Wednesday 30 November 2016

சத்தம்

ஆனைமலை வனப்பகுதியில் சீரமைப்பு பணி நடந்துட்டு இருந்துச்சு. வன விலங்குகள் எல்லாம் சேந்து அவங்க காட்டுல இருக்கற குட்டைகளை தூர்வாரறது, குளக்கரைகளை சீர் அமைக்கறதுனு ஆளுக்கு ஒரு வேலைய செஞ்சிட்டு இருந்தாங்க. குளம் குட்டையெல்லாம் சீரா இருந்தா தான அடுத்த பருவ மழைக்கு எல்லாம் ரொம்பி விலங்குகள் தாகத்த போக்க தண்ணி கெடைக்கும்? அதனால அந்த பணியெல்லாம் கடந்த ஒரு வாரமா நடந்துட்டு இருக்கு.

காட்டு ராஜா சிங்கம், அன்னைக்கு அதிகாலைல கெளம்பி, எல்லா இடத்துக்கும் வேலையெல்லாம் எப்படி நடக்குதுன்னு பாக்க போச்சு. கூடவே அதனோட அமைச்சர் கரடியும் போச்சு. காடு ரொம்ப பெருசில்லயா. அதயெல்லாம் பாத்துட்டு திரும்பி வர அடுத்த நாள் மதியம் ஆயிடுச்சு.

சிங்கத்துக்கு ஒரே களைப்பா இருந்துச்சு. நல்ல வயிறார சாப்புட்டு ஒரு தூக்கத்த போடணும்னு நெனச்சுது. தூங்க போறதுக்கு முன்னாடி அதோட ரெண்டு குட்டியையும் கூப்புட்டு, " அப்பா இப்ப தூங்க போறன். யார் வந்து கேட்டாலும் நாளைக்கு வர சொல்லு. சத்தம் கித்தம் போடாம அமைதியா இருக்கனும்னு" சொல்லீட்டு தூங்க போச்சு.

சிங்கம் கண்ணமூடி முழுசா மூணு நிமிஷம் கூட ஆகல. பக்கத்துல இருந்து ஓஓஓங்குனு  ஒரு சத்தம். சிங்கக்குட்டிங்க பதறுச்சு. அப்பா முழிச்சாரு நம்மள வைவாரு. சீக்கிரமா அந்த சத்தத்த நிறுத்திப்புடனும்னு நெனச்சுதுங்க. இந்த சத்தத்துக்கு சொந்தக்காரன் யாரு? பானை வயிற்று யானையா? இல்ல பால் குடிக்கும் பூனையானு தேடும்போது, ஒரு பெரிய வாழ குலைய வாயில தள்ளீட்டு மீண்டும் பிளிறியது அந்த யானை. யானை மாமா யானை மாமா, எங்க அப்பா ரொம்ப களைப்பா தூங்கறாரு. நீங்க கொஞ்சம் தொலைவா போய் பிளிருங்கள்னு சிங்ககுட்டீங்க கேட்டுக்குச்சு. யானையும் மெதுவாய் அசைந்து தொலைவாய் சென்றது. இதுங்களும் நிம்மதியாச்சு.

அடுத்து ஒரு ரெண்டு நிமிஷம் தான் போயிருக்கும். ஊஊஊஒ வென ஒரு சத்தம். ஐயோ திரும்பவும் ஒரு சத்தமா? குட்டிங்க பதறுச்சு. சத்தத்தின் திசை நோக்கி ஓடுச்சுங்க. இச்சத்தத்தின் சொந்தக்காரன் சீறி ஓடும் பரியா இல்லை சிறுமூளை படைத்த நரியா? மீனைப் பிடித்த சந்தோஷத்தில், வானைக் கிழிக்கும் சத்தத்தில் ஊளையிட்டது நரி. "நரியண்ணே நரியண்ணே, எங்கப்பா தூங்கறாரு, கொஞ்சம் ஊளையிடாம இருங்கண்ணே" கனிவாய்ச் சொன்னதும், பணிவாய்ச் சென்றது நரி.

சிங்கக்குட்டிகள் திரும்பவும் குகைய நோக்கி நடந்துச்சு. நடந்துட்டே இருக்கும் போது மறுபடியும் சத்தம். யாரடா இந்த சத்தத்தின் சொந்தக்காரன். ஒலி வந்த திசையில் ஓட்டம் பிடித்தன. இந்த சத்தத்தின் சொந்தக்காரி, தோகை விரித்தாடும் மயிலா இல்லை பாடல் இசைக்கும் குயிலா? ஓடிச்சென்று பார்த்தன. ஆடிக்கொண்டிருந்தது மயில்தானென்றாலும், சத்தம் மயிலின் அகவல் அல்ல. அது மரத்தில் அமர்ந்திருக்கும் குயிலின் கூவல். குயிலக்கா குயிலக்கா, "எங்கப்பா தூங்கீட்டு இருக்காரு, உங்கள் குரல் இனிமைதான் என்றாலும், அதில் இருக்கும் இன்னலைச் சொன்னதும், மின்னலாய் பறந்தது குயில்.

குயில் பரந்த பத்து வினாடியில் கேட்டது உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என ஒரு பெருஞ்சத்தம். அதுவும் குகை இருக்கும் திசையில் இருந்து. புலியின் உருமலாக இருக்குமோ குட்டிகள் ஓடின. அங்கே புலி ஏதும் இல்லை. ஆனால் சத்தம் மட்டும் பெருசா இருந்துச்சு. சத்தம் வந்த திசையில் குட்டிகள் நடந்தன. குகை உள்ள இருந்தே வந்துச்சு. யாரோ நம்ம அப்பா பக்கத்துலயே இருந்து கத்தறாங்கனு நெனச்சு உள்ள போச்சுங்க. அந்த சத்தமோ சிங்கம் படுத்துட்டு இருந்த இடத்திலிருந்தே வந்துச்சு. அது வேறொன்றுமில்லை. அசந்து தூங்கும் சிங்கத்தின் கொறட்டை சத்தம் தான் அது.




Saturday 26 November 2016

சோலையம்மா

காலை முதல்
களை பறிச்சு
களைப்பாக
இருக்கையிலே
கடந்த வார
கணக்கு பாத்து
ஆயிரம் தான்
பாக்கியினு
ஒத்த தாளை
எதுத்து தந்து
கணக்கத்தான்
தீத்துட்டாரு.

வாங்கனத
நாலா மடிச்சு
சேலையிலே
முடிஞ்சு வெச்சு
நடந்து போனா
சோலையம்மா.

தலைக்கு மேல
பிரச்சனைங்க
ஆயிரம் தான்
இருக்கையிலே,
எத்த மொதல்ல
தீப்பதுன்னு
தீவிரமா
நெனைக்கயிலே

கடந்த மாசம்
கடேசி வாரம்
இவ சுமந்து
பெத்த
ஒத்த ரோசா,
சீக்கு வந்து
படுத்ததால,
டவுனு
ஆஸ்பித்திரி
போயி வர,
பக்கத்துக்கு
வீட்டு
பங்கஜம் கிட்ட,
ரெண்டு நூறு
வாங்கிருந்தா.

அவசரத்துக்கு
ஒதவினாளே
அத்த மொதல்ல
குடுத்துப்புடனும்.

பேருக்குத்தான்
பாசமுன்னு
ஊருக்காக
வாழமாட்டா.
நேத்து
குடுத்தத
திருப்பி கேட்டு
அடுத்த நாளே
நிக்கமாட்டா.

கூட பொறந்த
பொறப்பு கூட
எப்பயாச்சும்
மொகத்தகாட்டும்,
சொந்த பந்தம்
எல்லாம் கூட
செஞ்சிபுட்டு
சொல்லிக்காட்டும்.

செப்பு எதுவும்
கலந்திராத
சொக்கத்தங்க
மனசுக்காரி,
அவசரத்துக்கு
மட்டுமில்ல
ஆயுசுக்கும்
பாசக்காரி.

மளிகை கடை
பாக்கியும் தான்
மறக்காம
கொடுத்துபுடணும்.
ரேஷனுல
அரிசி பருப்பு
என்னைக்குனு
கேட்டு வரணும்.

பெத்து வெச்ச
ஒத்த புள்ள
ஆசையா
எதையும்
கேட்டதில்ல.

சனிகெழம
சந்தையில
வளையலாச்சும்
வாங்கி தரணும்.
கால் கிலோ
ஆட்டிறைச்சி
வாங்கி வந்து
ஆக்கி வெச்சி,
ஆச தீர
ஊட்டி விடணும்.

ஒட்டு போட்ட
ரவிக்கையும்
அங்க இங்க
விட்டு போச்சு.
மிச்ச மீதி
காசிருந்தா
ரவிக்கை ரெண்டு
எடுத்துப்புடனும்

மூணு முடிச்சு
போட்ட சொந்தம்
முடிஞ்சு
ஆறு வருஷமாச்சு.
ஒத்தயில
வாழ்க்க இப்ப
கஷ்டமில்ல
பழகிப்போச்சு.

நூறு நாலு
திட்டத்துல
அப்பப்ப
வேல வரும்.
மிச்ச நாலு
பக்கத்துல
தோட்ட வேல
கூலி தரும்.

புழுங்கிக்கிட்டே
நடந்தவ
கதைய
மேகமும் தான்
கேட்டுடுச்சோ?
படபடன்னு
வேகமாக
மாரியும் தான்
பேஞ்சிடுச்சே.

கணக்கு போட்டு
மெல்ல நடந்தவ,
தலையில தான்
மழை விழுவ
முந்தானைய
எடுத்து போத்தி,
ஓட்டமாக
வீடு வந்தா.

எத்தன நாள்
பாக்கியோ
இது நிக்காம
பெய்யுதேனு
யோசனையில்
அடுப்ப மூட்டி
ஒலயத்தான்
கொதிக்க வெச்சா.

பொழுது விடிஞ்சா
மொத வேல
கணக்கெல்லாம்
தீத்துப்புடனும்,
மனசுக்குள்ள
நெனச்சிக்கிட்டே
கண்ண மூடி
தூங்கிபுட்டா.

அடுத்த நாலு
காலையில
புள்ளைய தான்
எழுப்பி விட்டு,
வீடு வாசல்
மொழுவி விட்டு,
குளிச்சு அவளும்
நிக்கயிலே
ரெட்டை ஜட
பின்னிவிட்டா.

நேத்து வடிச்ச
சோத்துலதான்
தண்ணி ஊத்தி
வெச்சிருதா.
கல்லு உப்ப
அள்ளி போட்டு,
மொளகா ரெண்டு
கிள்ளி போட்டு,
தட்டுல தான்
இவளும் தர

பழைய சோத்த
ஆச ரோசா
அள்ளும் போது,
மொகத்த பாத்த
பெத்த மனசு
ஒடஞ்சி போச்சு
கண்ணும் கூட
நெனஞ்சி போச்சு.

பட்டு ரோசா
பாக்கும் முன்னே
முந்தானையிலே
தொடச்சிகிட்டு,
ரோசாவுக்கு
முத்தமிட்டு
பள்ளிக்கூடம்
அனுப்பிவிட்டு,

அண்ணாச்சி
கடைக்கு வந்து
அரிசி பருப்பு
வாங்கிகிட்டு,
பழைய பாக்கியும்
சேத்து தீக்க
கணக்கு எல்லாம்
பாத்து முடிச்சு,

சேலையில
முடிஞ்சு வெச்ச
காச எடுத்து
இவளும் நீட்ட,
ஆயிரம் தான்
செல்லாதுன்னு
அரசாங்கம்
சொல்லீடுச்சே

நேத்து ராத்திரி
டிவியில
அந்த சேதி
பாக்கலயா,
விடிஞ்சும் கூட
அக்கம் பக்கம்,
பேசறத
கேக்கலயா
வெவரமாக
அவரும் சொல்ல,
சோலையம்மா
ஒடிஞ்சி போய்ட்டா.

கவல பட
ஏதுமில்லை,
மாத்திப்புட
வழி இருக்கு,
வங்கி கணக்கு
இருக்குதான்னு,
அண்ணாச்சி
கேட்டதுக்கு,
இல்லையேன்னு
தலையாட்ட
அடுத்த வழிய
சொன்னாரு.

டாஸ்மாக்
கடைக்கு போனா,
ஆயிரத்துக்கு
பிடிப்பு போக,
ஏழோ எட்டோ
நூறு ரூவா,
கைக்கு வரும்
யோசிக்காத.

இத்த விட்ட
வழியுமில்ல,
வெச்சிகிட்டா
பயனுமில்ல.
சுருக்குனு
வெவரத்த
அண்ணாச்சி
சொன்னாரு.

அவளும்
எதையும்
யோசிக்காம,
அங்க போயி
மாத்திகிட்டா,
மூணு நூறு
புடிச்சுகிட்டு
ஏழு மட்டும்
கைக்கு வர,

மூணு நாளு
தோட்ட வேல,
முதுகு வலிக்க
செஞ்சதெல்லாம்
அநியாயமா
போயிடுச்சேன்னு,
மனசுக்குள்ள
கொதிச்சுப்போனா.

சட்டம் போட்ட
நல்லவரு,
நல்லா
இருக்கனுன்னு,
நாலு வார்த்த
வஞ்சிப்புட்டு,
வீடு வந்தா
சோலையம்மா.



முகமூடி மனிதர்கள்

பொய்யினை நாவில் வைத்து
சத்தியம் செய்யும் கரங்கள்

புன்னகை உதட்டில் பூசி
முதுகை கிழிக்கும் துரோகம்

நட்பென நைய்யப் பேசி
குழியில் தள்ளும் உறவு

காதலைக் கண்ணில் காட்டி
நெஞ்சைப் பிளக்கும் யுக்தி

ஜனனம் மரணம் மத்தியில்
வாழ்க்கை மிகவும் சிறிது

முகமூடி மனிதர் உலகில்
உண்மை காண்பது அரிது.


தடம் மாறும் தளிர்கள்

ஒன்றே போதும்
நன்றாய் வளர
அதற்காய் உழைப்போம்
கண்கள் அயர

ஆசைகள் அனைத்தும்
அவனுள் திணித்து
அளவிற்கு அதிகமாய்
அன்பையும் பொழிந்து

சிறிதாய் பிழைகள்
முளைக்கும் போதே
அழுவான் என்று
அழிக்காது விட்டு

பெரிதாய் ஆனால்
சரியாய் போவான்
தவறாய் கணக்கை
தனக்குள் போட்டு

பாசம் காட்டி
வளர்ப்பேன் என்று
பாசக் கயிறை
கழுத்தில் மாட்டி

குறும்புகள் செய்யினும்
கரும்புதான் என்று
கள்ளிச் செடிக்கு
உரங்கள் வைத்து

வாழும் நெறியை
வகுக்கத் தவறின்
தடம் மாறித்தான்
போகும்  தளிர்கள்.





Friday 25 November 2016

வேண்டும் குழந்தை மனசு

ஆற்று மணல்
அள்ளி விற்று
ஆறாம் தலைமுறைக்கு
சொத்து சேர்த்து

சேற்று வயல்
கூறு போட்டு
துண்டு துண்டாய்
விற்று தீர்த்து

பாலம் பள்ளி
கட்டுவதாயினும்
சாலை ஆலை
அமைப்பதெனினும்

காசு பார்க்கும்
கலாச்சாரத்தால்
மாசு பட்ட
மக்கள் பிரதிநிதி

வழக்கு மன்ற
நீதி தேவதையும்
அநீதி பக்கமே
அநேக நேரமும்

ஆசையும் ஆஸ்தியும்
ஆளும் உலகில்
அன்பும் அறமும்
பெயரளவில் மட்டுமே

குரூரம் சுயநலம்
ஆட்கொண்ட மனதுடன்
முறைகெட்டு வாழும்
மனித உடல்கள்

கள்ளம் அறியா
உள்ளம் கொண்டு
வேண்டும் அனைவருக்கும்
குழந்தை மனசு.




அன்பு வாழ்க்கை

பணம் இல்லயெனின்னும்
குணத்திற்கு குறைவில்லை

பீசா பர்கரெல்லாம்
கூழுக்கு இணையில்லை

பட்டு மெத்தையில்லை
தூக்கத்திற்கு பஞ்சமில்லை

குளிரூட்டி இல்லாவிடிலும்
குறைவில்லா குளிர்காற்று

ஆடம்பரம் ஏதுமில்லா
அழகியலோடு அன்பு வாழ்க்கை

உழைப்போர் உலகம்...

 - விவசாயி
விதைத்ததை விளைவித்து 
வரும்விலைக்கு அதைவிற்று 
விழிகள் இங்கிரண்டு 
விடியல் எதிர்கொண்டு  

- ஆசிரியர் -
கற்றவை கற்பித்து 
கற்பவனைக் கரைசேர்த்து 
காலமெல்லாம் கல்விப்பணியில் 

- மருத்துவர் -
கண்அயரும் காலத்திலும் 
சிகிச்சைக்கு அவசரமென 
சிறுசெய்தி வந்துவிடின் 
அக்கணமே களமிறங்கி 
உயிர்காக்கும் உன்னதத்தால் 
ஊர்போற்றும் உத்தமர்கள்   

- மீனவன்-
கட்டுமரம் எடுத்து
கடலுக்கு தினம் சென்று
பிடித்தோ பிடிபட்டோ 
பிரச்சனைப் புயலில் வாழ்க்கை  

- மேஸ்திரி -
கல் அடுக்கி 
கட்டிடம் அமைத்து 
கசியும் வீட்டில் 
கடைசி வரை  

- நெசவாளி -
பல்லாயிரம் விலைபோகும்
பட்டுத்துணி நெய்பவரும்
தன்மானம் அதைக்காக்க 
கோவணத்துடன் கைத்தறியில்  

- தொழில் நிகழ்முறை அயலாக்க ஊழியர்கள்
-
கடல்கடந்த கண்டத்திற்கு 
கண்ணுறங்கும் நேரங்களில்,
கணிப்பொறிமுன் கண்சிமிட்டா காலங்களில்
காலமெல்லாம் பெருநிறுவனப் பணியினிலே...  

Tuesday 22 November 2016

ஜனநாயகம்

வங்கி
வாசலில்
ஒட்டுமொத்த
இந்தியாவும்

ஜனநாயக
ஆணையால்
ஜனமெல்லாம்
கை ஏந்தி

பெரும்புள்ளி
அனைவருமே
முன்பே அறிந்த
தீர்மானம்

ஒப்புக்காய்
ஒப்பம் இட்டு
ஓர் இரவில்
அச்செய்தி

நாட்டு நலன்
முக்கியமாம்
கருப்பெல்லாம்
அழியணுமாம்

திட்டம் மட்டும்
பளித்துவிட்டால்
தீரா நோய்
தீர்ந்திடுமாம்.

ஐநூறு
ஆயிரத்தை
அப்படியே
கொடுத்துவிட்டு,

அவசரத்திற்கு
காசெடுக்க
பொறுமையோடு
நிற்கணுமாம்.

மருத்துவ
மனையினிலும்
எண்ணெய்
நிலையத்திலும்

பேருந்து
பயணத்திலும்
அரசு மது
கடைகளிலும்

அனைத்தும்
செல்லுமென
அறிவிப்பும்
வந்ததுவே

சீர்திருத்தம்
இதுவென்றும்
புதிய இந்தியா
வருமென்றும்

ஆன்லைன்
வாதிகள்
நாடெங்கும்
ஆதரிக்க

சாதுர்ய
சட்டத்தை
சாணக்ய
திட்டத்தை

அவசரமாய்
பிறப்பித்து
அயல்நாடு தான்
எதற்கு?

சாமானியன்
பாதிப்பை
சகவாசி
சங்கடத்தை

கடுகளவும்
சிந்திக்கா
குறை பிரசவம்
இத்திட்டம்

கருப்பை
ஒழிக்க
ஆயிரமே
வேண்டாமென்று

கருத்தாய்
பேசுவோரே
இரண்டாயிரம்
இங்கு எதற்கு?

சட்டத்தை
மதிப்பவர் தான்
எத்தனை பேர்
இங்குண்டு

கருப்பை
வெள்ளையாக்கும்
தொழிலும்
உதித்தது

கமிஷனுக்கு
கைமாற்றும்
காரியமும்
நடக்குதே

"ராணுவம்
தவிக்கிறது
நீயும் கிடந்து
தவியென்றும்

சினிமா சீட்டு
வேண்டி
கூட்டத்தில்
நிற்பவனே

நாட்டின் நலன்
கருதி
நிற்க கால்
வலிக்கிறதா" என

பிதற்றல்
பேசுபவர்
எக்கச்சக்கம்
இங்குண்டு.

ஐயா நாட்டு
நல விரும்பிகளே
மக்கள் நலம்
பாருங்கள்

அடுத்த வேலை
பசியாற
அரிசி
வாங்குபவனும்

அடுத்த போகம்
விளைவிக்க
விதை நெல்
வேண்டுபவனும்

அன்றைய
தினம் கழிக்க
கூலிக்கு
செல்பவனும்

வருமானம்
கணக்கிட்டு
வாடகைக்கு
வாழ்பவனும்

சிறு தொழில்
அது செய்து
சிக்கனமாய்
இருப்பவனும்

பாதிக்கப்
பட்டவரில்
பெரும்பகுதி
அவ்வகையே

கோடியில்
மிதப்பவன்
வரிசைக்கு
வந்ததில்லை

வரிசையில்
நிற்பவன்
கோடியைப்
பார்த்ததில்லை



மதம்


உண்மை தானே?


Wednesday 16 November 2016

காவ்யா

ராஜேஷும், பிரீத்தியும் அவங்களோட ரெண்டு வயசு மகள பாத்துக்கறதுக்காக புதுசா ஒருத்தர வேலைக்கு அன்னைக்கு தான் வெக்கறாங்க. அந்த அம்மா வரதுக்காக காத்துட்டு இருக்காங்க. காலிங் பெல் பார்வதி அம்மா வோட வரவ அறிவிச்சுது. என்னலாம் செய்யணும்னு அவசரமா சொல்லி ரெண்டு பேரும் வேலைக்கு புறப்பட்டாங்க. காலைல இருந்து ஓ எம் ஆர் ல ஆரமிக்கற புது ப்ராஜெக்ட்ல பிஸியா இருந்தான் ராஜேஷ். பிரீத்தியும் டாஸ்க், டீம் மீட்டிங்னு நேரம் போறதே தெரியாம இருந்தா.

ஒரு ரெண்டு மணி இருக்கும். அப்ப தான் லஞ்ச்கு கேபிடேரியா வந்தா. வீட்டு லேண்ட் லைன்கு  கால் செஞ்சு எல்லாம் எப்படி போகுதுனு கேட்டுகிட்டா. சாப்பிட்டு முடிக்கும் போது அங்க இருந்த டி.வி.ல சென்னைல கடந்த மூனு மாசமா அடிக்கடி காணாம போற குழந்தைகள் கேஸ்ல  போலீசால் சந்தேகப்படற ஆளுனு பார்வதி அம்மா போட்டோ வந்துச்சு. மறுபடியும் பதட்தட்டோட அவசரமா வீட்டுக்கு கால் செஞ்சா, யாருமே போன் எடுக்கல. மறுமுனைல போன் அடிச்சிட்டே இருந்துச்சு. பிரீத்தியோட இதயமும்...

ஒடனே ராஜேஷ்கு கால் செஞ்சா.. அவன் முக்கியமான மீட்டிங்ல இருந்ததுல போன் சைலன்ட்ல இருந்துச்சு.. எடுக்கல. திரும்ப திரும்ப அவனுக்கு கால் செஞ்சிட்டே இருந்தா.. அவசரமா ஒரு ஆட்டோ புடிச்சா.. வீட்டுக்கு போற வரைக்கும் விடாம மாத்தி மாத்தி ராஜேஷுக்கும், வீட்டுக்கும் போன் செஞ்சிட்டே இருந்தா.. அவசர அவசரமா எறங்கி போனா, வீடு தொறந்து கெடந்துச்சு. எல்லா ரூம்லயும் பாத்தா, அந்தம்மாவையும் காணோம். கொழுந்தையும் காணோம். இவளுக்கு மயக்கமே வந்துருச்சு.

ஓன்னு அழறா.. என்ன செய்றதுனு தெரில. மீட்டிங் முடிஞ்சா ராஜேஷ் அத்தனை மிஸ்ட் கால் இருக்கறத பாத்துட்டு கூப்டான். இவளுக்கு வார்த்தையே வரல. அழுத்திட்டே இருக்கா. அவனுக்கும் ஒன்னும் புரியல. என்ன ஆச்சு. என்னாச்சுனு சொன்னாதான தெரியும்னு கேட்க, கடைசில காவ்யா தொலஞ்சி போன விஷயத்த இவ சொன்னா. ராஜேஷ் பதரீட்டான். "நம்ம காவ்யாக்கு ஒன்னும் ஆகீருக்காது. நீ பதட்டப்படாத. தைரியமா இரு. நான் சீக்கிரம் வந்துர்ரன்" னு சொல்லி வெச்சான். வர்ற வழில ஏதோ யோசிச்சவன், கார்ர வேகமா எடுத்துட்டு அவளையும் கூப்டுட்டு நேரா திரு.வி.க. நகர்ல ஒரு வீட்டுக்கு போனான்.

வீடு பூட்டிருந்துச்சு. பக்கத்துல விசாரிச்சா, அவங்க வேற ஊருக்கு இப்பதான் போறாங்க. எங்க என்னானு வெவரம் ஏதும் சொல்லலனு ஒரு பதில் வந்துச்சு. ராஜேஷுக்கு ஒரு விஷயம் ஊர்ஜிதமாயிடுச்சு, திரும்பவும் எதையோ யோசிச்சவன் பக்கத்துல இருக்கற சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்க்கு வால் டேக்ஸ் ரோடு வழியா வந்தான். சென்ட்ரல் வாசல்ல நிறுத்தி, "நீ போய் பார்க் பண்ணீட்டு வரியா, நான் அதுக்குள்ள உள்ள போய் பாக்கறேன்" இவன் கேட்க. நானும் வரேன். என்ன விட்டுட்டு போகாதான்னு இவ சொல்ல அதுக்குள்ள பின்னாடி இருந்து ஹார்ன் சத்தம், சைடுல டிராபிக் போலீஸ் வேற, வண்டிய இங்க நிறுத்தாதீங்க, எடுங்கனு கத்த, இவன் வேகமா பார்க்கிங் லாட்க்கு போனான்.

வண்டிய விட்டுட்டு ஓட்டமும் நடையுமா ஸ்டேஷன்க்கு வந்தவன் டிஸ்பிலேல ட்ரெயின் பேரு லாம் பாத்தான். நேரம்  சிக்ஸ்ட்டின் பார்ட்டி பைவ், ஹைதெராபாத் எக்ஸ்பிரஸ், பிளாட்போர்ம் நம்பர் ரெண்டு, பாத்த ஒடனே இன்னும் வேகமா ஓடனான். ட்ரெயின் புறப்பட இன்னும் இருவது நிமிஷம் இருக்கு. நேரா ஜெனரல் கம்பார்ட்மெண்ட்கு போனான். காவ்யா அங்க இருக்கணும்னு இவன் வேண்டாத தெய்வம் இல்ல. ப்ரீத்திய இழுத்துட்டு வேகமா ஓடனான். ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல ஏறீட்டான். இவனோட கண்கள் முகங்களுக்கு நடுல ஒரு மழலைய தேடுது. இங்க இருக்க மாட்டாளா? அங்க இருக்க மாட்டாளாணு மனசு துடிக்குது. எல்லார் கிட்டயும், ரெண்டு வயசு பெண் கொழந்தையோட ஒரு அம்மா வந்தாங்களா? பாத்தீங்களா? பாத்தீங்களா? கேட்டு கேட்டு மொத்த சத்தையும் எழந்துட்டான்.

நேரம் ஆக ஆக இவனுக்கும் கண்ணு கலங்குது. ஒரு பக்கம் ப்ரீத்தி வேற அழுது ஆர்ப்பாட்டம் செய்றா. அவள சமாதான  படுத்த கூட இவனுக்கு தோணல. "காவ்யா, எங்க இருக்க? என்ன பண்ற?  உன்ன பாத்துர மாட்டேனா? என் கண்ணுல நீ படமாட்டயா?" இது மட்டுமே அவன் மனசுல ஓடுது. மொத்த ட்ரெயின்னையும் அலசி, அவ கெடைக்காம, ஒடஞ்சி போய் பிளாட்போர்ம்ல ஒக்காந்துட்டான்.

அடுத்து என்னன்னே தெரியாம மனசு இருண்டுபோய் இருந்த நேரத்துல, ட்ரெயின்ன புடிக்க, கூட்டத்துக்கு நடுல, ஒரு அம்மா வர்ரது இவன் கண்ணுல பட்டுச்சு. கைல கொழந்த இருக்கு. இவனோட காவியா இருக்கா. அந்தம்மா ஜெனரல் கம்பார்ட்மெண்ட் பக்கத்துல வர, ராஜேஷ் எதிர்ல வந்து நின்னான். அந்தம்மா அப்டியே தெகச்சி, பயந்து நின்னா. ப்ரீத்தி அந்தம்மா கைல இருந்து காவ்யாவ புடுங்கி மாறி மாறி முத்தம் குடுத்தா. அந்தம்மா அப்டியே ஒடிஞ்சி போய் கீழ ஒக்காந்து அழ ஆரமிச்சிட்டா. என்ன மன்னிச்சிருங்க. நான் வேணும்னு எதுமே செய்யல. பெத்த பாசம் கண்ண மறச்சிருச்சி, நான் வேணும்னே செய்லனு தேம்பி தேம்பி அழறா.

காசுக்காக தான் வாடகைத்தாயா இருக்க ஒத்துக்கிட்டேன். ஆனா என் கொழந்தைய பாக்காம இருக்க முடியல. அதனால அடிக்கடி நீங்க ஆபீஸ் போன ஒடனே உங்க வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியா இவ வெளயாடறத பாத்துட்டு போய்டுவேன். தூரத்துல இருந்தே பாத்து சந்தோஷபட்டுப்பன். இன்னைக்கும் இவள பாக்கறதுக்காக உங்க வீட்டுக்கு வந்துருந்தன். அப்ப வழக்கமா வேலைக்கு இருந்தவங்க காணோம். புதுசா ஒரு பொம்பள இருந்துச்சு. 

இவ ஒரு பக்கம் விளையாடிட்டு இருக்க. அந்தம்மா எதையோ யோசிச்ச மாதிரி இருந்துச்சு. எனக்கு என்னனு வெளங்கள. சரி யாரும் பாக்கறதுக்கு முன்னாடி கெளம்பலாம்னு நினைக்கும் போது, அது போன்ல "இந்த கொழந்தைய இன்னைக்கே தூக்கீறலாம். நான் எல்லாத்தையும் பாத்துட்டேன். பிரச்னை வராது. அவங்கலாம் வரதுக்கு எப்படியும் ஏழு மணி ஆய்டும். நாம ஒரு மூணு மணிக்குலாம் போய்டலாம். நீ வண்டி எடுத்துட்டு வந்துருனு" சொல்லீட்டு இருந்தத, நான் கேட்டுட்டேன்.

மனசு படபடக்க ஆரமிச்சுது. எப்படியாவது காவ்யாவ காப்பாத்தணும்னு நெனச்சேன். அப்ப ஒரு போன் வந்துச்சு அவ அதுல பேசீட்டு இருந்தா. கடவுள் புண்ணியத்துல கதவு தொறந்தே இருந்துச்சு. பின்னாடி இருக்கற கொழந்தைய அவ கவனிக்கல. நான் இவள தூக்கீட்டு வேகமா வீட்டுக்கு போய்ட்டேன். அந்த பாவி கிட்ட இருந்து காவ்யாவ காப்பாத்தணும்னு தான் மொதல்ல நெனச்சன். அப்பறம் வீட்டுக்கு வந்த ஒடனே தான், இவ நிரந்தரமா என் கூட இருக்கமாட்டாளான்னு ஒரு பேராசை வந்துருச்சு. அதான் எங்க ஊருக்கே போய் ஏதாச்சும் செஞ்சி பொளச்சிக்கலாம்னு தூக்கீட்டு வந்துட்டேன். என்ன மன்னிச்சிருங்கனு, குமுதா கதறி அழுதா.

எல்லாத்தயும் கேட்டு முடிச்ச ராஜேஷ், எங்கயோ போய் ஏன் கஷ்டப்படணும், பேசாம நீயே வீட்ல இருந்து காவ்யாவ பாத்துக்கோனு சொல்லீட்டான். அது வரைக்கும் அமைதியாவே இருந்த ப்ரீத்தி, "ராஜேஷ், நானே வேலைய ரிசைன் பண்ணீட்டு இனி காவ்யாவோட அம்மாவா மட்டும் வீட்லயே இருந்து இவள பாத்துக்கறேன்." தீர்க்கமா சொன்னவ,  "குமுதாவும் கூட இருக்கட்டும்" னு சொல்லி, காவ்யாகு ஒரு முத்தம் குடுத்தா. அந்த முத்தத்தோட ஆழமே இவளோட தாய்மையை சொல்லுச்சு.








Tuesday 15 November 2016

பார்வதியம்மா

ராஜேஷும், பிரீத்தியும் அவங்களோட ரெண்டு வயசு மகள பாத்துக்கறதுக்காக புதுசா ஒருத்தர வேலைக்கு அன்னைக்கு தான் வெக்கறாங்க. அந்த அம்மா வரதுக்காக காத்துட்டு இருக்காங்க. காலிங் பெல் பார்வதி அம்மா வோட வரவ அறிவிச்சுது. என்னலாம் செய்யணும்னு அவசரமா சொல்லி ரெண்டு பேரும் வேலைக்கு புறப்பட்டாங்க. காலைல இருந்து ஓ எம் ஆர் ல ஆரமிக்கற புது ப்ராஜெக்ட்ல பிஸியா இருந்தான் ராஜேஷ். பிரீத்தியும் டாஸ்க், டீம் மீட்டிங்னு நேரம் போறதே தெரியாம இருந்தா. ஒரு ரெண்டு மணி இருக்கும். அப்ப தான் லஞ்ச்கு கேபிடேரியா வந்தா. வீட்டு லேண்ட் லைன்கு  கால் செஞ்சு எல்லாம் எப்படி போகுதுனு கேட்டுகிட்டா. சாப்பிட்டு முடிக்கும் போது அங்க இருந்த டி.வி.ல சென்னைல கடந்த மூனு மாசமா அடிக்கடி காணாம போற குழந்தைகள் கேஸ்ல  போலீசால் சந்தேகப்படற ஆளுனு பார்வதி அம்மா போட்டோ வந்துச்சு. மறுபடியும் பதட்தட்டோட அவசரமா வீட்டுக்கு கால் செஞ்சா, யாருமே போன் எடுக்கல. மறுமுனைல போன் அடிச்சிட்டே இருந்துச்சு. பிரீத்தியோட இதயமும்...



இன்டெர்வியூ

கரெஸ்பாண்டண்ட் சார்ர பாக்கணும் னு வீரப்பன் மீசை வெச்சிருந்த அந்த செக்யூரிட்டி கிட்ட சொன்னேன்.. நீங்க? அப்டினு கேட்டாரு. நான் அடுத்த தலைமுறை பத்திரிக்கை நிருபர் மதன். சார்ர இன்டெர்வியூ எடுக்க வந்துருக்கன். ஏற்கனவே அப்பாயின்மென்ட் வாங்கீருக்கேன் னு சொன்னேன். இண்டர்காம் ல ஏதோ பேசனவரு கரெஸ்பாண்டெண்ட் ரூம் எந்த பக்கம் இருக்கு னு கை காமிச்சாரு.

வைட்டிங் ஹால் ல இருந்தேன். அப்ப ஒரு கால் வந்துச்சு. "பிரீ தான் ராஜன். இங்க ஒரு இன்டெர்வியூ கு வந்தேன்... வைட்டிங் ரூம் ல இருக்கேன்…. காலேஜ் ங்க…. நம்ம எக்ஸ் மினிஸ்டர் பழனிவேல்ராஜனோட  கே. பி. ஆர். காலேஜ்….  முடிச்சிட்டு கூப்படறன்" சொல்லீட்டு கால் ல கட் பன்னேன். கொஞ்ச நேரம் கழிச்சி உள்ள கூப்பிட்டாங்க.  

"நான் தான் கண்டன்ட் அனுப்பீடரன். அத அப்டியே போட்டா போதும் னு உங்க எடிட்டர் கிட்ட பேசீடனே. மறுபடியும் எதுக்கு வந்துருக்கீங்க?" எக்ஸ் கர்ஜித்தார். "இல்லைங்க சார். கொஞ்சம் போட்டோஸ் எடுக்க வேண்டியிருந்தது. அதில்லாம இது என்னோட பர்ஸ்ட் அசைன்மென்ட். நேர்ல பாத்துட்டு முடிஞ்சா ரெண்டு லைன் நல்ல எழுதலாம் னு தான் சார்" நான் சொன்னேன்.

 பக்கத்துல நின்னுட்டு இருந்த ஆல் கிட்ட "இவரு சொன்னது காதுல விழுந்ததில்ல? போய் கேம்பஸ்அ சுத்தி காட்டு" அதிகாரம் பறந்தது. அவரும் கூடவே வந்தாரு. அகாடெமிக் பிளாக், லபோர்டோரிஸ், லைப்ரரி, ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ், கான்டீன்னு ஒன்னு விடாம காமிச்சாரு. கூடவே ஹைகிளாஸ், உலகத்தரம், அது இது னு வாங்கற சம்பளத்துக்கு கூடவே விசுவாசமான பேசனாரு. கடைசில ஹாஸ்டல்ல பாக்க போனோம். பாத்து முடிச்சிட்டு சில போட்டோஸ் எடுத்துட்டு வந்துட்டே இருந்தோம். அப்ப ஏதோ ஒரு ரூம் ல இருந்து பயங்கர சத்தம். ஹாஸ்டல் வார்டன் சத்தம் கேட்டு கிழ இருந்து ஏறி வந்தாரு. என் கூட இருந்தவரும் அந்த ரூம் பக்கம் போனாரு.. நானும் என்ன தான் நடக்குது னு சராசரி இந்தியனா வேடிக்க பாக்க போனேன்.

ஒரு பத்து பன்னண்டு பசங்க இருக்கும்... ஒரே சண்ட... அடிச்சு உருளாத குறை... வார்டன் வந்ததையும் கவனிக்காம சண்ட போட்டுட்டு இருந்தாங்க... "வாட் இஸ் ஹெப்பெனிங் இயர்?" வார்டன் மைக் முழுங்கான மாதிரி கத்தனாரு. மொத்த பசங்களும் கப் சுப். "என்ன நடக்குது இங்க?"  அவரு மறுபடியும் கத்த. மயான அமைதி. ஒரே ஒரு பையன் கொஞ்சம் மெல்லமா சொன்னான்.. சார்.. சத்யா ஓட அங்கிள் வீட்ல இருந்து பிஷ் கர்ரி எடுத்துட்டு வந்தாரு...  அவன் மட்டும் சாப்டுட்டு இருந்தான்.. அதான்.. அவன் சொல்லி முடிக்கறதுக்குள்ள வார்டன் மறுபடியும் கத்த.. அந்த வேர்ல்ட் கிளாஸ் கான்டீன் ன ஒரு கிளிக் எடுத்துட்டு வெளில வந்துடடேன்...


கவி

"ஏய் கவி.. சொல்ரத கேலு.. நேத்து மீட்டிங் முடியவே லேட் ஆய்டுச்சு டி" இவன் சொல்லீட்டிருக்கும்போதே "சரிடா.. எனக்கிப்ப தூக்கம் வருது, நாளைக்கு பேசறேன்" ஃபோன வெச்சுட்டா கவிதா. ஏழரையாவே போற காதல நெனச்சி எஃக் ரைஸ் செஞ்சான் செல்வா. என்னதான் ஆக்சிஸ் பேங்க்ல உத்தியோகம்னாலும் இவன் இருக்கறதோ அண்ணாசாலை கார்ப்பரேட் ஆபிஸ்ல. காலைல பத்து மணிக்கு தொறந்து அஞ்சு மணிக்கு மூடற எடம் இல்ல. அவன் ஆபிஸ்ல இருந்து கெலம்பவே ராத்திரி பத்து மணி ஆய்டும். சில நேரங்கள்ல பதினொன்னு பன்னெண்டு வரைக்கும் வேல இருக்கும். சத்தியத்துக்கு கூட்டீட்டு போறன்னு சத்தியம் பன்னீட்டு காப்பாத்த முடியாம கல்லடி வாங்குவான் நம்மாளு.

வாழ்கனாலே சந்தோசமும் சங்கடமும் சேந்ததுதான.. இவனுக்கு ரெண்டுமே கவிதா தான். வேல, கவிதாகிட்ட திட்டு வாங்கறத தவிர இவன் அதிக நேரம் செலவு பன்றது சமயகட்டுல. விதவிதமா சமைக்கறது இவனுக்கு அலாதி இன்பம். போன பொறப்புல புரோட்டா மாஸ்டரா இருந்துருப்பான்னு பசங்களாம் கிண்டல்பன்னுவாங்க. காதுலயே போட்டுக்காம கரண்டிய எடுத்துப்பான். பல சமயம் கவிகூட இவன் வாய்ல ஆரம்பிக்கர சண்டய இவன் கை தான் முடிச்சுவெக்கும். கைப்பக்குவம் அப்படி. ஆனா கவிதா சுத்தம். கர்நாடகால இருந்து காவேரி வந்தாலும் வந்துரும் ஆனா கவிதாக்கு சமயல் வரவே வராது. அவ செய்ற அதிகபட்ச சமயலே நூடுல்ஸ்தான். அதுவும் பாதிநாள் ஒழுங்கா வராது. "அவளுக்கென்னடி அவ பாய்ஃபிரண்டு நல்லா சமைப்பான்.. இவ காலம்பூரா அடுப்ப பத்தவெக்காமலே ஆயுச முடிச்சிருவா" கவி ரூம்மேட் அடிக்கடி சொல்லுவா.

வியாழக்கெழம ரிலீஸ் ஆக இருந்த இருமுகன் படத்துக்கு புக்கிங் ஓபன் ஆன ஒடனே ரெண்டு டிக்கெட் போட்டுட்டான் செல்வா. ஈவனிங் ஷோ தான். மேனேஜர் பர்மிஷன் கெடச்சிரனும்னு வடபழனி முருகன் கோவில்ல ஒரு தேங்காயும் ஒடச்சிருந்தான். மேனேஜர் அந்தபக்கம் ஒருமொகத்த காட்ட, கவிதா இந்தபக்கம் இன்னொரு மொகத்தகாட்ட இவனுக்கு இருண்டமொகமாயிடுச்சு இருமுகன் ப்ளான். இந்த சங்கசத்துல ஒரு சுவாரஸ்யம் என்னனா... கவிதா சீயானோட தீவிர விசிறி. செல்வா க்கு வீக்கெண்டு டெட் எண்டு ஆய்டுச்சு.

வர புதன்கெழம அவளுக்கு பொறந்தநாள் வேற.. அதுக்காச்சம் சொதப்பாம ஏதாச்சம் செய்யணும்னு செல்வா நெனச்சான். ஒரு கேக்க அவனே பேக் பண்ணீடலாம்னு முடிவெடுத்தான். பாங்க்ல சிஸ்டம் ஷட்டவுன் ஆன பொறவு வீட்ல ஆன் பண்ணான். யூடியூப் ல கேக் செய்றதெப்படினு பாத்தான். தேவயான பொருட்கள் மட்டுமில்லாம அளவுக்கதிகமான அன்பயும் கொட்டி ஒரு அழகான ஸ்டிராபெர்ரி கேக் செஞ்சி அதுல "ஹேப்பி பர்த்டே கவி" எழுதிமுடிச்சான். உசுரே போனாலும் அன்னைக்கு வேலைக்கு போககூடாதுன்னு உறுதியா இருந்தான். இவளுக்கும் அன்னைக்கு லீவு போட்டுத்டதாவும், அவகூடவே இருக்கறதாவும் ப்ராமிஸ் செஞ்சிருந்தான். கெரகம் மும்பை ஆபீஸ்ல இருந்து டீம் வர்ரதால லீவு முடியவே முடியாதுன்னு மேனேஜர் சாதிக்க கைல கால்ல விழுந்து மூனு மணிக்கே கெளம்ப பர்மிஷன் தான் கடைசியா கெடச்சிது செல்வா க்கு.

சும்மாவே தையதக்கானு குதிக்கரவ கால்ல சலங்கயவேற கட்டிவிட்டா சும்மாவா இருப்பா.. இவன் வேலய முடிச்சுட்டு எத்தனமொற கூப்புட்டும் அவ ஃபோன எடுக்கவே இல்ல. கேக்க தூக்கி வண்டில வெச்சிகிட்டு அவளோட பி.ஜி. க்கே போனான். தகவலே இல்ல. அரமணி நேரம் வெய்ட் பன்னீட்டு வண்டிய எடுத்து போறவழில இவன்படற பாட்டுக்கு வானமே அழுதுச்சு.. வண்டிய ஓரங்கட்டி ஒரு பஸ் ஸ்டாப்ல ஒதுங்கனான். மறுபடியும் கவிதாக்கு ட்ரை பன்னான். ஸ்விச் ஆஃப்னு வந்துச்சு.

மழய வேடிக்க பாத்தபடியே நின்னான். அப்ப நாளஞ்சு சின்ன பசங்க, ஒரு அஞ்சாவது  ஆறாவது இருக்கும் மழதண்ணிய மாத்தி மாத்தி அடிச்சு வெளயாடீட்டு இருந்தாங்க. அதுல ஒருத்தன் "இவன் பொறந்தநாளைக்கு திங்க வாங்கித்தரன்னு ஏமாத்தீட்டான் டா" சொன்னான். "இல்ல டா எங்கப்பா நூருவாதாண்டா குடுத்தாரு. அந்தன்னன் ஒரு துண்டு கேக்கே 65 ரூவா சொல்லுச்சு டா.  இவன் ஐஸ் கேக்குதான் வேணும்னு சண்டபுடிக்கறான்டா" வருத்தத்தோட சொன்னான். இதபாத்துட்டே இருந்த செல்வா க்கு ஏதோ தோன "பர்த்டே பாய கூப்புட்டு.. உன் பேரு என்னனு கேட்டான்" முன்னாடி ஒரு பல்லு விழுந்த அந்த பர்த்டே பாய் "கவியரசன் சார்" நு சொன்னான்.


Thursday 10 November 2016

சில்லறை தட்டுப்பாடு

ஆசையாய் 
சேர்த்தவை
எல்லாம்
அளவுக்கு 
மிஞ்சிய 
அமுதமாய்.
அண்ணலும்
நினைத்திரா
சத்திய
சோதனையில்
அரசன் முதல்
அசரமரத்தடி
ஆண்டி வரை.
ஆனைக்கும்
அடிசறுக்குமாமே
அப்பட்டமாய்
நடந்ததின்று.
ஆயிரங்கள்
தலை குனிந்து
நிற்க
நூறெல்லாம்
இறுமாப்புடன்
அரியணையில்.




"வொய்ப் காலிங்"

"இதுக்கு மேல ஒரு வார்த்த உன் வாயில இருந்து வந்துச்சு.. மனுஷனா இருக்க மாட்டேன்" கோவத்தின் உச்சத்தில் இருந்த நான் என் மொத்த பலத்தையும் கதவுமேல படார்னு காட்டி சடார்னு கெளம்பீட்டேன். ஒரு இருவது நிமிஷம் கழிச்சு செல்போன் ரிங்க்டோன் கேட்டுச்சு. அத பாத்தா "வொய்ப் காலிங்"னு இருந்துச்சு. எடுக்கறதா வேணாமா யோசிச்சு ஒரு வழியா போன் அட்டென்ட் பண்ணி அமைதியா இருந்தேன். "நான் செஞ்சதெல்லாம் தப்புதாங்க. புத்திகெட்டு பேசீட்டேன், என்ன மன்னிச்சிருங்க. என் கூட பேசுங்க" மறுமுனைல அழுகையோட ஒரு குரல். என்ன சொல்றதுன்னே எனக்கு தெரில. என் சிந்தனை வேற எங்கயோ போய்டுச்சு. யோசிச்சிட்டே இருக்க "என்னங்க.. இருக்கீங்களா?"னு அந்தப்பக்கம் இருந்து கேட்க, கொஞ்சம் சுதாரிச்சிகிட்டு, "உங்க கணவர் இந்த மொபைல்ல இந்த மெட்ரோ ட்ரெயின்ல மிஸ் பண்ணீட்டாருன்னு நெனைக்கறன் மேடம். நான் அண்ணா நகர் ஆக்ஸிஸ் பேங்க்ல தான் ஒர்க் பண்றன். ராஜதுரை நேம். அங்க வந்து கலெக்ட் பண்ணிக்கோங்க"னு சொல்லி கட் பண்ணா, என்னோட மொபைல் ரிங் ஆகறது கேட்டுச்சு. அவளா தான் இருக்கணும்னு ஆர்வமா எடுத்து, டிஸ்பிலேல பாத்தா "மேனேஜர் கால்லிங்"



சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...