Tuesday 15 November 2016

கவி

"ஏய் கவி.. சொல்ரத கேலு.. நேத்து மீட்டிங் முடியவே லேட் ஆய்டுச்சு டி" இவன் சொல்லீட்டிருக்கும்போதே "சரிடா.. எனக்கிப்ப தூக்கம் வருது, நாளைக்கு பேசறேன்" ஃபோன வெச்சுட்டா கவிதா. ஏழரையாவே போற காதல நெனச்சி எஃக் ரைஸ் செஞ்சான் செல்வா. என்னதான் ஆக்சிஸ் பேங்க்ல உத்தியோகம்னாலும் இவன் இருக்கறதோ அண்ணாசாலை கார்ப்பரேட் ஆபிஸ்ல. காலைல பத்து மணிக்கு தொறந்து அஞ்சு மணிக்கு மூடற எடம் இல்ல. அவன் ஆபிஸ்ல இருந்து கெலம்பவே ராத்திரி பத்து மணி ஆய்டும். சில நேரங்கள்ல பதினொன்னு பன்னெண்டு வரைக்கும் வேல இருக்கும். சத்தியத்துக்கு கூட்டீட்டு போறன்னு சத்தியம் பன்னீட்டு காப்பாத்த முடியாம கல்லடி வாங்குவான் நம்மாளு.

வாழ்கனாலே சந்தோசமும் சங்கடமும் சேந்ததுதான.. இவனுக்கு ரெண்டுமே கவிதா தான். வேல, கவிதாகிட்ட திட்டு வாங்கறத தவிர இவன் அதிக நேரம் செலவு பன்றது சமயகட்டுல. விதவிதமா சமைக்கறது இவனுக்கு அலாதி இன்பம். போன பொறப்புல புரோட்டா மாஸ்டரா இருந்துருப்பான்னு பசங்களாம் கிண்டல்பன்னுவாங்க. காதுலயே போட்டுக்காம கரண்டிய எடுத்துப்பான். பல சமயம் கவிகூட இவன் வாய்ல ஆரம்பிக்கர சண்டய இவன் கை தான் முடிச்சுவெக்கும். கைப்பக்குவம் அப்படி. ஆனா கவிதா சுத்தம். கர்நாடகால இருந்து காவேரி வந்தாலும் வந்துரும் ஆனா கவிதாக்கு சமயல் வரவே வராது. அவ செய்ற அதிகபட்ச சமயலே நூடுல்ஸ்தான். அதுவும் பாதிநாள் ஒழுங்கா வராது. "அவளுக்கென்னடி அவ பாய்ஃபிரண்டு நல்லா சமைப்பான்.. இவ காலம்பூரா அடுப்ப பத்தவெக்காமலே ஆயுச முடிச்சிருவா" கவி ரூம்மேட் அடிக்கடி சொல்லுவா.

வியாழக்கெழம ரிலீஸ் ஆக இருந்த இருமுகன் படத்துக்கு புக்கிங் ஓபன் ஆன ஒடனே ரெண்டு டிக்கெட் போட்டுட்டான் செல்வா. ஈவனிங் ஷோ தான். மேனேஜர் பர்மிஷன் கெடச்சிரனும்னு வடபழனி முருகன் கோவில்ல ஒரு தேங்காயும் ஒடச்சிருந்தான். மேனேஜர் அந்தபக்கம் ஒருமொகத்த காட்ட, கவிதா இந்தபக்கம் இன்னொரு மொகத்தகாட்ட இவனுக்கு இருண்டமொகமாயிடுச்சு இருமுகன் ப்ளான். இந்த சங்கசத்துல ஒரு சுவாரஸ்யம் என்னனா... கவிதா சீயானோட தீவிர விசிறி. செல்வா க்கு வீக்கெண்டு டெட் எண்டு ஆய்டுச்சு.

வர புதன்கெழம அவளுக்கு பொறந்தநாள் வேற.. அதுக்காச்சம் சொதப்பாம ஏதாச்சம் செய்யணும்னு செல்வா நெனச்சான். ஒரு கேக்க அவனே பேக் பண்ணீடலாம்னு முடிவெடுத்தான். பாங்க்ல சிஸ்டம் ஷட்டவுன் ஆன பொறவு வீட்ல ஆன் பண்ணான். யூடியூப் ல கேக் செய்றதெப்படினு பாத்தான். தேவயான பொருட்கள் மட்டுமில்லாம அளவுக்கதிகமான அன்பயும் கொட்டி ஒரு அழகான ஸ்டிராபெர்ரி கேக் செஞ்சி அதுல "ஹேப்பி பர்த்டே கவி" எழுதிமுடிச்சான். உசுரே போனாலும் அன்னைக்கு வேலைக்கு போககூடாதுன்னு உறுதியா இருந்தான். இவளுக்கும் அன்னைக்கு லீவு போட்டுத்டதாவும், அவகூடவே இருக்கறதாவும் ப்ராமிஸ் செஞ்சிருந்தான். கெரகம் மும்பை ஆபீஸ்ல இருந்து டீம் வர்ரதால லீவு முடியவே முடியாதுன்னு மேனேஜர் சாதிக்க கைல கால்ல விழுந்து மூனு மணிக்கே கெளம்ப பர்மிஷன் தான் கடைசியா கெடச்சிது செல்வா க்கு.

சும்மாவே தையதக்கானு குதிக்கரவ கால்ல சலங்கயவேற கட்டிவிட்டா சும்மாவா இருப்பா.. இவன் வேலய முடிச்சுட்டு எத்தனமொற கூப்புட்டும் அவ ஃபோன எடுக்கவே இல்ல. கேக்க தூக்கி வண்டில வெச்சிகிட்டு அவளோட பி.ஜி. க்கே போனான். தகவலே இல்ல. அரமணி நேரம் வெய்ட் பன்னீட்டு வண்டிய எடுத்து போறவழில இவன்படற பாட்டுக்கு வானமே அழுதுச்சு.. வண்டிய ஓரங்கட்டி ஒரு பஸ் ஸ்டாப்ல ஒதுங்கனான். மறுபடியும் கவிதாக்கு ட்ரை பன்னான். ஸ்விச் ஆஃப்னு வந்துச்சு.

மழய வேடிக்க பாத்தபடியே நின்னான். அப்ப நாளஞ்சு சின்ன பசங்க, ஒரு அஞ்சாவது  ஆறாவது இருக்கும் மழதண்ணிய மாத்தி மாத்தி அடிச்சு வெளயாடீட்டு இருந்தாங்க. அதுல ஒருத்தன் "இவன் பொறந்தநாளைக்கு திங்க வாங்கித்தரன்னு ஏமாத்தீட்டான் டா" சொன்னான். "இல்ல டா எங்கப்பா நூருவாதாண்டா குடுத்தாரு. அந்தன்னன் ஒரு துண்டு கேக்கே 65 ரூவா சொல்லுச்சு டா.  இவன் ஐஸ் கேக்குதான் வேணும்னு சண்டபுடிக்கறான்டா" வருத்தத்தோட சொன்னான். இதபாத்துட்டே இருந்த செல்வா க்கு ஏதோ தோன "பர்த்டே பாய கூப்புட்டு.. உன் பேரு என்னனு கேட்டான்" முன்னாடி ஒரு பல்லு விழுந்த அந்த பர்த்டே பாய் "கவியரசன் சார்" நு சொன்னான்.


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...