Saturday 26 November 2016

சோலையம்மா

காலை முதல்
களை பறிச்சு
களைப்பாக
இருக்கையிலே
கடந்த வார
கணக்கு பாத்து
ஆயிரம் தான்
பாக்கியினு
ஒத்த தாளை
எதுத்து தந்து
கணக்கத்தான்
தீத்துட்டாரு.

வாங்கனத
நாலா மடிச்சு
சேலையிலே
முடிஞ்சு வெச்சு
நடந்து போனா
சோலையம்மா.

தலைக்கு மேல
பிரச்சனைங்க
ஆயிரம் தான்
இருக்கையிலே,
எத்த மொதல்ல
தீப்பதுன்னு
தீவிரமா
நெனைக்கயிலே

கடந்த மாசம்
கடேசி வாரம்
இவ சுமந்து
பெத்த
ஒத்த ரோசா,
சீக்கு வந்து
படுத்ததால,
டவுனு
ஆஸ்பித்திரி
போயி வர,
பக்கத்துக்கு
வீட்டு
பங்கஜம் கிட்ட,
ரெண்டு நூறு
வாங்கிருந்தா.

அவசரத்துக்கு
ஒதவினாளே
அத்த மொதல்ல
குடுத்துப்புடனும்.

பேருக்குத்தான்
பாசமுன்னு
ஊருக்காக
வாழமாட்டா.
நேத்து
குடுத்தத
திருப்பி கேட்டு
அடுத்த நாளே
நிக்கமாட்டா.

கூட பொறந்த
பொறப்பு கூட
எப்பயாச்சும்
மொகத்தகாட்டும்,
சொந்த பந்தம்
எல்லாம் கூட
செஞ்சிபுட்டு
சொல்லிக்காட்டும்.

செப்பு எதுவும்
கலந்திராத
சொக்கத்தங்க
மனசுக்காரி,
அவசரத்துக்கு
மட்டுமில்ல
ஆயுசுக்கும்
பாசக்காரி.

மளிகை கடை
பாக்கியும் தான்
மறக்காம
கொடுத்துபுடணும்.
ரேஷனுல
அரிசி பருப்பு
என்னைக்குனு
கேட்டு வரணும்.

பெத்து வெச்ச
ஒத்த புள்ள
ஆசையா
எதையும்
கேட்டதில்ல.

சனிகெழம
சந்தையில
வளையலாச்சும்
வாங்கி தரணும்.
கால் கிலோ
ஆட்டிறைச்சி
வாங்கி வந்து
ஆக்கி வெச்சி,
ஆச தீர
ஊட்டி விடணும்.

ஒட்டு போட்ட
ரவிக்கையும்
அங்க இங்க
விட்டு போச்சு.
மிச்ச மீதி
காசிருந்தா
ரவிக்கை ரெண்டு
எடுத்துப்புடனும்

மூணு முடிச்சு
போட்ட சொந்தம்
முடிஞ்சு
ஆறு வருஷமாச்சு.
ஒத்தயில
வாழ்க்க இப்ப
கஷ்டமில்ல
பழகிப்போச்சு.

நூறு நாலு
திட்டத்துல
அப்பப்ப
வேல வரும்.
மிச்ச நாலு
பக்கத்துல
தோட்ட வேல
கூலி தரும்.

புழுங்கிக்கிட்டே
நடந்தவ
கதைய
மேகமும் தான்
கேட்டுடுச்சோ?
படபடன்னு
வேகமாக
மாரியும் தான்
பேஞ்சிடுச்சே.

கணக்கு போட்டு
மெல்ல நடந்தவ,
தலையில தான்
மழை விழுவ
முந்தானைய
எடுத்து போத்தி,
ஓட்டமாக
வீடு வந்தா.

எத்தன நாள்
பாக்கியோ
இது நிக்காம
பெய்யுதேனு
யோசனையில்
அடுப்ப மூட்டி
ஒலயத்தான்
கொதிக்க வெச்சா.

பொழுது விடிஞ்சா
மொத வேல
கணக்கெல்லாம்
தீத்துப்புடனும்,
மனசுக்குள்ள
நெனச்சிக்கிட்டே
கண்ண மூடி
தூங்கிபுட்டா.

அடுத்த நாலு
காலையில
புள்ளைய தான்
எழுப்பி விட்டு,
வீடு வாசல்
மொழுவி விட்டு,
குளிச்சு அவளும்
நிக்கயிலே
ரெட்டை ஜட
பின்னிவிட்டா.

நேத்து வடிச்ச
சோத்துலதான்
தண்ணி ஊத்தி
வெச்சிருதா.
கல்லு உப்ப
அள்ளி போட்டு,
மொளகா ரெண்டு
கிள்ளி போட்டு,
தட்டுல தான்
இவளும் தர

பழைய சோத்த
ஆச ரோசா
அள்ளும் போது,
மொகத்த பாத்த
பெத்த மனசு
ஒடஞ்சி போச்சு
கண்ணும் கூட
நெனஞ்சி போச்சு.

பட்டு ரோசா
பாக்கும் முன்னே
முந்தானையிலே
தொடச்சிகிட்டு,
ரோசாவுக்கு
முத்தமிட்டு
பள்ளிக்கூடம்
அனுப்பிவிட்டு,

அண்ணாச்சி
கடைக்கு வந்து
அரிசி பருப்பு
வாங்கிகிட்டு,
பழைய பாக்கியும்
சேத்து தீக்க
கணக்கு எல்லாம்
பாத்து முடிச்சு,

சேலையில
முடிஞ்சு வெச்ச
காச எடுத்து
இவளும் நீட்ட,
ஆயிரம் தான்
செல்லாதுன்னு
அரசாங்கம்
சொல்லீடுச்சே

நேத்து ராத்திரி
டிவியில
அந்த சேதி
பாக்கலயா,
விடிஞ்சும் கூட
அக்கம் பக்கம்,
பேசறத
கேக்கலயா
வெவரமாக
அவரும் சொல்ல,
சோலையம்மா
ஒடிஞ்சி போய்ட்டா.

கவல பட
ஏதுமில்லை,
மாத்திப்புட
வழி இருக்கு,
வங்கி கணக்கு
இருக்குதான்னு,
அண்ணாச்சி
கேட்டதுக்கு,
இல்லையேன்னு
தலையாட்ட
அடுத்த வழிய
சொன்னாரு.

டாஸ்மாக்
கடைக்கு போனா,
ஆயிரத்துக்கு
பிடிப்பு போக,
ஏழோ எட்டோ
நூறு ரூவா,
கைக்கு வரும்
யோசிக்காத.

இத்த விட்ட
வழியுமில்ல,
வெச்சிகிட்டா
பயனுமில்ல.
சுருக்குனு
வெவரத்த
அண்ணாச்சி
சொன்னாரு.

அவளும்
எதையும்
யோசிக்காம,
அங்க போயி
மாத்திகிட்டா,
மூணு நூறு
புடிச்சுகிட்டு
ஏழு மட்டும்
கைக்கு வர,

மூணு நாளு
தோட்ட வேல,
முதுகு வலிக்க
செஞ்சதெல்லாம்
அநியாயமா
போயிடுச்சேன்னு,
மனசுக்குள்ள
கொதிச்சுப்போனா.

சட்டம் போட்ட
நல்லவரு,
நல்லா
இருக்கனுன்னு,
நாலு வார்த்த
வஞ்சிப்புட்டு,
வீடு வந்தா
சோலையம்மா.



4 comments:

  1. Solaiyamma title very attractive. Then superb written realy excellent

    ReplyDelete
  2. Solaiamma, pankajam, Rosa and Annachi just lived in front of me !!! The lines "பெத்த மனசு
    ஒடஞ்சி போச்சு
    கண்ணும் கூட
    நெனஞ்சி போச்சு" couldnt have been any better than them.

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...