Monday 26 December 2016

ஹைக்கூ...

உண்டியல் திருடன்
அறநிலையத்துறை
மந்திரியாய்

புயல் காற்றிலும்
அணையாதெரியும் தீபம்
மழலையின் சிரிப்பு

ஒவ்வொரு இரவும் காண்கிறாள்
அவள் ஒழுக்கம் தவறும்
ஆண்களை.

எரியும் விறகின் துக்கமோ
கறியை பூசி நிற்கும்
அடுக்களை சுவர்கள்

குழந்தையை அழ வைக்க
உற்றாரும் உறவினரும்
காதணி விழா

கல்விக் கனவிற்கு
சவப்பெட்டியோ
இந்த தீப்பெட்டி

அரிசி படைத்தவனுக்கு
கைமாறாய் வாய்க்கரிசி
விவசாயி தற்கொலை

கல் அடுக்கி
கட்டிடம் அமைத்து
கசியும் வீட்டில் மேஸ்திரி

பட்டுத்துணி நெசவாளி
மானம் காக்க
கோவணத்துடன்

ஆனை விலையில்
ஆனா ஆவன்னா
தனியார் பள்ளி

குடும்பத்துடன் ஒன்றாக
இருப்பதோ
அகதிகள் முகாமில்

மழை வந்தாலே
பாத்திரங்கள் பணியிலே
ஒழுகும் கூரை

கால் உடைபடும்போதும்
சிரித்த முகத்துடனே
குழந்தை கையில் பொம்மை

மாறுவேடப் போட்டி
முதல் பரிசு
கண்ணன் வேடத்தில் கபீர்

கவிதை முயற்சி
நிரம்பியது
குப்பைத்தொட்டி

பேச்சு போட்டியில்
முதலாம் பரிசு
ஊமையாய் தந்தை

பிடிக்கச் சென்றவன்
பிடிபட்டு
சிறையில் மீனவன்

புராதன சிவன் கோவில்
சீரமைப்பு பணியோ
பீட்டர் தலைமையில்

சுமையை ஏற்றி
வழியனுப்பி வைத்தாள்
பள்ளிக்கு மகளை



- ச. நந்த குமார்




No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...