Saturday 31 December 2016

2017ல் ஒரு சபதம் எடுப்போம்..

நண்பர்கள் சுற்றம் உறவினர் என பலரும் ஆங்கில புத்தண்டு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் இதே நேரத்தில், வருடத்தின் கடைசி தினம் ஏதோ சற்று கனமாகவே இருந்தது. பயிர்கள் கருகியதில் நெஞ்சடைத்து உயிர் விட்ட விவசாயிகள் பற்றிய தகவல் அது..
பரபரப்பு வாழ்க்கையில் அனைவருமே அவர்களின் தேவைக்காய் ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டத்தை ஒரு கனம் நிறுத்தி உற்று நோக்க வேண்டிய சோகம் இது.. வானம் பொய்த்து வறட்சி செழிக்க நாம் அனைவருமே காரணம் தான்.. வனங்கள் அனைத்தும் கோடரி ரனங்களுடன். பரிசல் பாதைகள் விரிசல் பூமியாய். வெய்யிலின் உக்கிரத்தில் காய்ந்து வரண்டு கடும் தாகத்தில் ஏரிகளும் குளங்களும். இறந்த ஒவ்வொரு விவசாயியையும் கொன்ற குற்றத்திற்காய் குற்றவாளி கூண்டில் கோடிக்கணக்கான நாம்..
தவறினை திருத்திக் கொள்ள சிறு முயற்சி செய்வோம்.. இதனால் கல்லறைகள் உயிர்த்தெழப்போவதில்லை.. ஆனால் மேலும் கல்லறைகள் உதிக்காது தடுக்கலாம்.. வணிகத்திக்காய், வர்த்தகத்திற்காய் அடகு வைத்த உலகை மீட்கும் பணியில் இறங்குவோம்..

காய்ந்த குளங்களின் காயம் போக
வற்றிய கிணற்றின் வாட்டம் போக
வெடித்த நிலங்களின் ரணம் ஆற
வாடிய பயிர்களின் தாகம் தீர
எரியும் பிணங்களின் தனலினை அணைக்க
புதைத்த உயிர்களின் ஆன்மா குளிர
மழை வரச்செய்வோம்...

புத்தாண்டில் ஒரு சபதம் எடுப்போம்..
ஒரு மரமேனும் நடுவோம்..
மழை வரச்செய்வோம்..


Friday 30 December 2016

சுமை

வெண்பட்டு நரையும்
வெள்ளியில் ஒரு காப்பும்
அதிர்ந்து பேசாத
ஒரு முதிர்ந்த அன்னை
நலிந்த தேகத்தில் அவளோ
ஆரோக்கிய மேரி.

அண்டை வீட்டில் இருப்பவள்
முகவரியோ அன்பும் பண்பும்
நேற்றய நினைவுகளில்
இன்று நாள் கடத்துபவள்.
இறுதியை எதிர்நோக்கி
இன்முகத்துடன் இருப்பவள்.

எங்கள் பகுதி பொடுசுகளெல்லாம்
தொலைக்காட்சி பார்ப்பது
அவள் வீட்டிலே தான்
குழந்தைகள் கார்ட்டூன் பார்க்க
குழந்தைகளை பார்த்தபடியே
மணிக்கணக்காய் இவள் இருப்பாள்

பல்லாயிரம் கதைகள் சுமக்கும்
அட்சய பாத்திரம் அவள்
ஒரு கதையை மறுமுறை
அவள் சொல்லி கேட்டதில்லை
அவள் வாய் பிறக்கும் கதைகளுக்கு
வாயடைத்து பிள்ளைகள் இருக்கும்

எங்கள் பகுதி பிள்ளைகளுக்கு
டிசம்பர் வந்து விட்டால்
பரிசுகள் வழங்குவதோ
கிறிஸ்துமஸ் பாட்டி தான்
கொடுப்பதன் சந்தோஷத்தை
அவள் முகம் பார்த்து படிக்கலாம்

அவள் வைக்கும் குழம்பில் மிதக்க
செத்த மீனும் தவம் கெடக்கும்
தேங்காய் பால் சேர்த்து சமைத்த
கேரளத்து மனம் மண்டும்
பக்கத்தூரை பந்திக்கு அழைக்கும்
பிரமாதம் அவளது சமையல்

சியாட்டில்லோ சிட்னியோ என்றாவது
அவள் கைப்பேசியில் தோன்றி மறையும்
கரிசனமா பெற்றகடனா குறிப்பில்லை
நாள் தோரும் பிராத்தனையில்
இவள் ஜெபிக்கும் மந்திரங்கள்
அவர்களின் நலம் வேண்டியே

வழிபாட்டின் இறுதியிலே இமைகள்
விரிகையிலே நீர்த்துளி வெளிப்படும்
ஆழ்மனதின் துயரத்தை தாளாத
துக்கத்தைத் தூர்வாரிக் கொணரும்
அந்த ஒரு துளி நீரின் பாரம்
கர்த்தருக்கே பெரும் சுமையாய்



Monday 26 December 2016

மாமல்லன் தருணங்கள்

வகுப்புகளில் இருந்ததைவிட அதிகமாய் மேடைகளில் இருந்தவர்கள்நாங்கள்..   வெறும் மட்டைப் பந்து விளையாடியவர்களுக்கு வளைகோல் பந்து அறிமுகம் கொடுத்ததே பள்ளி தான். நியூட்டன் விதிகளுடன் சேர்த்து கட்டபொம்ம்மன் வசனத்தை மனப்பாடம் செய்தோம். வள்ளுவன் குறளுடன் வைரமுத்து வரிகளை மனதில் பதித்தோம். டார்வின் கோட்பாடு படித்து எங்கள் வாழ்க்கையின் கோட்பாட்டினை தேடினோம்.

வரலாறு படித்து கதை எழுத பழகினோம். வேதியல் ஆய்வுக் கூடத்தில் உப்பை பரிசோதித்து அல்ல, படிப்பவனிடம் கேட்டே கண்டுபுடித்தோம்... கரிம வேதியல் சூத்திரங்களுடன் முட்டி மோதினோம். கணினி வகுப்புகளில் கணினியில் விளையாட போட்டி போட்டோம்.

நாங்கள் கணக்கு படித்ததெல்லாம் ஸ்கோர் எண்ணியே. ஆசிரியர்களுக்கு பட்ட பெயர் வைத்து மகிழ்ந்தோம். நண்பருக்கு நிகரான கணக்குவாத்தியார். அதிகாலை அவர் டியூஷனில் சோம்பல் முறித்தோம். ஆங்கில வாத்தியார் ரோமியோ ஜூலியட் பாடம் எடுக்க. எங்கள் வகுப்பு ரோமியோக்கள் ஜூலியட்டை தேடினர்.

பள்ளி முடிந்ததும் மாலை இருட்டும் வரை விளையாட்டு பழகினோம். மாலைவிளையாடி முடித்து, வியர்வையால் நனைந்த சட்டை உலரும் வரை கதைகள் பேசினோம். மைதானத்தில் விற்கும் சிறிய சமோசாவிற்கு சண்டை போட்டோம். விடுமுறைகளில் மட்டைபந்தே கதியாய் இருந்தோம். கிடைக்கும் சந்து பொந்துகளிலெல்லாம் மட்டைப் பந்தே விளையாடினோம். உச்சி வெயிலில் வாட்டர் பாக்கெட்ல் தொண்டை நனைத்து, முகம் கழுவி மீண்டும் வெயில் வதங்கினோம்.

ரஜினி கமல், விஜய் அஜித், சச்சின் சௌரவ், பட்டிமன்றங்களை கணக்கின்றி நடத்தியவர்கள் நாங்கள். ஜுராசிக் பார்க் பார்த்து பிரமித்து. டைட்டானிக் பார்த்து வியந்து, பாபா தோல்வி என்றால் கொந்தளித்து, அவ்வை ஷண்முகிக்கு சிரித்து, படையப்பவை கொண்டாடி, வளர்ந்தோம்.

ஜெயசூர்யா மட்டையில் கூடுதல் விசைக்காக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டுள்ளது என்று புடணி பேசி வாழ்ந்தோம். அண்டர்டேக்கர் பெட்டியில் இருக்கும் பிணங்களை பற்றி கதைகள் கட்டினோம். 2000 ல் உலகம் அழியுமெனவே நம்பினோம். கிசுகிசு வின் அர்த்தமே தெரியாமல் அதிகமாய் கிசுகிசுத்தோம்.

பள்ளி சுற்றுலாவில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஊட்டியும், பெங்களூரும் நாங்கள் சென்றதால் அழகானது. வகுப்பாசிரியை, ஒரு விழாவில் பாடலை பாடிய நான்கு வருடம் மூத்தவள், பள்ளி செல்லும் வழியில் எதிர்ப்படும் வேறு பள்ளி மாணவி, என தோன்றி மறையும் வானவில் போல் அவ்வப்போது ஒரு காதல். ஒட்டுமொத்த வகுப்புமே ஒரு பெண்ணை காதலித்த சுவாரசிய கதை எங்களிடம் உண்டு.

மிதி வண்டியில் ஊரின் குறுக்கு நெடுக்கெல்லாம் சென்று வந்தோம். நண்பர்களின் பிறந்தநாளிற்கு பானிபூரி கடைகளில் விருந்திற்கு தஞ்சமடைந்தோம். பள்ளி நிர்வாகி ஒருவர் மறைவிற்கு வருந்தாது, விடுமுறை என்று குதூகலித்ததோம்.  கூடுதலாய் இரு தின விடுமுறைக்கு வருணனை வேண்டினோம்.

நண்பர்களின் பிறந்தநாளும், நண்பர்கள் வீட்டு தொலைப்பேசி எண்களும் மனப்பாடமாக மனதில் இருந்தது...

எங்கள் பள்ளி பருவங்களில் சிம்ரனும், ஜோதிகாவும் எங்களின் கனவுக்கன்னிகள். ரகுமானின் இசையில் திளைத்து வளர்ந்தோம்... சங்கரையும், மணிரத்தினத்தையும் வியந்தோம்.

விவாதங்கள், வாக்குவாதங்கள், கேலி, கிண்டல்கள், அன்றாடம்… காகிதப் போர்களும்.. சாக் பீஸ் போர்களும் அவ்வப்போது. ஒரு சொட்டு இங்க் கடன் வாங்கி இரு வகுப்பு எழுதுவோம். பள்ளி மேஜைகளில் பெயர் பதித்து வரலாற்றில் இடம் பெற முயற்சித்த்தோம்.

பகிர்ந்துண்ணுதலை காக்கை கூட்டம் மட்டுமல்ல. எங்களை பார்த்தும் கற்றுக் கொள்ளலாம்..  அநேக நாட்களில், இரு வகுப்பு முன்னரே பசி அழைத்து விடுவதால், வகுப்பின் போதே டப்பாவை காலி செய்ததும் உண்டு... டெஸ்ட் கிரிக்கெட் நடக்கும் நாட்களில் அருகிலிருக்கும் நண்பனின் வீடே உணவு இடைவேளையில் உணவுக்கு கூடம்..  சில சமயங்களில் ஆட்டத்தை தொடர்ந்து பார்க்க அரை நாள் விடுப்பும் கூட அச்சமய தேவைக்காய்.

ஏதேனும் வம்பிழுத்து, சக மாணவியரின் முணுமுணுப்பிற்கு ஆளானவர்கள் அதிகம். அவர்களை எரிச்சலுறச் செய்வது ஒரு வாடிக்கையாகவே இருந்தது. கவிதை, நாடகமென சக மாணவிகளுடன் போட்டி போட்டோம்.

எதிரணியில் சக மாணவியர் இருந்ததால் பட்டிமன்றங்கள் சூடு பிடித்தன. கட்டுரை கவிதை போட்டிகள் ஆரோக்கியமாய் இருந்தது... அழகோவியம் தீட்டும் கைகளும், பாரதியின் பாஞ்சாலி சபதத்தை கம்பீரமாய் உரைத்த நாவுகளும் எங்கள் தோழியருடையதே. மெல்லினமே பாடி மும்தாஜை தேடிய ஷாஜஹாங்கள் உண்டு.  கீர்த்தனைகள் இசைக்கும் தோழியரும் உண்டு, "கானா" பாடல் பாடும் நண்பனும் உண்டு.

எங்கள் பள்ளி விளையாட்டு விழா ஒரு நாள் உற்சவம்..  ஊரை கூட்டும் பேண்ட் முழக்கம்.. எங்கள் நிற அணிக்காக விண்ணைக் கிழிக்கும் உற்சாக குரல் எழுப்பினோம்.. எங்கள் பள்ளி உசைன் போல்டின் வெற்றிக்கு குதூகலித்ததோம்.. ஒரு முறை கராத்தே வீர சாகசத்தில் நெருப்பு ஓடை உடைக்க முயன்று கையில் தீக்காயம் அடைந்த நண்பன் பார்த்து படபடத்தோம்..

எங்கள் ஆண்டுவிழாக்கள் பத்மினி நடனமும், ஜாக்சன் நடமும் கலந்தவை.. தெனாலிராமன் கதையும், ஷேஸ்பியர் நாடகமும் அரங்கேறும்... மொழி புரியா ஹிந்தி பாடலுக்கு எங்கள் பள்ளி மின்மினிகளின் நடனத்திற்கு மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும்.

விளக்கு பூஜையை பக்தி என்று எண்ணாது, நண்பர்களின் வீடுகளில் இருந்து வரும் உணவினை பகிர்ந்துண்ணும் ஒரு உணவு திருவிழாவாவகே பார்த்தோம்.. நண்பன் வீட்டில் நவராத்திரி கொலு, இன்னொருவன் வீட்டில் பக்ரீத் பிரியாணி, வெவ்வேறு மதங்களின் பண்டிகைகளும் எங்களை மேலும் இணைந்தன.

பன்னிரெண்டாவது முடிகையில் மனது ஏதோ கனமாகவே இருந்தது. பிரிதல் என்னும் வார்த்தையின் புரிதல் கண்ணின் இமைகளை நனைத்தது.. அன்று மனதிற்கு தெரியவில்லை எல்லோரும்  உலகின் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடந்தாலும் முகநூல், வாட்சப் என உலகம் சுருங்கி நட்பு கையடக்கத்தில் காலமெல்லாம் இருக்குமென்று...

அன்றைய சந்தோஷங்கள் இன்று நினைவுகளாய்... நினைத்து பார்க்கையில் சந்தோஷம் பன்மடங்காய்...
















ஹைக்கூ...

உண்டியல் திருடன்
அறநிலையத்துறை
மந்திரியாய்

புயல் காற்றிலும்
அணையாதெரியும் தீபம்
மழலையின் சிரிப்பு

ஒவ்வொரு இரவும் காண்கிறாள்
அவள் ஒழுக்கம் தவறும்
ஆண்களை.

எரியும் விறகின் துக்கமோ
கறியை பூசி நிற்கும்
அடுக்களை சுவர்கள்

குழந்தையை அழ வைக்க
உற்றாரும் உறவினரும்
காதணி விழா

கல்விக் கனவிற்கு
சவப்பெட்டியோ
இந்த தீப்பெட்டி

அரிசி படைத்தவனுக்கு
கைமாறாய் வாய்க்கரிசி
விவசாயி தற்கொலை

கல் அடுக்கி
கட்டிடம் அமைத்து
கசியும் வீட்டில் மேஸ்திரி

பட்டுத்துணி நெசவாளி
மானம் காக்க
கோவணத்துடன்

ஆனை விலையில்
ஆனா ஆவன்னா
தனியார் பள்ளி

குடும்பத்துடன் ஒன்றாக
இருப்பதோ
அகதிகள் முகாமில்

மழை வந்தாலே
பாத்திரங்கள் பணியிலே
ஒழுகும் கூரை

கால் உடைபடும்போதும்
சிரித்த முகத்துடனே
குழந்தை கையில் பொம்மை

மாறுவேடப் போட்டி
முதல் பரிசு
கண்ணன் வேடத்தில் கபீர்

கவிதை முயற்சி
நிரம்பியது
குப்பைத்தொட்டி

பேச்சு போட்டியில்
முதலாம் பரிசு
ஊமையாய் தந்தை

பிடிக்கச் சென்றவன்
பிடிபட்டு
சிறையில் மீனவன்

புராதன சிவன் கோவில்
சீரமைப்பு பணியோ
பீட்டர் தலைமையில்

சுமையை ஏற்றி
வழியனுப்பி வைத்தாள்
பள்ளிக்கு மகளை



- ச. நந்த குமார்




Monday 19 December 2016

ஒற்றை ரோஜா

மகிழ்வுந்தில்
ஜன்னலோரம்
அமர்ந்து
வேடிக்கை
பார்த்ததில்லை

தந்தையின்
தோளில்
அமர்ந்து
செல்லும்
பயணம் எனது

தொலையியக்கி
பொம்மைகள்
எனக்கு
எட்டாத
தொலைவிலேயே

பனங்காய்
வண்டியும்
தீப்பெட்டி ரயிலும்
என் போக்கில்
இயங்கும்

பஞ்சணையில்
அனைத்து
தூங்க
கரடி பொம்மை
தேவையில்லை

தாயை
அணைத்தோ
அவள் முந்தானை
பற்றியோ
தூக்கம் சொர்கமாய்

உணவருந்தும்
மேஜையில்
சுவைக்கொரு
உணவென
சாப்பிட்டதில்லை

அன்பாய்
உருட்டித் தரும்
ஒரு உருளையில்
அறுசுவை
அறிந்தேன்

விலை உயர்
ஆடைகள்
விரும்பிய
வண்ணங்களில்
வேண்டியதில்லை

தாய்வாசம்
பரவிய, அவள்
சீலையில் பிறந்த
பாவாடை சட்டையே
போதும்

தங்கம் வெள்ளி
வைரத்தில்
அணிகள்
அழகு சேர்க்க
அவசியமில்லை

கண்ணாடி வளை
கருப்புமணியுடன்
முகம் மலரும்
புன்னகையுமே
பேரழகு

வெளிநாட்டு
புல்வெளியும்
வீட்டிற்குள்
நீரூற்றும்
அழகெனின்

என்குப்பையில்
பூத்த
ஒற்றை ரோஜா
அதற்கு
நிகர்

வீடெங்கும்
தேடினும்
சிரித்தபடி
கிடப்பதோ
குபேரன் மட்டுமே

சிலந்தி பல்லி
ஆடு கோழி
ஒன்று விடாது
குடும்பமாய்
மகிழ்ச்சியுடன்.



Thursday 15 December 2016

சும்மா... சில வரிகள்...

வெட்டிய கொய்யா
பறித்த நெல்லி
உடைத்த கரும்பென
அன்று முதலே
பெரிய பங்கை
சிறியவனுக்கு
விட்டுக்கொடுத்த
பாசக்காரன்
பிரித்த பாகத்தில்
கூடுதலாய் ஓரடி
தம்பிக்கு போனதென
நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்து.


#siblings #dispute #land #property #case #court


இருசக்கர
வாகனத்தில்
தனியே
போகையிலே,
பள்ளி முடிந்து
வீடு திரும்பும்
பிஞ்சு கால்களை
ஏற்றிக்கொண்டால்,
இருக்கையும்
அழகாகும்
பயணமும்
பயனாகும்.



அதிநவீனத்தால்

அடுக்கலை
அமைத்து
நட்சத்திர
உணவகத்தில்
மண்பானை சோறு...



தனியே
சென்று
இரு குவளை
பெற்று,
பசித்திருக்கும்
பெரியவருக்கு
கொடுத்துக்
குடித்தால்,
தேனீர்
சுவையாகும்
மகிழ்ச்சி
இரண்டாகும்.



புழுக்கம்
***************
இருவழிச்சாலையில்
அரை மணிக்கொரு பேருந்தும்
இருக்கைகளுடன் நிறுத்தம்
என வசதிகள் இருந்தும்
புழுங்கித்தான் கிடக்கிறது மனம்

இருவருடம் முன்பிருந்த
ஒரு வழிப்பாதையும்
நாளுக்கிரு சிற்றுந்தென
அரசமரத்தடி நிறுத்தமே
குளுமையாய் இருந்ததால்.






Wednesday 14 December 2016

அடுப்பு


சுள்ளிக் காட்டில்
குத்திய முள்ளும்
விறகு வெட்டையில்
ஏறிய சில்லும்

அடுப்பு எரிந்திட
அரிசி பொங்கிட
பட்ட வலிகள்
ஆயிரம் சொல்லும்

விறகினை பிளக்கும்
வியர்வைத் துளிகள்
கண்களில் கலக்கும்
சாம்பல் துகள்கள்

விரைவாய் விறகும்
பற்று வதற்கு
மண்ணெண்ணெய் ஒரு
சிறுமூடி அளவு

எரியும் விறகின்
துக்கம் காட்ட
கரியாய் நிற்கும்
அடுக்களை சுவரும்

பத்து பாத்திரம்
தேய்ப்பதற்கு அடுப்பின்
ஒரு கைப்பிடி
சாம்பல் உதவும்

குப்பை மேட்டில்
கொட்டும் சாம்பலில்
பசளைக் கீரையும்
பசுமையாய் வளரும்

தகதக கனலை
தட்டி எழுப்ப
ஊது குழலின்
சத்தமே போதும்

திருஷ்டி கழிக்கும்
ஒவ்வொரு முறையும்
அடுப்பின் சத்தம்
ஆறுதல் தருமே

கத்திரி வெயிலில்
அடுப்பும் சுடுமே
மார்கழி வந்தால்
அதுவே இதமே

அனலின் மேலே
பானை இல்லையேல்
பூனையும் துயிலும்
அடுப்பின் உள்ளே

சாணம் அணிந்து
கோலம் ஏந்தி
புன்னகை சிந்தும்
பழைய அடுப்பே

நவீன உலகில்
பழைய நினைவிற்கு
அழைத்துச் செல்லும்
அற்புத படைப்பே


Monday 12 December 2016

புயல்

வழியணுப்பி
வந்தபின் தான்
வானொலியும்
அறிவித்தது

அடுத்த இரு
நாளிற்கு
அபாயம்
கடலில் என்று

தொடர்பு
எல்லையை
தாண்டிச்
சென்றதனால்

கைப்பேசி
முயற்சியும்
கைவிட்டு
போனது

புயலும்
திசை திரும்ப
இறுதி
முயற்சியாய்

செய்தி
பொய்யாக
தெய்வத்திற்கு
விண்ணப்பம்

ஆத்தாளும்
கடைசியாய்
செவிசாய்க்க
மறுத்துவிட

வலை வீசும்
வாழ்க்கையை
புயல் வீசி
முடித்ததே.

கரை ஒதுங்கி
இருந்தாலும்
கடைசியாய்
பார்த்திருப்பேன்

கிடைக்காமலே
போனதால்
கிடந்திங்கு
தவிக்கிறேன்

உயிர் தின்னும்
கடல் தாயே
என்னுயிரும்
எடுத்துக்கொள்

இரு உயிரை
கரை சேர்க்க
உன்பிழையை
திருத்திக்கொள்

கடலே நீ
கொண்டுள்ள
தண்ணீர் தான்
போதாதா

கூடுதலாய்
என்னுடைய
கண்ணீரும்
தேவையா

ஈடில்லா
இழப்பிற்கு
இழப்பீடு
அறிவிப்பாம்

பிணம் தின்னும்
கழுககளே
அதையும் தின்று
தீர்க்கட்டும்

தோன்றிய
புயலதுவும்
இருநாளில்
கரைசேறும்

சேதமோ
என் வாழ்வில்
கடைசிவரை
இருந்திடும்.




#காற்று #புயல் #மழை #வாழ்க்கை

கத்திரி வெயிலில்
சற்று காற்றடிக்காதா?
புழுங்கிய மனங்களின்
ஒட்டுமொத்த வேண்டுதலும்
தாமதமாய் பலித்து
ஒரே நாளில்
வந்த புயல் - வரமா?


**********************************************************************************************************************************

கூரை ஒழுகுதே 
ஒருவரின் அழுகை,
வானம் தான் 
கூரையே,
இன்னொருவர் 
கவலை.


**********************************************************************************************************************************

பிரச்சனைப் புயலை 
தினமும் பார்ப்பவருக்கு
வந்த புயலோ, ஒரு
பிரச்சனை இல்லை..


**********************************************************************************************************************************

புயல் காற்றிலும் 
அணையாதெரியும்
தீபம்
மழலையின் சிரிப்பு


**********************************************************************************************************************************

கட்டுமரம் கவிழ்ந்து 
தந்தை தொலைந்த
சேதி தெரியாமல்,
காகிதக் கப்பலுடன்
தேங்கிய நீரருகே.


**********************************************************************************************************************************

"பொழுது போக போது
விளக்கேத்துமா"
தாயின் குரலுக்கு
செவி சாய்த்தாள்
செல்லமகள்.
கார்த்திகைக்காக அல்ல
காரிருள் போக.
விளக்கினால் ஒளி
காணும் வீடுகளும்
உள்ளன.








Saturday 10 December 2016

சாரல்

மரத்தின் கரங்கள்
முகிலினை வருட
புவி அகம் குளிர
பொழிந்தது மழையாம்
#மழை

*********************************************************************************

பத்து மைல் 
தள்ளி
ஒன்பது இருந்ததால்
எட்டாமல் போனது
எட்டோடு முடிந்தது.
#பெண்கல்வி


*********************************************************************************

பல மைல்
பயணம்
பணிக்காய்
மேற்கொண்டு,
பயனின்றி
பரிதாபமாய்
பசியுடன்
பரிதவித்து.
#தேனீ

*********************************************************************************

கொள்ளளவு
தாண்டி
கரைபுரண்டு
அந்நாளில்
கொல்லப்பட்டு
கொள்ளைபோய்
துளியுமின்றி
இந்நாளில்
#காவிரி

*********************************************************************************

ஜாதி பேதம்
இவன் என்றும்
பார்ப்பதில்லை,
ரத்த வெறியன்
அது ஏனோ
தெரியவில்லை.
#கொசு

*********************************************************************************

புறப்பட்ட 
நான்கு கப்பலுமே
எதிர்பாராதவிதமாய்
தண்ணீரில் மூழ்க
வருத்தத்தில் சிறுவன்
#காகிதகப்பல்

*********************************************************************************

அந்த பெருமாள்
அருள்ல தான் 
அவ வீட்ல 
அடுப்பெரியுதாம்.
வைகாசி மாச 
திருவிழால
வளையல் கடை
வெச்சிருத
வள்ளியம்மை
நெனச்சிகிட்டா

#அருள்

Friday 9 December 2016

பெண்ணெனும் பேராண்மை

மூன்றும் பெண்ணென
விட்டுச் சென்றவனை
எண்ணி வருந்தாது
விழிகள் ஒழுகாது

நெஞ்சில் உரத்துடனே
உழைக்கும் கரத்துடனே
பள்ளி அனுப்பிவிட்டு
சுள்ளிஎடுக்க சென்றாள்

மூன்று வேலையுமே
மூன்று வயிற்றையுமே
முழுதாய் நிரப்பிவிட
மெழுகாய் உருகினாளே

விட்டு ஒதுங்கியதில்
ஆண்மை துளியுமில்லை
கட்டி அணைத்ததுவோ
பெண்ணெனும் பேராண்மை


Thursday 8 December 2016

ஊடகங்கள்...

முதல் பக்கம் 
நிரப்பும் முனைப்பு
மக்கள் பக்கம்
துளியும் இல்லை..

*******************************************************************

செய்திகேட்டு 
மாரடைப்பாம்,
கொலையாளி
ஊடகமே...


*******************************************************************

பரபரப்பிற்க்காய்
பற்ற வைத்தால்
எரிவதென்னவோ
அரசு பேருந்து தான்...!!!


*********************************************************************



சூழ்ச்சி வஞ்சம் வீழ்ச்சி

உயிர் நீத்த 
உடல் வைத்து
நாடகம்
அது செய்து
பேரங்கள் பேசி 
வேண்டியவை
பெற்று
வியூகம்
அமைத்து
காரியங்கள்
முடிந்த பின்
காட்ச்சிக்காய்
ஒரு ஊர்வலம்
பேருக்காய்
மணிமண்டபம்


********************************************************************************************************************************



*********************************************************************************

வஞ்சனை 
நெஞ்சங்கள் 
நஞ்சென
எண்ணங்கள்
தற்சமயம்
தலைதூக்கினும்
நிச்சயமாய்
தலைவீழுமே...




துளிகள்

என் முகநூல் பதிவுகளில் இருந்து சில துளிகள்...


























Monday 5 December 2016

விடியல் நோக்கி....

சானம் தெளித்து
கோலம் போட்டு,
தீவனம் வைத்து
பாலைக் கரந்து,
அடுப்பை மூட்டி
சோறு சமைத்து,
அழுக்குத் துணியை
அடித்துத் துவைத்து,
பத்து பாத்திரம்
துலக்கி வைத்து,
வீட்டை அடுக்கி
அழகு படுத்தி,
விளக்கை ஏற்றி
விடியல் நோக்கி..

பொழுதும் விடிந்ததாம்
மாற்றம் நிகழ்ந்ததாம்,
கோலம் முடித்து
தாளம் படித்து,
பாலைக் கரந்து
பாடம் பயின்று,
பண்டம் சமைத்து
பணிக்கு கிளம்பி,
துவைத்து உலர்த்தி
கவிதை இயற்றி,
வீட்டை அடுக்கி
ஓவியம் பழகி,
விளக்கினை ஏற்றி
இருட்டிலேயே இன்றும்.



#women #womenempowerment #freedom #struggleathome #work

Friday 2 December 2016

மழை

காரை வீட்டவன்
கண்ணாடி வழியே
ரசிக்கலாம் மழையினை
தேனீருடனே..
ஒழுகும் நீரை
ஏந்திப் பிடிக்க
ஒடுங்கிய பாத்திரம்
ஓலை வீட்டில்..
உரப்பை ஒன்றை
தலைக்கு விரித்து
கூரை தேடி
நகரும் கால்கள்
வானும் மழையும்
ஒன்றே எனினும்
காணும் கண்கள்
வெவ்வேறன்றோ?


புயல்

வானொலி தொலைக்காட்சி செய்தித்தாள் மட்டுமின்றி, முகநூல், ட்விட்டர், என இணையத்திலும், வீட்டருகே தேநீர் கடை வாசலிலும் பரவிக் கிடந்தது புயலின் செய்தி. பள்ளி கல்லூரி விடுமுறை எனும் செய்தி வருடந்தோறும் வரி மாறா ஒரு செய்தி. இருநாள் இருக்குமென ஒரு சாரார் பேச, மறுநாளே போகும் என எதிர்வாதம் நடக்க, கடும் சேதம் வருமாம் தெரிந்தார் போல் சொல்ல, கடைசியில் கொசு தூறல் தான் மிஞ்சுமென அனுபவத்தில் மொழிய, விவாதங்களுக்கு பஞ்சமில்லை. எச்சரிக்கை மணி கடலோரம் ஒலிக்க, மீனவர்கள் வேலைக்கு இரு நாள் தடை விதிக்க, குடிசையின் கூரைகள் இடம் பெயர்ந்து போகுமோ? குடிசையே தடம் தெரியாது உருமாறிப் போகுமோ? பல்லப் பகுதியினை வெள்ளம் தான் விழுங்குமோ உடைமைகளை எல்லாம் அடித்துத் தான் செல்லுமோ நீரின் மிகுதியால் பயிரெல்லாம் மூழ்குமோ விரிசல் சுவர் இடிந்து உயிர்கள் தான் பிரியுமோ ஒருபுறம் பெற்றவள் பிள்ளையை இழக்க மறுபுறம் பிள்ளைகள் தகப்பனை தொலைக்க விதவை கோலங்கள் மரண ஓலங்கள் புயலின் வேகம் பொறுத்து, மாற்றமோ உயிரிழந்தோர் எண்ணிக்கையில் மட்டும் புயல் கரையை கடந்ததும் தண்ணீர் எல்லாம் வடிந்ததும் பேச்சுக்காய் ஒரு மேற்பார்வை பயணம் ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி அட்டவணையில். கஞ்சிக்கு வழியின்றி எஞ்சி இருப்போரை முகமை எம் பெயரில் ஊறுக்காய் ஒரு ஒப்பனை. மீட்புப் பணியென்று காவலும் ராணுவமும் மூழ்கி அழுகிய சடலங்கள் தேடும் படலங்கள். நிவாரண நிதி என்று சமூக ஆர்வலர்கள், ஊரெல்லாம் உண்டியல் குலுக்கும் காட்சிகளும், சேரும் காசெல்லாம் சேரிடம் சேராமல், இடையிலே பறிபோகும் ஈனச் செயல்களும், வார்த்தை மாறாமல் வரிசை மாறாமல், வருடந்தோறும் நிகழ்பவையே. நடக்கும் வக்கிரத்தை பிணம் தின்னும் போக்கினை, கண்டும் காணாமல் அமைதி காப்பதையே, புயலுக்கு பின் அமைதி என சான்றோர் அந்நாளே முன்னோக்கி சொன்னாரோ, யாரறிவார் நானறியேன்.


உறுத்தல்

கொன்று குவித்த
உடல்களின் மேலே
மேடை அமைத்து
வீரப்பதக்கம்
கரகோஷத்துடன்
காதில் ஒலித்தது
அண்டை நாட்டின்
ஒப்பாரிச் சத்தமும்.


**********************************************************************************************************************************

பார்வையற்ற 
பாட்டியை
பார்த்தும் 
பார்க்காததுபோல்
பரபரப்பாய் 
நடந்து செல்லும்
ஊனமுற்ற உள்ளங்கள்





**********************************************************************************************************************************

துளைத்த அம்பும்
இரக்கமற்றதே
உயிரின்
பாதியை மட்டும்
எடுத்துக்கொண்டதால்





**********************************************************************************************************************************

பசியென ஒருவன்
பக்கத்தில் 
நிற்கையில்
சட்டைப்பையைத்
தடவினால்,
உள்ளே
இருந்ததோ
வெறும்
பழைய ஐநூறு.




**********************************************************************************************************************************


சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...