Friday 30 December 2016

சுமை

வெண்பட்டு நரையும்
வெள்ளியில் ஒரு காப்பும்
அதிர்ந்து பேசாத
ஒரு முதிர்ந்த அன்னை
நலிந்த தேகத்தில் அவளோ
ஆரோக்கிய மேரி.

அண்டை வீட்டில் இருப்பவள்
முகவரியோ அன்பும் பண்பும்
நேற்றய நினைவுகளில்
இன்று நாள் கடத்துபவள்.
இறுதியை எதிர்நோக்கி
இன்முகத்துடன் இருப்பவள்.

எங்கள் பகுதி பொடுசுகளெல்லாம்
தொலைக்காட்சி பார்ப்பது
அவள் வீட்டிலே தான்
குழந்தைகள் கார்ட்டூன் பார்க்க
குழந்தைகளை பார்த்தபடியே
மணிக்கணக்காய் இவள் இருப்பாள்

பல்லாயிரம் கதைகள் சுமக்கும்
அட்சய பாத்திரம் அவள்
ஒரு கதையை மறுமுறை
அவள் சொல்லி கேட்டதில்லை
அவள் வாய் பிறக்கும் கதைகளுக்கு
வாயடைத்து பிள்ளைகள் இருக்கும்

எங்கள் பகுதி பிள்ளைகளுக்கு
டிசம்பர் வந்து விட்டால்
பரிசுகள் வழங்குவதோ
கிறிஸ்துமஸ் பாட்டி தான்
கொடுப்பதன் சந்தோஷத்தை
அவள் முகம் பார்த்து படிக்கலாம்

அவள் வைக்கும் குழம்பில் மிதக்க
செத்த மீனும் தவம் கெடக்கும்
தேங்காய் பால் சேர்த்து சமைத்த
கேரளத்து மனம் மண்டும்
பக்கத்தூரை பந்திக்கு அழைக்கும்
பிரமாதம் அவளது சமையல்

சியாட்டில்லோ சிட்னியோ என்றாவது
அவள் கைப்பேசியில் தோன்றி மறையும்
கரிசனமா பெற்றகடனா குறிப்பில்லை
நாள் தோரும் பிராத்தனையில்
இவள் ஜெபிக்கும் மந்திரங்கள்
அவர்களின் நலம் வேண்டியே

வழிபாட்டின் இறுதியிலே இமைகள்
விரிகையிலே நீர்த்துளி வெளிப்படும்
ஆழ்மனதின் துயரத்தை தாளாத
துக்கத்தைத் தூர்வாரிக் கொணரும்
அந்த ஒரு துளி நீரின் பாரம்
கர்த்தருக்கே பெரும் சுமையாய்



No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...