Wednesday 16 November 2016

காவ்யா

ராஜேஷும், பிரீத்தியும் அவங்களோட ரெண்டு வயசு மகள பாத்துக்கறதுக்காக புதுசா ஒருத்தர வேலைக்கு அன்னைக்கு தான் வெக்கறாங்க. அந்த அம்மா வரதுக்காக காத்துட்டு இருக்காங்க. காலிங் பெல் பார்வதி அம்மா வோட வரவ அறிவிச்சுது. என்னலாம் செய்யணும்னு அவசரமா சொல்லி ரெண்டு பேரும் வேலைக்கு புறப்பட்டாங்க. காலைல இருந்து ஓ எம் ஆர் ல ஆரமிக்கற புது ப்ராஜெக்ட்ல பிஸியா இருந்தான் ராஜேஷ். பிரீத்தியும் டாஸ்க், டீம் மீட்டிங்னு நேரம் போறதே தெரியாம இருந்தா.

ஒரு ரெண்டு மணி இருக்கும். அப்ப தான் லஞ்ச்கு கேபிடேரியா வந்தா. வீட்டு லேண்ட் லைன்கு  கால் செஞ்சு எல்லாம் எப்படி போகுதுனு கேட்டுகிட்டா. சாப்பிட்டு முடிக்கும் போது அங்க இருந்த டி.வி.ல சென்னைல கடந்த மூனு மாசமா அடிக்கடி காணாம போற குழந்தைகள் கேஸ்ல  போலீசால் சந்தேகப்படற ஆளுனு பார்வதி அம்மா போட்டோ வந்துச்சு. மறுபடியும் பதட்தட்டோட அவசரமா வீட்டுக்கு கால் செஞ்சா, யாருமே போன் எடுக்கல. மறுமுனைல போன் அடிச்சிட்டே இருந்துச்சு. பிரீத்தியோட இதயமும்...

ஒடனே ராஜேஷ்கு கால் செஞ்சா.. அவன் முக்கியமான மீட்டிங்ல இருந்ததுல போன் சைலன்ட்ல இருந்துச்சு.. எடுக்கல. திரும்ப திரும்ப அவனுக்கு கால் செஞ்சிட்டே இருந்தா.. அவசரமா ஒரு ஆட்டோ புடிச்சா.. வீட்டுக்கு போற வரைக்கும் விடாம மாத்தி மாத்தி ராஜேஷுக்கும், வீட்டுக்கும் போன் செஞ்சிட்டே இருந்தா.. அவசர அவசரமா எறங்கி போனா, வீடு தொறந்து கெடந்துச்சு. எல்லா ரூம்லயும் பாத்தா, அந்தம்மாவையும் காணோம். கொழுந்தையும் காணோம். இவளுக்கு மயக்கமே வந்துருச்சு.

ஓன்னு அழறா.. என்ன செய்றதுனு தெரில. மீட்டிங் முடிஞ்சா ராஜேஷ் அத்தனை மிஸ்ட் கால் இருக்கறத பாத்துட்டு கூப்டான். இவளுக்கு வார்த்தையே வரல. அழுத்திட்டே இருக்கா. அவனுக்கும் ஒன்னும் புரியல. என்ன ஆச்சு. என்னாச்சுனு சொன்னாதான தெரியும்னு கேட்க, கடைசில காவ்யா தொலஞ்சி போன விஷயத்த இவ சொன்னா. ராஜேஷ் பதரீட்டான். "நம்ம காவ்யாக்கு ஒன்னும் ஆகீருக்காது. நீ பதட்டப்படாத. தைரியமா இரு. நான் சீக்கிரம் வந்துர்ரன்" னு சொல்லி வெச்சான். வர்ற வழில ஏதோ யோசிச்சவன், கார்ர வேகமா எடுத்துட்டு அவளையும் கூப்டுட்டு நேரா திரு.வி.க. நகர்ல ஒரு வீட்டுக்கு போனான்.

வீடு பூட்டிருந்துச்சு. பக்கத்துல விசாரிச்சா, அவங்க வேற ஊருக்கு இப்பதான் போறாங்க. எங்க என்னானு வெவரம் ஏதும் சொல்லலனு ஒரு பதில் வந்துச்சு. ராஜேஷுக்கு ஒரு விஷயம் ஊர்ஜிதமாயிடுச்சு, திரும்பவும் எதையோ யோசிச்சவன் பக்கத்துல இருக்கற சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்க்கு வால் டேக்ஸ் ரோடு வழியா வந்தான். சென்ட்ரல் வாசல்ல நிறுத்தி, "நீ போய் பார்க் பண்ணீட்டு வரியா, நான் அதுக்குள்ள உள்ள போய் பாக்கறேன்" இவன் கேட்க. நானும் வரேன். என்ன விட்டுட்டு போகாதான்னு இவ சொல்ல அதுக்குள்ள பின்னாடி இருந்து ஹார்ன் சத்தம், சைடுல டிராபிக் போலீஸ் வேற, வண்டிய இங்க நிறுத்தாதீங்க, எடுங்கனு கத்த, இவன் வேகமா பார்க்கிங் லாட்க்கு போனான்.

வண்டிய விட்டுட்டு ஓட்டமும் நடையுமா ஸ்டேஷன்க்கு வந்தவன் டிஸ்பிலேல ட்ரெயின் பேரு லாம் பாத்தான். நேரம்  சிக்ஸ்ட்டின் பார்ட்டி பைவ், ஹைதெராபாத் எக்ஸ்பிரஸ், பிளாட்போர்ம் நம்பர் ரெண்டு, பாத்த ஒடனே இன்னும் வேகமா ஓடனான். ட்ரெயின் புறப்பட இன்னும் இருவது நிமிஷம் இருக்கு. நேரா ஜெனரல் கம்பார்ட்மெண்ட்கு போனான். காவ்யா அங்க இருக்கணும்னு இவன் வேண்டாத தெய்வம் இல்ல. ப்ரீத்திய இழுத்துட்டு வேகமா ஓடனான். ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல ஏறீட்டான். இவனோட கண்கள் முகங்களுக்கு நடுல ஒரு மழலைய தேடுது. இங்க இருக்க மாட்டாளா? அங்க இருக்க மாட்டாளாணு மனசு துடிக்குது. எல்லார் கிட்டயும், ரெண்டு வயசு பெண் கொழந்தையோட ஒரு அம்மா வந்தாங்களா? பாத்தீங்களா? பாத்தீங்களா? கேட்டு கேட்டு மொத்த சத்தையும் எழந்துட்டான்.

நேரம் ஆக ஆக இவனுக்கும் கண்ணு கலங்குது. ஒரு பக்கம் ப்ரீத்தி வேற அழுது ஆர்ப்பாட்டம் செய்றா. அவள சமாதான  படுத்த கூட இவனுக்கு தோணல. "காவ்யா, எங்க இருக்க? என்ன பண்ற?  உன்ன பாத்துர மாட்டேனா? என் கண்ணுல நீ படமாட்டயா?" இது மட்டுமே அவன் மனசுல ஓடுது. மொத்த ட்ரெயின்னையும் அலசி, அவ கெடைக்காம, ஒடஞ்சி போய் பிளாட்போர்ம்ல ஒக்காந்துட்டான்.

அடுத்து என்னன்னே தெரியாம மனசு இருண்டுபோய் இருந்த நேரத்துல, ட்ரெயின்ன புடிக்க, கூட்டத்துக்கு நடுல, ஒரு அம்மா வர்ரது இவன் கண்ணுல பட்டுச்சு. கைல கொழந்த இருக்கு. இவனோட காவியா இருக்கா. அந்தம்மா ஜெனரல் கம்பார்ட்மெண்ட் பக்கத்துல வர, ராஜேஷ் எதிர்ல வந்து நின்னான். அந்தம்மா அப்டியே தெகச்சி, பயந்து நின்னா. ப்ரீத்தி அந்தம்மா கைல இருந்து காவ்யாவ புடுங்கி மாறி மாறி முத்தம் குடுத்தா. அந்தம்மா அப்டியே ஒடிஞ்சி போய் கீழ ஒக்காந்து அழ ஆரமிச்சிட்டா. என்ன மன்னிச்சிருங்க. நான் வேணும்னு எதுமே செய்யல. பெத்த பாசம் கண்ண மறச்சிருச்சி, நான் வேணும்னே செய்லனு தேம்பி தேம்பி அழறா.

காசுக்காக தான் வாடகைத்தாயா இருக்க ஒத்துக்கிட்டேன். ஆனா என் கொழந்தைய பாக்காம இருக்க முடியல. அதனால அடிக்கடி நீங்க ஆபீஸ் போன ஒடனே உங்க வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியா இவ வெளயாடறத பாத்துட்டு போய்டுவேன். தூரத்துல இருந்தே பாத்து சந்தோஷபட்டுப்பன். இன்னைக்கும் இவள பாக்கறதுக்காக உங்க வீட்டுக்கு வந்துருந்தன். அப்ப வழக்கமா வேலைக்கு இருந்தவங்க காணோம். புதுசா ஒரு பொம்பள இருந்துச்சு. 

இவ ஒரு பக்கம் விளையாடிட்டு இருக்க. அந்தம்மா எதையோ யோசிச்ச மாதிரி இருந்துச்சு. எனக்கு என்னனு வெளங்கள. சரி யாரும் பாக்கறதுக்கு முன்னாடி கெளம்பலாம்னு நினைக்கும் போது, அது போன்ல "இந்த கொழந்தைய இன்னைக்கே தூக்கீறலாம். நான் எல்லாத்தையும் பாத்துட்டேன். பிரச்னை வராது. அவங்கலாம் வரதுக்கு எப்படியும் ஏழு மணி ஆய்டும். நாம ஒரு மூணு மணிக்குலாம் போய்டலாம். நீ வண்டி எடுத்துட்டு வந்துருனு" சொல்லீட்டு இருந்தத, நான் கேட்டுட்டேன்.

மனசு படபடக்க ஆரமிச்சுது. எப்படியாவது காவ்யாவ காப்பாத்தணும்னு நெனச்சேன். அப்ப ஒரு போன் வந்துச்சு அவ அதுல பேசீட்டு இருந்தா. கடவுள் புண்ணியத்துல கதவு தொறந்தே இருந்துச்சு. பின்னாடி இருக்கற கொழந்தைய அவ கவனிக்கல. நான் இவள தூக்கீட்டு வேகமா வீட்டுக்கு போய்ட்டேன். அந்த பாவி கிட்ட இருந்து காவ்யாவ காப்பாத்தணும்னு தான் மொதல்ல நெனச்சன். அப்பறம் வீட்டுக்கு வந்த ஒடனே தான், இவ நிரந்தரமா என் கூட இருக்கமாட்டாளான்னு ஒரு பேராசை வந்துருச்சு. அதான் எங்க ஊருக்கே போய் ஏதாச்சும் செஞ்சி பொளச்சிக்கலாம்னு தூக்கீட்டு வந்துட்டேன். என்ன மன்னிச்சிருங்கனு, குமுதா கதறி அழுதா.

எல்லாத்தயும் கேட்டு முடிச்ச ராஜேஷ், எங்கயோ போய் ஏன் கஷ்டப்படணும், பேசாம நீயே வீட்ல இருந்து காவ்யாவ பாத்துக்கோனு சொல்லீட்டான். அது வரைக்கும் அமைதியாவே இருந்த ப்ரீத்தி, "ராஜேஷ், நானே வேலைய ரிசைன் பண்ணீட்டு இனி காவ்யாவோட அம்மாவா மட்டும் வீட்லயே இருந்து இவள பாத்துக்கறேன்." தீர்க்கமா சொன்னவ,  "குமுதாவும் கூட இருக்கட்டும்" னு சொல்லி, காவ்யாகு ஒரு முத்தம் குடுத்தா. அந்த முத்தத்தோட ஆழமே இவளோட தாய்மையை சொல்லுச்சு.








3 comments:

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...