்மை என நம்பி
நாமே ஏமார்ந்ததால் நம்மையேவா.
படிப்பிற்க்கும் பணிக்குமான சம்பந்தம்
என்றோ எங்கோ துண்டிக்கப்பட்டது தெரியாமல் அனைவரும், அனைவருமே அப்பயணத்தை மேற்கொண்டு, உண்மை உணரும் போது திரும்பவியலா தூரம் வாழ்வில்.
படிக்கும் போதே வேலையென
நம்பிக் கொண்டுதானே சிலர் சேர்கிறார்கள்.
பக்கத்து வீட்டு அண்ணன் பகரின் சென்றானே என அவன் வழி செல்லாதீர்
எதிர் வீட்டு அக்கா அமெரிக்காவில் உள்ளதால் அவள் பாதை நம்மையும் அமெரிக்கா எடுத்துச் செல்லுமென உறுதியில்லை.
என்னவாகப் போகிறோமென்ற தேடல் நமக்கு வெளியே, நம்மைச் சுற்றி இருப்பதை விட,
அதிகமாய் நமக்குள் இருக்க வேண்டும்.
என் நாட்டம் எங்கு இருக்கிறது
என் இதயம் எதில் துடிக்கிறது
என் கனவு எத்திசையில் உள்ளது.
அதைத் தேட வேண்டும்.
அதன் பின் ஓட வேண்டும்.
பாதைகள் கடினமான இருக்கலாம்.
கரடுமுரடாக, காட்டு வழியாக, அரவங்கள் நிறைந்து அபாயங்களுடன் இருக்கலாம்.
கல் தடுக்கி கால் இடறுமிடத்தில் பெரிய பள்ளத்தாக்கு இருக்கலாம்.
சீறும் அலைகளுடன் கொந்தளிக்கும் ஆழி இருக்கலாம்.
காடு மலைகள் தாண்டி வெற்றிக் கோடு
எங்கோ தூர தேசத்தில் இருக்கலாம்.
ஆயத்தமாவோம். அப்பாதை நடக்க.
உண்மையில் வெற்றி என வரையறுக்கப்பட்ட ஒன்று ஏதுமில்லை. அது ஒரு மன நிலையே.
நம் வெற்றி மகுடத்தை யாரும் தயார் செய்வதில்லை. அது சுயமாக நாமே எடுத்துக்கொள்வது. நமக்கு நாமே சூடிக்கொள்ளும் மணிமகுடம்.
நம் சந்தோஷத்தில், நிம்மதியான உறக்கத்தில், உள்ளத்தின் பூரிப்பில், ஆர்ப்பரிப்பில், மனதின் கொண்டாட்டத்தில் தான் உள்ளது உண்மையான வெற்றி.
கிணற்றில் கிடந்தது போதும். புறப்படுவோம் கடல் நோக்கி ஒரு பயணம்.

Tuesday 3 July 2018

சொல்

உறைபனியின் நடுக்கத்தை
எரிமலையின் உஷ்ணத்தை
பூகம்பத் தாக்கத்தை
பெரும்புயலின் சீற்றத்தைத்
தரவல்லது தான் வாய்
தவறும் ஒரு சொல்.

கால்தடம்

யானைகள் கடந்த
பாதையில்
யானைகளின் கால்தடம்
வேங்கை பாய்ந்த
இடங்களில்
வேங்கையின் கால்தடம்
முயல்கள் துள்ளிய
வனத்தில்
முயல்களின் கால்தடம்
சிறுத்தை ஓநாய்
சிறுநரி சர்பம்
எனபல தடங்கள்
ஆறறிவு மந்தைகள்
அடர்வனத்தில்
எங்கேயோ

நேரடியாக பாதிக்கப்பட்டவன்

மெஸ்ஸியை தெரியாதிருப்பது
தேச துரோகமில்லை
நெய்மாரின் சாதனைகளை
அறியாததும் பெரிய குற்றமில்லை
பிரேசிலின் வெற்றியை
முகநூலில் பகிராவிடின்
மார்க் நம்மை
தள்ளி வைக்கப்போவதில்லை
அர்ஜென்டினாவின் தோல்வி
நெஞ்சில் பாரத்தையோ
போர்சுகலின் வெளியேற்றம்
கண்களில் ஈரத்தையோ
தராமல் இருந்தாலும்
கேடில்லை நலமே.
பல கோடி மக்கள்
கொண்டாடும் திருவிழாவை
ஒரு சிலர்
புரிந்துகொள்ளாதிருப்பது பாவமில்லை
அட பிரேசிலோ பர்மாவோ
உருகுவேவோ உகாண்டாவோ
கால்பந்து கோப்பையை
கையிலேந்தி நெஞ்சில் சுமக்கட்டும்
நம் இயல்பு வாழ்க்கை
அதனால் மாறப்போவதில்லை

-- நேரடியாக பாதிக்கப்பட்டவன்


பட்டாம்பூச்சி

கல்லறைத்தோட்டத்தில்
சிறகடிக்கும்
பட்டாம்பூச்சிகள்
புதைத்த உடல்கள் தான்
உயிர்த்துத்
திரிகிறதோ



*****************


வனக் காவல்
நிலையத்தின்
கயவர் பட்டியலில்
வடை களவாடிய 
காக்கை
அதை ஏமாற்றிய
நரியுடன்
அப்பம் பங்கிட்ட
குரங்கும்.



********************

பசுந்தழையோ
பசை தடவிய தாளோ
பசு செறித்து
தருவதென்னவோ
பால் மட்டுமே



*******************

நேரத்தே வீடு
திரும்பவியலா
காரணத்தினாலோ
வீட்டையும் சுமந்தே
ஊர்கிறது நத்தை.



******************


பசித்த
எறும்பின்
பயணம்
கரும்புத்
தோட்டத்தை
அடைந்தும்
முடியவில்லை



*********************

வழி தவறிய தேனீ
தேடித் திரிந்து
அலைந்து அலுத்து
இறுதியாய்
ஓர் மலரில் 
வந்தமர்ந்ததும்
வெடி முழங்க
பறை கிழிய
கிழவனின் சடலம்
புறப்பட்டது.

Friday 22 June 2018

அம்மாவின் முந்தானை


கசியும் குழந்தையின்
கண்ணீரைத் துடைக்கும்
கொதிக்கும் குழம்பு 
சட்டியையும் இறக்கும்
மழையில் நனைந்த
தலையத் துவட்டும்
மழலைக் காதில்
அழுக்கும் அகற்றும்
மடியில் சாய்ந்தால்
மெத்தையாகும்
வெட்கி மறைய
திரையாய் மாறும்
பங்குனி வெய்யிலில்
விசிறியும் அதுவே
மார்கழிப் பனிக்கு
போர்வையும் அதுவே
தோட்டத்தில் காய்களையோ
வீதியில் உதிரி
சாமந்தியோ அதை
முந்தானையே ஏந்தும்
கொதிக்கும் தனலில்
சமைக்கும் போது
உதிர்க்கும் வியர்வையை
ஒத்தி எடுக்கும்
சமையல் முடித்து
கழுவிய கைகளின்
சொட்டும் ஈரமும்
அதுவே உலர்த்தும்
கதைகள் சொல்லி
ஊட்டி முடித்து
வாயைத்துடைக்க
முந்தானை போதும்
அவள் வாசம் பரவிய
முந்தியைப் பற்றி
ஆனந்தமாய் அவள்
குழந்தையும் துயிலும்

யார் கரை ஒதுங்கியது

நீள் சாலையின்
அடர் நெரிசலில்
சிக்குண்ட வாகனமாய்
அகண்ட வானின்
அறியா பாதையில்
அறுந்த காத்தாடியாய்
பிடிப்பைத் தேடி
உயிர்த் துடிப்பில்
நீந்தும் எறும்பாய்
ஓயா பசியிலும்
தேயா பொறுமையுடன்
ஒற்றைக்கால் நாரையாய்
வார்த்தைக் கடலில்
மையம் கொண்ட
எண்ணப் புயலில்
எங்கோ தொலைந்து
எழுதி அடித்து
மீண்டும் துவங்கி
சுழலில் சிக்கி
ஆழியில் மூழ்கி
மூச்சிரைத்து
கரை ஒதுங்கியது
இறந்த கவிஞனா
பிறந்த கவிதையா


பெண்ணுரிமை

எஞ்சியுள்ள 
கறித்துண்டு 
அவன் தட்டைச் 
சேரும்போதே 
சம உரிமை 
சிதைகிறது


*************


அவன் விரும்பிய
அலைவரிசையே
அந்நாள் முழுதும்
ஒளிபரப்பில்


***************

சுதந்திரமாய்
பறக்கிறாள் அவள்
இவன் அடைத்து
வைத்த கூண்டிற்குள்


******************

50 கிமீ வேகத்தில்
அவள் முந்தியதை
ஏற்கா மனதா
50 சதவிகிதம்
அனைத்திலும்
மனமுவந்து
கொடுக்கும்


****************

அதே அலுவலகத்தில்
அதே பணிக்கு
ஒன்றாய்ச் சென்று
ஒன்றாகவே
வீடடைந்து

அவன் கையில் ரிமோட்
அவள் கையில் கரண்டி

*********************

அவள் சம்பளத்தின்
செலவுக் கணக்கிலும்
இவன் பெயரே
இருக்கிறது

******************

மகனுக்கு
பொறியியல்
மகளுக்கு
இயற்பியல்
சிலர் வீட்டில்
எழுநூறு
எடுத்தவன்
காமர்ஸும்
ஆயிரமெடுத்தவள்
அடுப்படியிலும்
சிலர் வீட்டில்

********************


நான்காவது சுற்று...!

மூச்சிரைக்க மூன்று முறை
பூங்காவை வளம் வந்து
கல்லிருக்கையில் அமர்ந்தவுடன்
இரு தினம் முன்பு 
பரிசோதனை முடிவில்
துடிக்கும் இருதயம்
தவிக்கும் நிலையெனவும்
சர்க்கரையின் சதவிகிதமும்
சற்றே கூடுதலெனவும்
அதிக உடல் எடை
அதிக ஆபத்தெனவும்
மருத்துவர் சொன்னது தான்
அவர் மனதினில் ஒலித்தது
திருமணத்திற்கு நிற்கும் அபிநயா
பிளஸ் டூ பயிலும் அபிஷேக்குடன்
தன்னை தவிர ஏதுமறியா
சிவகாமியின் முகமும்
ராஜேந்திரனின் கண் முன் வர
ஒரு பெருமூச்சுடன்
மீண்டும் எழுந்து
நடக்கத் தொடங்கினார்
சற்றே வேகமாக
நான்காவது சுற்று...!

ஆறறிவு அரக்கர்கள்

வேர் சாய்ந்த
மரத்திற்கு
ஒப்பாரிப் பாடும்
குயில்கள்
இறந்த தட்டானின்
பிரேதத்தை சுமக்கும்
எறும்புகள்
உதிர்ந்த மலரின்
மெளன அஞ்சலியில்
வண்ணத்துப் பூச்சிகள்
வாடும் செடிகளுக்கு
வருத்தம் தெரிவிக்கும்
வண்டுகள்
மரணமும் அழிவும்
இயற்கைக்கு தான்
இந்த ஆறறிவு
அரக்கர்களால்.

Breaking News

எட்டு மணி
ஒளிபரப்பில்
முதன்மைச் செய்திக்கு
பத்து மணி
செய்திகளில்
இடமில்லை
நாட்டை உலுக்லிய
துர்மரணத்தின்
சிதை பற்றுவதற்க்குள்
அச்செய்தி
அனைந்து விடுகிறது
அதே நேரத்தில்
வெளியாகும்
பத்து விவாத
மேடைகளில்
நூறு தலைப்புகள்
ஐ.பி.எல். தடை
வழக்கை
முன்னிலைப்படுத்தி
காவிரி நடுவர் மன்ற
வழக்கு ஒத்திவைப்பு
ஐ.பி.எல் ல்
கலந்துவிட்டதால்
காவிரியும்
கேளிக்கையாய்
வேண்டாமென்றும்
இங்கேயே வேண்டுமென்றும்
போராட்டங்கள்
பரிதாபங்களுக்கிடையில்
பலரின் கனவு
கருவறுக்கப்பட்டதுடன்
சில உயிர்களும்
ஸ்ரீஜாவின்
அரைநிர்வாணப்
போராட்டம்
முதற் பக்கத்தில்,
ஸ்டெரிலைட்டும்
முழு நிர்வாண
விவசாயியும்
இருட்டடிப்பில்
வன்புணர்வொன்றின்
உயிர் சேதத்திற்கெதிராய்
கருப்பு புரொபைல்
மாற்றுவதற்க்குள்
சிவப்பு சட்டை
சேலஞ்சுகள்
எது முக்கியமென
யோசிக்கவிடாது
ஒற்றை நாளுக்குள்
ஓராயிரம் செய்திகள்
எழுதுவதற்காய்
பட்டியலிடுகையில்
அந்த முக்கிய
பட்டியல் வெளியீடு
பிக் பாஸ் - சீசன் டூவில்
ராய்லட்சுமியுடன்
லட்சுமி மேனன்.

துளிகள்

குரங்குகளாகவே
இருந்திருப்பின்
அகிலமே
அடர்வனமாயிருக்கும்.

*****************

ஒரு விதையில்
காடாகும் 
விந்தையும்;
சில கருவில்
காடழிக்கும்
சிந்தையும்.


*******************

சதுரடி நிலத்திற்கென
விலையான போதே
முருங்கைக்கும்
வாழைக்கும்
வழியின்றிப் போனது.


*********************


என்றோ நதிக்கரைகள்
வளர்த்த நாகரீகம் தான்
அந்நதிகளையே
இன்று சூறையாடுகின்றன



************************

வந்தமர்வோரை
ஏற்கும், மறுக்கும்
உரிமை மட்டும்
நாற்காலிக்கு
இருந்திருந்தால் 
வேட்பாளர்களின்
தரம் கூடிப் போகும்



***********************

எதிர்பாரா 
அதிகாலை
அழைப்புகள்
ஏதும்
நற்செய்தி 
தாங்கி
வருவதில்லை.


*********************

அவசரப்பட்டோமென
ஆதங்கப்படுகையில்
அநேகமாய்
அனைத்துமே
முடிந்து தான் 
போயிருக்கும்.


*********************

அந்த கோரத்
தீ விபத்தில்
கருகிய
பதிமூன்று பேரின் 
சாம்பலை
எப்படிப் பகிர்ந்து
கொடுப்பது
எட்டு
சாதியினர்க்கு


*********************

வார்த்தைகள் மரித்த
அவ்வீட்டின்
தனித்தனி அறைகளில்
முகநூல் பகிரி என
சில ஜி.பிகளோடு
கரைகின்ற இரவில்
அடர் மெளனத்தின்
விசும்பலும்



**************************


ஏதோ ஒரு வீட்டில் 
குழந்தையின் 
அழுகுரல் தான்
இவள் அடி 
வயிற்றை புரட்டி
நெஞ்சை 
கனக்கச் செய்கிறது

ஐந்தைவிட ஆறொன்றும் பெரிதல்ல

யானைகள்
பொய்யுரைப்பதில்லை
பூனைகள்
புறம் பேசுவதில்லை
வண்ணத்துப் பூச்சிகள்
வதந்தி பரப்புவதில்லை
குயில்களும்
குறை கூறுவதில்லை
குரோதத்துடன்
குருவியோ
பாரபட்சம் பார்க்கும்
பருந்தோ
எள்ளி நகையாடும்
எறும்போ
ஏசிப் பேசும்
எருதோ எங்குமில்லை
கோள் மூட்டுதலோ
பொறாமை கொள்ளுதலோ
தற்பெருமை பேசுதலோ
தீண்டாமை பழகுதலோ
துரோகம் வஞ்சனை
வயிற்றெரிச்சல்
கோபம் தாபம்
சூது வாது கிடையாது
பழி போடுதல்
பழி வாங்குதல்
பிறர் துயரில்
மனம் துள்ளுதல்
உயர்திணை
தீக்குணங்கள் ஏதும்
அஃறிணையில்
அறவேயில்லை
ஐந்தைவிட
ஆறொன்றும்
எவ்வகையிலும்
பெரிதேயில்லை.


சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...