Wednesday 30 November 2016

சத்தம்

ஆனைமலை வனப்பகுதியில் சீரமைப்பு பணி நடந்துட்டு இருந்துச்சு. வன விலங்குகள் எல்லாம் சேந்து அவங்க காட்டுல இருக்கற குட்டைகளை தூர்வாரறது, குளக்கரைகளை சீர் அமைக்கறதுனு ஆளுக்கு ஒரு வேலைய செஞ்சிட்டு இருந்தாங்க. குளம் குட்டையெல்லாம் சீரா இருந்தா தான அடுத்த பருவ மழைக்கு எல்லாம் ரொம்பி விலங்குகள் தாகத்த போக்க தண்ணி கெடைக்கும்? அதனால அந்த பணியெல்லாம் கடந்த ஒரு வாரமா நடந்துட்டு இருக்கு.

காட்டு ராஜா சிங்கம், அன்னைக்கு அதிகாலைல கெளம்பி, எல்லா இடத்துக்கும் வேலையெல்லாம் எப்படி நடக்குதுன்னு பாக்க போச்சு. கூடவே அதனோட அமைச்சர் கரடியும் போச்சு. காடு ரொம்ப பெருசில்லயா. அதயெல்லாம் பாத்துட்டு திரும்பி வர அடுத்த நாள் மதியம் ஆயிடுச்சு.

சிங்கத்துக்கு ஒரே களைப்பா இருந்துச்சு. நல்ல வயிறார சாப்புட்டு ஒரு தூக்கத்த போடணும்னு நெனச்சுது. தூங்க போறதுக்கு முன்னாடி அதோட ரெண்டு குட்டியையும் கூப்புட்டு, " அப்பா இப்ப தூங்க போறன். யார் வந்து கேட்டாலும் நாளைக்கு வர சொல்லு. சத்தம் கித்தம் போடாம அமைதியா இருக்கனும்னு" சொல்லீட்டு தூங்க போச்சு.

சிங்கம் கண்ணமூடி முழுசா மூணு நிமிஷம் கூட ஆகல. பக்கத்துல இருந்து ஓஓஓங்குனு  ஒரு சத்தம். சிங்கக்குட்டிங்க பதறுச்சு. அப்பா முழிச்சாரு நம்மள வைவாரு. சீக்கிரமா அந்த சத்தத்த நிறுத்திப்புடனும்னு நெனச்சுதுங்க. இந்த சத்தத்துக்கு சொந்தக்காரன் யாரு? பானை வயிற்று யானையா? இல்ல பால் குடிக்கும் பூனையானு தேடும்போது, ஒரு பெரிய வாழ குலைய வாயில தள்ளீட்டு மீண்டும் பிளிறியது அந்த யானை. யானை மாமா யானை மாமா, எங்க அப்பா ரொம்ப களைப்பா தூங்கறாரு. நீங்க கொஞ்சம் தொலைவா போய் பிளிருங்கள்னு சிங்ககுட்டீங்க கேட்டுக்குச்சு. யானையும் மெதுவாய் அசைந்து தொலைவாய் சென்றது. இதுங்களும் நிம்மதியாச்சு.

அடுத்து ஒரு ரெண்டு நிமிஷம் தான் போயிருக்கும். ஊஊஊஒ வென ஒரு சத்தம். ஐயோ திரும்பவும் ஒரு சத்தமா? குட்டிங்க பதறுச்சு. சத்தத்தின் திசை நோக்கி ஓடுச்சுங்க. இச்சத்தத்தின் சொந்தக்காரன் சீறி ஓடும் பரியா இல்லை சிறுமூளை படைத்த நரியா? மீனைப் பிடித்த சந்தோஷத்தில், வானைக் கிழிக்கும் சத்தத்தில் ஊளையிட்டது நரி. "நரியண்ணே நரியண்ணே, எங்கப்பா தூங்கறாரு, கொஞ்சம் ஊளையிடாம இருங்கண்ணே" கனிவாய்ச் சொன்னதும், பணிவாய்ச் சென்றது நரி.

சிங்கக்குட்டிகள் திரும்பவும் குகைய நோக்கி நடந்துச்சு. நடந்துட்டே இருக்கும் போது மறுபடியும் சத்தம். யாரடா இந்த சத்தத்தின் சொந்தக்காரன். ஒலி வந்த திசையில் ஓட்டம் பிடித்தன. இந்த சத்தத்தின் சொந்தக்காரி, தோகை விரித்தாடும் மயிலா இல்லை பாடல் இசைக்கும் குயிலா? ஓடிச்சென்று பார்த்தன. ஆடிக்கொண்டிருந்தது மயில்தானென்றாலும், சத்தம் மயிலின் அகவல் அல்ல. அது மரத்தில் அமர்ந்திருக்கும் குயிலின் கூவல். குயிலக்கா குயிலக்கா, "எங்கப்பா தூங்கீட்டு இருக்காரு, உங்கள் குரல் இனிமைதான் என்றாலும், அதில் இருக்கும் இன்னலைச் சொன்னதும், மின்னலாய் பறந்தது குயில்.

குயில் பரந்த பத்து வினாடியில் கேட்டது உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என ஒரு பெருஞ்சத்தம். அதுவும் குகை இருக்கும் திசையில் இருந்து. புலியின் உருமலாக இருக்குமோ குட்டிகள் ஓடின. அங்கே புலி ஏதும் இல்லை. ஆனால் சத்தம் மட்டும் பெருசா இருந்துச்சு. சத்தம் வந்த திசையில் குட்டிகள் நடந்தன. குகை உள்ள இருந்தே வந்துச்சு. யாரோ நம்ம அப்பா பக்கத்துலயே இருந்து கத்தறாங்கனு நெனச்சு உள்ள போச்சுங்க. அந்த சத்தமோ சிங்கம் படுத்துட்டு இருந்த இடத்திலிருந்தே வந்துச்சு. அது வேறொன்றுமில்லை. அசந்து தூங்கும் சிங்கத்தின் கொறட்டை சத்தம் தான் அது.




5 comments:

  1. Very fun sema story i like very much.

    ReplyDelete
  2. கதை கேட்கும் போது குழந்தை பருவத்தில் கிடைத்த மகிழ்ச்சி இப்பொழுது கிடைத்தது.அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Nice story nandhu...way to go👍🏻👍🏻Kids will enjoy the story lines thoroughly...

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...