Friday 2 December 2016

புயல்

வானொலி தொலைக்காட்சி செய்தித்தாள் மட்டுமின்றி, முகநூல், ட்விட்டர், என இணையத்திலும், வீட்டருகே தேநீர் கடை வாசலிலும் பரவிக் கிடந்தது புயலின் செய்தி. பள்ளி கல்லூரி விடுமுறை எனும் செய்தி வருடந்தோறும் வரி மாறா ஒரு செய்தி. இருநாள் இருக்குமென ஒரு சாரார் பேச, மறுநாளே போகும் என எதிர்வாதம் நடக்க, கடும் சேதம் வருமாம் தெரிந்தார் போல் சொல்ல, கடைசியில் கொசு தூறல் தான் மிஞ்சுமென அனுபவத்தில் மொழிய, விவாதங்களுக்கு பஞ்சமில்லை. எச்சரிக்கை மணி கடலோரம் ஒலிக்க, மீனவர்கள் வேலைக்கு இரு நாள் தடை விதிக்க, குடிசையின் கூரைகள் இடம் பெயர்ந்து போகுமோ? குடிசையே தடம் தெரியாது உருமாறிப் போகுமோ? பல்லப் பகுதியினை வெள்ளம் தான் விழுங்குமோ உடைமைகளை எல்லாம் அடித்துத் தான் செல்லுமோ நீரின் மிகுதியால் பயிரெல்லாம் மூழ்குமோ விரிசல் சுவர் இடிந்து உயிர்கள் தான் பிரியுமோ ஒருபுறம் பெற்றவள் பிள்ளையை இழக்க மறுபுறம் பிள்ளைகள் தகப்பனை தொலைக்க விதவை கோலங்கள் மரண ஓலங்கள் புயலின் வேகம் பொறுத்து, மாற்றமோ உயிரிழந்தோர் எண்ணிக்கையில் மட்டும் புயல் கரையை கடந்ததும் தண்ணீர் எல்லாம் வடிந்ததும் பேச்சுக்காய் ஒரு மேற்பார்வை பயணம் ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி அட்டவணையில். கஞ்சிக்கு வழியின்றி எஞ்சி இருப்போரை முகமை எம் பெயரில் ஊறுக்காய் ஒரு ஒப்பனை. மீட்புப் பணியென்று காவலும் ராணுவமும் மூழ்கி அழுகிய சடலங்கள் தேடும் படலங்கள். நிவாரண நிதி என்று சமூக ஆர்வலர்கள், ஊரெல்லாம் உண்டியல் குலுக்கும் காட்சிகளும், சேரும் காசெல்லாம் சேரிடம் சேராமல், இடையிலே பறிபோகும் ஈனச் செயல்களும், வார்த்தை மாறாமல் வரிசை மாறாமல், வருடந்தோறும் நிகழ்பவையே. நடக்கும் வக்கிரத்தை பிணம் தின்னும் போக்கினை, கண்டும் காணாமல் அமைதி காப்பதையே, புயலுக்கு பின் அமைதி என சான்றோர் அந்நாளே முன்னோக்கி சொன்னாரோ, யாரறிவார் நானறியேன்.


3 comments:

  1. Orupuram petraval pillai ilaka,Vidhavai kolam,maranaolangal... miga arumai ... manathai ganamakkum varigal

    ReplyDelete
  2. புயலின் கோரவம் கண் முன்னே காட்சியாய்

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...