Monday 19 December 2016

ஒற்றை ரோஜா

மகிழ்வுந்தில்
ஜன்னலோரம்
அமர்ந்து
வேடிக்கை
பார்த்ததில்லை

தந்தையின்
தோளில்
அமர்ந்து
செல்லும்
பயணம் எனது

தொலையியக்கி
பொம்மைகள்
எனக்கு
எட்டாத
தொலைவிலேயே

பனங்காய்
வண்டியும்
தீப்பெட்டி ரயிலும்
என் போக்கில்
இயங்கும்

பஞ்சணையில்
அனைத்து
தூங்க
கரடி பொம்மை
தேவையில்லை

தாயை
அணைத்தோ
அவள் முந்தானை
பற்றியோ
தூக்கம் சொர்கமாய்

உணவருந்தும்
மேஜையில்
சுவைக்கொரு
உணவென
சாப்பிட்டதில்லை

அன்பாய்
உருட்டித் தரும்
ஒரு உருளையில்
அறுசுவை
அறிந்தேன்

விலை உயர்
ஆடைகள்
விரும்பிய
வண்ணங்களில்
வேண்டியதில்லை

தாய்வாசம்
பரவிய, அவள்
சீலையில் பிறந்த
பாவாடை சட்டையே
போதும்

தங்கம் வெள்ளி
வைரத்தில்
அணிகள்
அழகு சேர்க்க
அவசியமில்லை

கண்ணாடி வளை
கருப்புமணியுடன்
முகம் மலரும்
புன்னகையுமே
பேரழகு

வெளிநாட்டு
புல்வெளியும்
வீட்டிற்குள்
நீரூற்றும்
அழகெனின்

என்குப்பையில்
பூத்த
ஒற்றை ரோஜா
அதற்கு
நிகர்

வீடெங்கும்
தேடினும்
சிரித்தபடி
கிடப்பதோ
குபேரன் மட்டுமே

சிலந்தி பல்லி
ஆடு கோழி
ஒன்று விடாது
குடும்பமாய்
மகிழ்ச்சியுடன்.



3 comments:

  1. இந்த கவிதை ஒற்றை ரோஜா அல்ல ரோஜாக்கூட்டம்......

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...